தனுமை
தனுமை
- வண்ணதாசன்
இதில்தான் தனு போகிறாள்.
பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந்தத்தை அவன் இழந்து போனதாகவே தோன்றியது. தனு அங்கேயேவீட்டுப்பக்கம் ஏறிக்கொள்வாள், இறங்கிக்கொள்வாள்.
ஒரு வகையில் மகிழ்ச்சி. தன்னுடைய பலகீனமான காலை இழுத்து இழுத்து, ஒரு அழகான சோகமாக அவள் இத்தனை தூரமும் நடந்து வர வேண்டும். முன்புபோல் இவனுடைய காலேஜ் வாசலோடு நின்று போகிற டவுன் பஸ்ஸிற்காக, அவளுடைய குறையின் தாழ்வுடன் எல்லோருடனும் காத்திருக்க வேண்டாம். இனிமேல் நேருக்கு நேர் பார்க்க முடியாது.
இந்த ஆர்பனேஜ் மர நிழல்களுக்குக் கையில் புஸ்தகத்துடன் ஞானப்பன் இனி வர வேண்டிய அவசியமில்லை. பழையபடி தெற்கே தள்ளி, உடைமரக் காடுகளுக்குள்ளே போய் விடலாம். எங்கே பார்த்தாலும் மணல், எங்கே பார்த்தாலும் முள். விசுக் விசுக்கென்று ‘சில்லாட்டான்’ ஓடும். அல்லது பருத்து வளர்ந்து ஓணான் ஆகத் தலையாட்டும். ஆளற்ற தனிமையில் அஸ்தமவானம் கீழிறங்கிச் சிவக்கும். லட்சக்கணக்கான மனிதர்கள் புதையுண்டதுபோல் கைவைத்த இடமெல்லாம் எலும்பு முள்ளும் முண்டுமாக அகப்படும். கருக்கு மட்டையை வேலியாக நட்டு, உள்ளே போட்டிருக்கிற குடிசையிலிருந்து கருப்பட்டி காய்ச்சுகிற வாடை வரும். கோழி மேயும். நத்தைக்கூடுகள் நெல்லிகாய் நெல்லிக்காயாக அப்பி இருக்கிற முள்ளை வெட்டி இழுத்துக்கொண்டு போகிறவளின் உடம்பு, பாடத்தை விட்டு விலக்கும். பலதடவை பேச்சுக் கொடுத்தபிறகு சிரிக்கிறதற்கு மட்டும் தழைந்திருந்த ஒருத்தியின் கருத்த கொலுசுக் கால்கள் மண்ணை அரக்கி அரக்கி நடக்கும்.
நடக்க முடியாமல் நடக்கிற தனுவுக்கு ஆர்பனேஜின் வழியாகக் குறுக்காகச் சென்றால் பஸ் நிற்கிற காலேஜ் வாசலுக்குப் போய்விடலாம் என்பது தாமதமாகத்தான் தெரிந்திருக்கும். அவள் பெயர் தெரிந்தது அன்றுதான். ’தனு! இந்த வழியாப் போயிரலாமாடி?’ என்று எப்போதும் கூடச்செல்கிற பையன் காட்டினான். அவள் தம்பி, யூனிபாரம் அணிந்த அவளின் சின்ன வழித்துணை.
ஞானப்பன் யதேச்சையாக அன்று ஆர்பனேஜிற்குப் படிக்க வந்திருந்தான். படித்து முடித்துவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்புகிற வேளையில் பீடி தேவையாக இருந்தது. கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தான். சின்ன வேப்பங்கன்றுக்குக் கீழே டயர் போட்ட மொட்டைவண்டியின் நோக்காலில் ’உட்கார்ந்து, பள்ளிக்கூடக்கட்டிடத்திற்கு முன்னால் உள்ள கொடிக்கம்பத்தைப் பார்ப்பது போல் பார்வை.
