கேசம் - நரன்

கேசம்சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து

சமகால தமிழ் இலக்கியச் சூழல் பெரும்பாலும் சிறுகதைகளைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. என்னதான் எண்ணிக்கை அளவில் கவிதைகள் அதிகமாக எழுதப்பட்டாலும், பிரதான இடம் சிறுகதைகளுக்குதான். பொதுஜன வாசிப்பை ஒப்பிடுகையில், இலக்கிய வாசகர்கள் மத்தியில் ஓரளவு அதிகமாக வாசிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வரும் வடிவமும் சிறுகதை தான். பழைய பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் தேடிய வரை, பத்தாண்டுகளுக்கு முன்னர் எழுத வந்தவர்களை காட்டிலும் சமீப காலமாக அதாவது 2010-க்கு பின்னர் எழுத வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிகிறது. புதிய அலை எழுத்தாளர்கள் என்று சொல்லப்படக்கூடிய இவர்களில் பெரும்பாலானோர் நன்றாக எழுதி வருகின்றனர். சிலர், எழுத பழகி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய காலக்கட்டத்தில் வெளிவரும் புத்தகங்கள் குறித்த விரிவான உரையாடலோ, காட்டமான எதிர்வினைகளோ வருகிறதா என்றால், இல்லை என்பதுதான் பதில். அதுமட்டுமல்லாது, இப்போதெல்லாம் இரண்டு வரி விமர்சனங்கள் வெகு பிரபலமாகி வருகின்றன
சமீபத்தில் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளான எழுத்தாளர். நரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு கேசம்”.
ஒரு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்பது மிக முக்கியமான ஒன்று என்று சொல்லப்படுவதுண்டு. என்னைப் பொறுத்தவரை அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. உண்மையில் அவனது முழு படைப்புத்திறன் அவனது அடுத்தடுத்த படைப்புகள் மூலமாகத்தான் வெளிவரும் என்பது என் நம்பிக்கை. ஏனெனில் ஒரு எழுத்தாளனின் முதல் தொகுப்பு என்று எடுத்துப் பார்த்தால், அந்த தொகுப்பில் பிரதானமாக இடம் பெற்றிருப்பது அவனது பால்யத்தை குறித்த பதிவுகள் தான். கொஞ்சம் வெளியுலக அனுபவம் உள்ளவராக இருந்தால் அவர் வேலைப் பார்க்கும் இடங்களையும், தொழில் சம்பந்தப்பட்ட கதைகளையும் எழுதியிருப்பார். ஒரு படைப்பாளியின் உண்மையான பரிமாணம் என்பது இவையனைத்தையும் கடந்து அவன் என்ன சிந்திக்கிறான், அவனுள் என்ன இருக்கிறது, அவன் எதுவாய் இருக்கிறான் என்பதுதான். இவையெல்லாம் முதல் தொகுப்பிலையே வெளிப்படாது. கொஞ்சம் காலம் எடுக்கும்.

நரனின் இந்த கதைகளில் மேற்சொன்ன கூறுகள் அவ்வளவாகத் தெரியவில்லை. அங்கங்கே சில கதைகளில், சில இடங்களில் பால்யம் குறித்த நினைவுகளை சொல்லி செல்கிறார். அதில் உறுத்தலில்லை.

எந்த ஒரு எழுத்தாளனுக்கும் ஒரு தொகுப்பின் எல்லா கதைகளும், சிறந்த கதைகளாக அமைவதில்லை. சராசரியாக ஒரு தொகுப்பில் மூன்று அல்லது நான்கு கதைகள் சிறந்த கதைகளாக அமையும். இன்னும் ஒரு மூன்று கதைகள் சுமாரான கதைகளாகவும், மீதமிருக்கும் கதைகளும் பக்கங்களை நிரப்புவதற்கு சேர்க்கப்பட்டதாகவும் இருக்கும்.

என்னால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கதையென்றால் அதுமரிய புஷ்பத்தின் சைக்கிள்கள்என்ற கதை. தன்னுடைய சிறுவயதில் தான் கண்டு, ரசித்து, ஏங்கிய ஒரு பெண்ணை, சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கிறான் சைக்கிள் கடையில் வேலைப்பார்க்கும் பழனி. இடையில் சில வருடங்கள் தொடர்பில்லை. அவளுக்கு திருமணம் ஆனதையும், கணவன் இறந்ததையும் வேறொருவன் மூலமாக அறிந்துக்கொள்கிறான். ஒரு கட்டத்தில் வறுமையின் பிடியில் இருக்கும் மரிய புஷ்பம் இவனிடம் வந்து முந்நூறு ரூபாய் கொடுத்துவிட்டு தன்னுடன் இருந்துவிட்டு செல்லுமாறு கூறி அழைத்துச்செல்கிறாள். அவனையும் அழைத்துக்கொண்டு நேராக, அவளது கணவனின் கல்லறைக்கு சென்று மலர் அலங்காரம் செய்துவிட்டு அவளது வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு சென்று முந்தானையை அவிழ்த்துவிட்டுவா தம்பி வந்து படுஎன்கிறாள். இதைக்கேட்டவுடன், அவன் திரும்பிவிடுகிறான்.

