Posts

Showing posts from February, 2015

தனுமை

Image
                                                                            தனுமை                                                -  வண்ணதாசன்                   இதில்தான் தனு போகிறாள். பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந்தத்தை அவன் இழந்து போனதாகவே தோன்றியது. தனு அங்கேயே வீட்டுப்பக்கம் ஏறிக்கொள்வாள், இறங்கிக்கொள்வாள். ஒரு வகையில் மகிழ்ச்சி. தன்னுடைய பலகீனமான காலை இழுத்து இழுத்து, ஒரு அழகான சோகமாக அவள் இத்தனை தூரமும் நடந்து வர வேண்டும். முன்புபோல் இவனுடைய காலேஜ் வாசலோடு நின்று போகிற டவுன் பஸ்ஸிற்காக, அவளுடைய குறையின் தாழ்வுடன் எல்லோருடனும் காத்திருக்க வேண்டாம். இனிமேல் நேருக்கு நேர் பார்க்க முடியாது. இந