வட்டமாகக் குறுக்குச் செங்கல் பதித்து உள்ள பீநாறிப்பூச்செடி நட்டிருந்தார்கள். அந்த பூவும் செடியும் அவனுடைய ஊருக்கு இறங்க வேண்டிய ரயில்வே ஸ்டேஷனிலும் சிறு வயதிலிருந்து உண்டு. கல் வாழைகள் அப்போது வந்திருக்கவில்லை. ஊர் ஞாபகம், இரவில் இறங்குகையில் நிலா வெளிச்சத்தில் கோடாக மினுங்குகிற குளிர்ந்த தண்டவாளம், லாந்தல் சத்திரம், மினுக்கட்டாம் பூச்சிகள் எல்லாம் ஒவ்வொரு பூவிலும் தெரிந்துகொண்டிருந்த போதுதான் - ‘தனு! இந்த வழியாப் போயிரலாமாடி?’ என்ற சத்தம்.
கைலியை இறக்கிவிட்டுக்கொண்டு, நோக்காலில் இருந்து இறங்கினான். இறுகிக் கட்டின போச்சக்கயிறு கீச்சென்று முனகியது. தொழுவங்களில் மூங்கில் தடியினால் தண்டயம் போட்டிருப்பது போல வண்டி போகவர மட்டுமே புழங்குகிற அந்தத் தடுப்புக்கு அப்புறம் தனுவும் அவள் தம்பியும் நின்று கொண்டிருக்கிறார்கள். தம்பி சடக்கென்று காலைத் தவ்வலாகப் போட்டுக் குனிந்து உட்பக்கம் வந்துவிட, ஒரே ஒரு வினாடி அவள் விசாலமான தனிமையில் நின்றாள். பின்னால் பொருத்தமற்ற பின்னணியாய்ப் பாலையான மணல்விரிப்பும், உடைமரங்களும், உடைமரம் பூத்ததுபோல மெல்லிசான மணமாக இவள், தனு.
ஞானப்பன் ஒரு ராஜவாயிலைத் திறப்பதுபோல மென்மையாக மூங்கிலை உருவி, அவளை வரவிட்டு ஒதுங்கினான். உள் ஒடுங்கின, பரபரப்பில் மூங்கில் தவறி மண்ணில் இறங்கி கரையான்கள் உதிர்ந்தன. தனுவின் தம்பி ‘தாங்ஸ்’ - சொன்னான். தனு ‘உஸ்’ என்று அவனை அடக்கி இழுத்துப்போனாள். ஒரு சிறுமியைப்போல மெலிந்திருந்த தனு தூரம் போகப்போக நேர்கோடாக ஆரம்பிக்கும் ஆர்பனேஜின் முன்பக்கத்து இரண்டு ஓரச்செடிகளின் சினியா மலர்களின் சோகைச் சிவப்புக்கும் கேந்தியின் மஞ்சளுக்கும் முதல் முதலாக உயிர் வந்தன. அழகாகப் பட்டன.
எதிரே டெய்ஸி வாத்திச்சி வந்துகொண்டிருந்தாள். கன்னங்களில் பருவில்லாமல் இருந்ததால் அவளுக்கு இந்த மதமதப்பு இருக்காது. கல்யாணம் ஆகாததால் மீறி நிற்கிற உடம்பு. ஒரு கறுப்புக்குதிரை மாதிரி, நுணுக்கமான வீச்சுடன் அவள் பார்த்துவிட்டுச் செல்லும்போது ஞானப்பனுக்கு உடம்பு அதிரும். இன்று குறைவாக, இவனைப்போல இங்கே படிக்க வருகிற வேறு சிலருக்கும் அவளுடைய திரேகத்தின் முறுக்கம் ரசித்தது.
ஞானப்பனுக்கு தனுவின் நினைவு மாத்திரம் ஒரு நீர்ப்பூவைப் போல அலம்பி அலம்பி அவள் முகம் நிற்க மற்றவையெல்லாம் நீரோட்டத்தோடு விரைந்து ஒதுங்கின. டெய்ஸி வாத்திச்சி நதியில் மிதந்த செம்பருத்திப் பூவாய், அள்ளுகிற குடத்தில் புகுந்துவிட, விரலை முட்டி முட்டி விலகிக் கொண்டிருக்கிறாள். அவளைப் போன வருஷத்தில் இருந்தே அவனுக்குத் தெரியும்.
ஒரு டிசம்பர் மாதம். ஹார்மோனியம் நடைவண்டி நடையாகக் கேட்டது. பத்துப் பதினைந்து பையன்களின் கூச்சலுக்கு மத்தியில் ஒரு பையன் கொஞ்சம் துணிச்சலாக ஒவ்வொரு பல்லாக அழுத்திக் கொண்டிருந்தான். இடம் ஆரம்பித்து வலம். கண்டமத்தியில் ஆரம்பித்த இடம். இதற்குள் துருத்தியை அமுக்குகிற விரல் மறந்திருக்கும்.ங்ர்ர் என்று பெட்டி கம்மும்போது ஒரு சிரிப்பு. ஞானப்பன் போய் நின்றான். பையன்கள் விலகினார்கள்.
ஞானப்பன் சிரித்தான். அவன் கைப்பழக்கமாக வாசிப்பான். சினிமா பாட்டுவரை. ‘படிங்க சார், படிங்க சார்’ என்று குரல்கள். “என்ன பாட்டுடே படிக்க?” என்று கேட்டுக்கொண்டே அவன் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொய்வாக வாசித்து நிறுத்திவிட்டுக் கேட்டான், “என்ன பாட்டு சொல்லுங்க பார்க்கலாம்?”
“எனக்குத் தெரியும்”
“நாஞ் சொல்லுதேன் ஸார்”
“இந்த நல் உணவை’ - பாட்டு ஸார்”
ஞானப்பனுக்கு கடைசிப் பையன் சொன்னதைக் கேட்டதும் திக்கென்றது. “இந்த நல்உணவைத் தந்த நம் இறைவனை வணங்குவோம்” என்று காலையில் அலுமினியத் தட்டும் தம்ளருமாக உட்கார்ந்து கொண்டு, கோதுமை உப்புமாவுக்கும் மக்காச்சோளக் கஞ்சிக்கும் எதிர்பார்த்துப் பாடுகிற ஒரு தாங்க முடியாத காட்சி தெரிந்தது. அனாதைகளை மேலும் மேலும் அனாதைப்படுத்துகிற அந்தப் பாடலை இவன் வாசிப்பில் உடனடியாக உணர்ந்த பையனின் உயிரும் ஜீவனுமற்ற முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஞானப்பனுக்கு வேறு எந்த கிறிஸ்தவ கீதங்களும் நினைவுக்கு வரவில்லை. எல்லா கிறிஸ்தவ கீதங்களும் ஒரே ராக வடிவுதான் என்ற நினைப்பை அவனுக்கு உண்டாக்கின. “எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே” பாடலின் முதலிரு வரிகளின் தடத்தையே மீண்டும் மீண்டும் வாசித்தான். பையன்கள் அடுத்த வரிகளைப் பாடினபோது அவனுக்குச் சிலிர்த்தது.
அந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம்பூக்களும் பாடுவதுபோல - வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்ச்சுக்குப்போய் வருகிறவர்களின் புழுதிக்கால்களின் பின்னணிபோல -
பால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்டவேலை செய்கிறவர்கள் பாடுவதுபோல -
வாரத்துக்கு ஒரு நாள் வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுதுகொண்டிருக்கிற பையனின் சோகம்போல -
எந்தச் சத்துக்குறைவாலோ ‘ஒட்டுவாரொட்டி’யாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுணிச் சிரங்கிற்கான பிரார்த்தனைபோல -
கிணற்றடியில் உப்புநீரை இறைத்து இறைத்து ட்ரவுசரைக் கழற்றி வைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களில் எழுதப்பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல்போல -
இரண்டு பைசா ஒன்று பள்ளிக்கூடத்துக் கிணற்றில் விழுந்துவிட, அசுரத்தனமாகத் தண்ணீரை இறைத்து இறைத்து ஏமாந்து கொண்டிருந்த சிறுவர்களின் பம்பரக்கனவுகள் போல....
ஞானப்பன் மேலே வாசிக்க ஓடாமல் நிமிர்ந்தபோது, டெய்ஸி வாத்திச்சி வாசலில் நின்று கொண்டிருந்தாள். பையன்கள் கலைந்து நகர்ந்தார்கள். இவனின் வாசிப்பைப் பாராட்டினாள். வாசலில் கையூன்றிச் சிரித்தாள்.
ஞானப்பனுக்கு ஒரேயடியாக அந்த இடத்தில் அவளை அடித்துத் தள்ளவேண்டும் என்று தோன்றியது.
டெய்ஸி வாத்திச்சியின் பார்வையைப் போலவே, சைக்கிளில் போகிற ஒரு இங்கிலீஷ்காரப் பெண்ணையும் ஞானப்பன் சகித்துக் கொள்ள வேண்டியதிருந்தது. அவளை அநேகமாக லீவு நாட்களில் காலையிலேயே இரண்டு தடவை பார்த்துவிடலாம்.
முதல் ஷிப்டு வேலைக்காகக் கையில் தூக்குச் சட்டியைக் கோத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் போகிற ஜனங்கள். பதநீர் குடிக்கிறவர்கள். முதல் சங்கு ஊதின பிறகு அவசரம் அவசரமாக வடையை ஊறுகாய்த் தடையை வாங்கிக்கொண்டு போகிறவர்கள். இராத்திரி ஷிப்ட் முடிந்து பஞ்சும் தலையுமாக டீக்கடையில் பேப்பர் படிப்பவர்கள்; அவர்களின் சைக்கிளில் தொங்குகிற தூக்குச் சட்டிகள்; இவர்களுக்கு மத்தியில் இந்தப் பெண்ணின் குடும்பமே சைக்கிளில் சர்ச்சுக்குப் போகும். அப்பா, அம்மா எல்லாருமே ஒவ்வொரு சைக்கிளில். ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அமைப்புஅலை மீறின அவளுடைய பாரமான உடம்பும் பெருந்தொடையும் பிதுங்க அவள் செல்லும் போதெல்லாம், அவன் அநாவசியமான ஒரு அருவருப்பையடைய நேர்ந்திருக்கிறது.
கொஞ்ச நேரத்தில் இதையெல்லாம் கழுவி விடுவதுபோல் தனு வருவாள். அந்த தனுவை இனிமேல் ஜாஸ்தி பார்க்க முடியாது. மறுபடியும் சிகரெட்டிலிருந்து பீடிக்கு மாறி கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு அலைய வேண்டியதுதான். ஆர்பனேஜ், தனுவின் ஒரு காலத்துப் பாதையாக இருந்தது என்பதால், இங்கு வராமலும் இனி முடியாது. இதற்கு மத்தியில் எதைப் படிக்க?
ஒரு தகர டின்னில், வரிசையாக நிற்கிற வேப்பமரங்களின் பழம் உதிர உதிரப் பொறுக்குகிற பையன்களைக் கூப்பிட்டால் பேசப்போவதில்லை. அவர்களுக்கு ஃபுட்பால் கோல்போஸ்டின் அடையாளமாக நிறுத்தியிருக்கிற பனங்கட்டையில் இருந்துகொண்டு காகங்கள் இரண்டு மூன்றான கொத்தாக இட்ட வேப்பங்கொட்டை எச்சத்தைச் சேகரிக்கிற சந்தோஷம் இவனுடன் பேசுவதில் இருக்காது.
பக்கத்தில், ஊடுசுவருக்கு அந்தப்புறம் கொட்டகைகளில் எரிகிற பிணங்களுக்கும் மண்டுகிற புகைக்கும் சலனமடையாமல், உப்புப் பொதிந்து சிதிலமாகிக் கிடக்கிற மையவாடிக்கு மத்தியில் காடாக வளர்ந்த எருக்கலஞ்செடிகளில் போய் வண்ணத்துப்பூச்சியின் முட்டையும் புழுவும் எடுத்துக்கொண்டிருக்கிற இவர்களிடையில், தனுவும் விலகினபின், எந்த அமைதியில் படிக்க?
மற்ற பையன்களுடன் சேர்ந்து உட்கார்வதுகூட முடியவில்லை. குப்பைக் குழிகளுக்கும் ‘ஐயா’க்களுக்குமான கக்கூஸ்களை ஒட்டிய பகுதிகளிலேயே க்ரா, க்ரா என்று தொண்டையைக் காட்டித் திரிகிற தாராக் கோழிகளை, போவ், போவ், என்று முன்னைப் போலக் கூப்பிடவும் தோன்றவில்லை. ‘ஐயா’க்களைப் போல எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிவிட்டால் போதும் என ஞானப்பனுக்குத் தோன்றியது. அவன் வகுப்பில், கல்லூரியில் இதேபோல வெள்ளை முழுக்கைச் சட்டை, வேஷ்டியுடன் இங்கேயிருந்து படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அனாதைகள் தானா? தனுக்குள் எதிர்ப்படாமல் இருந்த பொழுதைவிடத் தான் இப்போது அனாதையா? ஞானப்பனுக்கு மனதுள் குமைந்து வந்தது.
ஊருக்குப் போக வேண்டும் போலத் தோன்றியது. வயலும் வரப்புமாக விழுந்து கிடக்கிற அப்பாவின் வம்சவாடையை உடம்பில் ஏந்தியிருக்கிற தன்னிடம், நெற்றியில் எலுமிச்சங்காய் அளவு புடைத்திருக்கிற ‘கழலை’ அசையச் சில சமயம் சந்தோஷமாகப் படிப்பு பற்றி விசாரிப்பதும், ‘படிச்சுப் பாட்டத் தொலைச்ச’ என்று அலுத்துக் கொள்வதும் முகம் முகமாகத் தெரிந்தது. எல்லா முகத்திலும் மிஞ்சித் தனி முகமாகி.. தனு முகமாகி...
உருண்டு வந்து கால் பக்கம் விழுந்த பந்தை எடுப்பதற்கு வந்த பையனைத் தடுத்து, பந்தோடு மைதான விளிம்புக்கு வந்து உதைத்தபோது, அது தூரமில்லாமல் உயரமாக எவ்வி, நீலத்தை அண்ணாந்து பார்க்க வைத்துக் கீழிறங்கியது. கீழிறங்கின பின்னும் ஞானப்பனுக்குப் பார்வை நீலமாக நின்றது.
நீலப்பூ. புத்தகங்களுக்கிடையில் வைத்துப் பாடம் பண்ணின நீலமான பூ. சிவப்பான இருந்து ஒரு வேளை நீலமாகிப்போன பூ- அல்லது வெளிறல் மழுங்கி நீலம் கறுத்த பூவொன்று வழியில் கிடக்க, ஞானப்பன் எந்தவிதத் தடயமும் இன்றி அது அவள் உதிர்த்த பூ என மனதில் உறுதி செய்து வைத்திருக்கிறான். அவனுக்கே தெரியும், அந்தப் பூ ஆர்பனேஜ் எல்லைக்குள் ஒதுக்கமாய் முன்பு இருந்து இப்போது இடிந்து தகர்ந்துபோன சர்ச்சின் பின்னால் வளர்ந்திருக்கிற கொடியின் பூ. ஆனாலும் தனு உதிர்த்த பூ.
இடிந்த சர்ச்சின் சுவர்கள் ஞானப்பனுக்கு ஞாபகம் வந்தது. இந்த ஆர்பனேஜ் ஆண்களுக்கு மட்டுமானது என்பதன் அடிப்படையில் எழுதப்பட்ட கொச்சைகள், பெயர்கள், கெட்ட வார்த்தைகள் எல்லாம் கருப்பாகச் சுவரில் சிந்தியிருக்கும். இவன் பார்வையில் இவனுடன் படிக்கிறவர்கள்கூட அதில் புதிதாக எழுதிய கரிப்படங்களும் வரிகளும் உண்டு. டெய்ஸி வாத்திச்சிகூட அப்படியொரு வரிகளில் ஒன்றாக, வேண்டுமென்றே செய்யப்பட்ட எழுத்துப்பிழைகளுடன் சுவரில் அறையப்பட்டிருக்கிறாள்.
புத்தகத்துக்கிடையில் நீலப்பூவைத் தகடாக மலர்த்திப் பார்த்தபடி மூடினான். படிக்க வேண்டும். வேகமாக நிழல் பம்மிக் கொண்டிருந்தது. கிணற்றடியில் முகத்தை அலம்பி, பள்ளிக்கூடத்துப் பின்பக்க வராண்டாச் சுவரில் சாய்ந்துகொண்டு வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தான். மற்ற அமைதியிலிருந்து மீள அவனுக்குச் சத்தம் தேவையாக இருந்தது.
பெரிய ஐயாவுடைய தாராக்கோழிகளின் கேவல் விட்டு விட்டு மங்கியது. மைதானத்துப் பிள்ளைகளின் இரைச்சல் தூரத்துக்குப் போனது. ஒட்டுச்சார்ப்பில் எந்தப் பக்கத்தில் இருந்தோ ஒரு புறா குதுகுதுத்துக் கொண்டிருந்தது. காலனியில் புதிதாக வந்திருக்கிற பிள்ளையார் கோவில் மணி அமுங்கிக் கேட்டது. பக்கத்து ஸ்பின்னிங் மில் ஓடுகிற மூச்சு ரொம்பத் தள்ளி இரைந்தது.
மழை வருமா என்ன?
சென்ற மழைக்காலம் அடர்த்தியாக இருந்தது. வானம் நினைத்துக் கொண்டபோதெல்லாம் மழை. அநேகமாக மாலை தோறும், கருக்கலுக்கு முன்னாலேயே ஹாஸ்டலில் விளக்கெரியும். அடைந்து கொண்டிருக்க முடியாமல் ஞானப்பன் வெளியே அப்போதுதான் வந்திருப்பான். மழை விழுந்தது. திரும்ப முடியாமல் வலுத்து அறைந்தது. மண்ணும் சூடுமாக ஒரு நிமிஷம் வாசனை நெஞ்சையடைத்தது. பனைமரங்கள் ஒரு பக்கமாக நனைந்து கன்னங்கருப்பாயின. பன்றிகள் மசமசவென்று அலைந்தன. அவுரிச்செடி சந்தனத்தெளிப்பாகப் பூத்து மினுங்கியது.
ஞானப்பன் ஆர்பனேஜ் வாசலுக்குள் ஓடி, வாசல் பக்கத்து மரத்தடியில் நின்றான். பின்னும் நனைந்தது. முன்கட்டிடத்துக்கு ஓடினான். புறத்தே வகுப்புகள் இருப்பது போல இவைகளிலும் இருந்தன. ஆறு முதல் எட்டு, உள்ளே ஏறின பிறகு தெரிந்தது. டெய்ஸி வாத்திச்சியும் நின்று கொண்டிருந்தாள். புடவைத்தலைப்பை முக்காடாக இழுத்து ஓரத்தைப் பல்லிடுக்கில் கவ்வினபடி, நனைவதற்கு முன்பு வந்திருக்க வேண்டும்.
ஒரு வெள்ளாட்டுக்குட்டி சுவரோரமாக ஒண்டி, ரஸ்தாப் பக்கமாய்த் தலைதிருப்பி நின்றது. கீழே புழுக்கை, காவல்கார வயசாளி குப்பைவாளியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு துவண்டதுபோல் மடங்கிப் புகைத்துக் கொண்டிருந்தான். டெய்ஸி வாத்திச்சி கொஞ்சமும் அசையாமல் நின்றாள். வெளியே காம்பவுண்டுக்கு அப்புறம் பார்வையைத் தொலைத்துவிட்டு வெறுமனே நின்றாள். வெளியே பெய்கிற கனத்த மழை அவளை அவளின் சுபாவங்களிலிருந்து விலக்கிக் கட்டிப் போட்டிருந்தது. டெய்ஸி வாத்திச்சி, மெல்லிய திரைக்கு அப்புறம் தெரிகிறதுபோல துல்லியமான ஒரு புதிய வடிவில் இருந்தாள்.
ரஸ்தாவில் ஓடத்தைப் போல தண்ணீரைச் சுருட்டி எறிந்தபடி பஸ் வந்து நின்றது. சார்ப்புகள் போட்டு மூடின பஸ் டாப்பின் பக்கவாட்டு ஓடைகளிலிருந்து குலுங்கித் தண்ணீர் கொட்டியது. பஸ் திரும்பி நின்றதும் டெய்ஸி வாத்திச்சி அவசரமாக ஓடினாள். ‘தனுவைப் போல் அல்லாமல் முதிர்ந்து முற்றலாக இருக்கிற டெய்ஸி வாத்திச்சி இவ்வளவு புறக்கணிப்பாகக்கூட நின்று செல்ல முடியுமா?’ - ஞானப்பனுக்கு யோசனை. சிறு குரலில் ஆட்டுக் குட்டி கத்திய படி, சுவரில் ஏறி நின்றது.
தனுவின் கல்லூரியில் இருந்து புறப்படுகிற காலேஜ் டூ காலேஜ் பஸ் வர நேரம் உண்டு. மழையினால் பிந்தி வரலாம். காலனியில் இருந்து இரண்டு மூன்று அம்மாக்கள் அலுமினியப் பெட்டி சுமந்து இறங்குகிற குழந்தைகளைக் கூட்டிப் போகக் குடையுடன் நின்று கொண்டிருந்தார்கள். காலேஜ் வாசல் பக்கம் காலையில் பதநீர் விற்ற பனையோலைப்பட்டைகள் மேலும் நனைந்து பச்சையான குவியலாகக் கிடந்தன.
மஞ்சள் ஆட்டோக்கள் ஈரமான ரோட்டைச் சிலுப்பிக் கொண்டு காலனிப் பக்கம் சீறின. உள்ளே இருக்கிற குழந்தைகள் கையை அசைக்க ஞானப்பன் சிரித்துப் பதிலுக்கு அசைத்து, காலேஜின் இரண்டாவது வாசலுக்கு நடந்தான். ஹாஸ்டலின் வாசலில் தையல்காரன் மெஷினோடு நிற்பது தெரிந்தது.
மில் ஓடுகிறது மாத்திரம் நன்றாகக் கேட்டது.
புஸ்தகத்துக்குள் அமிழ்ந்து மௌனமாக வாசிக்கும்போது, மௌனம் இளகி ஓடி அலையலையாகி, மத்தியில் தனு அலம்பி அலம்பி நின்றாள்.
ஒரே வரியில் வழுக்கு மரம் ஏறின வெறும் வாசிப்பை மறுபடியும் ஆரம்பித்தபொழுது, வராண்டாவில் ஏறி டெய்ஸி வாத்திச்சி உள்ளே வந்தாள். ‘படிப்பு நடக்கிறதா’ என்பதாகச் சிரித்தாள். ‘குடையை வச்சுட்டுப் போய்ட்டேஎன்’ - செருப்பைக் கழற்றிப் போட்டபடி சொன்னாள். செருப்பில் விரல்கள் வழுவழுவென ஆழமாகப் பதிந்திருந்தன. பூட்டைத் திறந்து, வாசலுக்கு இடதுபுறம் இருக்கிற ஜன்னலில் கைக்குட்டைக்கு பாரம் வைத்ததுபோல் பூட்டும் சாவியும் இருக்க உட்சென்றாள். கையில் குடையோடு ஞானப்பனை பார்த்துக் கேட்டாள்.
“நாற்காலி வேணுமா?”
“இல்லை வேண்டாம். நேரமாச்சு. போக வேண்டியதுதான்.”
கவனமாகப் பூட்டை இழுத்துப் பார்த்தாள். கைக்குட்டை கீழே விழுந்திருந்தது.
“நேரமாயிட்டுதுண்ணா லைட்டைப் போட்டுக்கிறது” - கைக்குட்டையை எடுத்து மூக்கை ஸ்விட்சைக் காட்டிச் சுளித்தாள். கால் செருப்பைத் தேடி நுழைத்துக் கொண்டிருந்தது.
“இல்லை. வேண்டாம்” - ஞானப்பன் புஸ்தகத்தை நீவினபடி அவளைப் பார்த்தான்.
“தனலெட்சுமிதான் வேணுமாக்கும்” - ஒரு அடி முன்னால் வந்து, சடக்கென்று இழுத்துச் சாத்தியதுபோல் ஞானப்பனை அணைத்து இறுக்கிவிட்டு இறங்கி நடந்தாள்.
இருட்டும் வெளிச்சமுமாகக் கிடந்த ஆர்பனேஜ் ஞானப்பன் எட்டிப் பார்க்கையில் தடதடவென்று அந்த பஸ் இரைந்துகொண்டே போனது.
ஸ்டாப் இல்லாவிட்டால்கூட, டெய்ஸி வாத்திச்சி வழியிலேயே கையைக் காட்டி நிறுத்தி நிச்சயம் ஏறிக்கொள்வாள்.!!!!!!!!
Comments
Post a Comment