கதையின் முதல் பிரச்சனை, இந்த கதை கொஞ்சம் கூட மனதிற்கு நெருக்கமானதாக இல்லை. கதைக்கு தேவையில்லாத நிறைய விஷயங்களை வலுகட்டாயமாக திணித்ததைப் போலிருந்தது. (உதா., மரிய புஷ்பத்தின் அப்பா அவளுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கும் பகுதி) ஒரே கதையிலையே சில வார்த்தைகள் திரும்ப திரும்ப வருவதாக தெரிகிறது. வித்தியாசமாக சொல்ல முயன்றிருக்கும் சில உவமைகள் அபத்தமாக தெரிகிறது.

(உதா.,)   

1) அந்த சைக்கிள் முரட்டு ஆண்கள் ஓட்டும் படியான, அகலமான கேரியரும் குறுக்குக் கம்பி போட்டதுமான வலுவான சைக்கிள்.
முரட்டு ஆண்கள் ஓட்டுவதற்கென்று எதும் விசேடமான சைக்கிள்கள் இருக்கிறதா என்ன?

2)   சிறிது நேரம் தலையை மட்டும் காணமல்போகச் செய்து தலை வழியாகச் செருகி தலை வழியாக உரித்து எடுக்கும் நிறமான கைவைத்த பனியன்களை அணிந்திருப்பான்.               
-”தலையை மட்டும் காணாமல்போகச் செய்துஎன்ன வகையான சொல்லாடல் இது என்று புரியவில்லை. தலையை எங்காவது கழற்றி ஒளித்து வைத்துவிடுவார்களா? தலை வழியாக அணியும் டி-சர்ட் என்று எழுதினால், நாம் இப்படி தலையை பிய்த்துக்கொண்டு அலைய வேண்டிய அவசியமில்லை.

  3) …..பகுதி என்பதால் ……….பகுதியாக இருப்பதால் …….முதலாளி என்பதால்இப்படியாக மூன்று வரிகளுக்குள் மூன்றுமுறைஎன்பதால் வருகிறது. )
இவையெல்லாம் கதையை வாசிப்பதற்கு பெரும் தடையாக இருக்கிறது.

கலைகள் மீதான நரனின் ஈடுபாடுகளை உணர்த்தும் கதைகளாக, இரண்டு கதைகள். மானேந்தி மற்றும் இதோ என் சரீரம்.

இதில் மானேந்தி கதை, தமிழகத்தின் தென்கோடியில் நடக்கும் கதை, மற்றொன்று பாரிஸில் நடக்கிறது. மானேந்தி கதை வாசிப்பதற்கு நன்றாக இருக்கிறது. கண் திறக்காத அம்மன் சிலை, கோயில் பிரகாரத்தில் இருக்கும் சிலை வடிவம் போன்றவற்றை அழகாக எடுத்துரைத்திருக்கிறார். போகிறப்போக்கில் நாம் அறியாத சிலபல விஷயங்களை சொல்லி செல்கிறார். உதா., (நெல்லையப்பர் கோயில் நந்தி, ஆழ்வார்திருநகரி உறங்காப்புளி மரம், பாறையில் தேரை) அதுவும் நன்றாகத்தனிருக்கிறது. சிறுகதைக்கு அது தேவையா இல்லையா என்பது இரண்டாம் பட்சம், ஆனால் அதனால் எந்த பாதகமுமில்லை. இந்த கதையில் நம்பகத்தன்மை கொஞ்சம் குறைவாக இருக்கிறது. முன்பின் அறியாத ஒருவன் வந்து, ”இப்போதே வர்றியா உன்னை கூட்டிச்செல்கிறேன்என்று அழைத்ததும் எந்த கேள்வியும் கேட்கமால் அவன் பின்னால் அவள் செல்வது கொஞ்சம் உறுத்துகிறது. சில உவமைகள் குறிப்பிடும்படியாக இருந்தது,

உதா.,
(1)  கருந்திராட்சை கொத்து போன்ற வம்சாவழியில் இருந்து வந்ததில், இவன் மட்டும் வெளிர் நிறம்.
2)   அவனது அம்மாவின் உடலை அவள் தட்டிய வரட்டியால் எரிக்கும்போது என்ற வரியில் வரும், ”அவள் உடலின் மீது அவளின் நிறைய கைகளை மூடி வைத்ததுப்போல் நினைவு தோன்றியது.”)

இதோ என் சரீரம் கதை ஒரு ஓவியக்காரியின் (ஓவியக்காரிஅப்படித்தான் நரன் எழுதுகிறார்) கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. கதையின் மையமாக இரண்டு விஷயங்களை புரிந்துக்கொள்ள முடிகிறது. ஒன்று, ஒரு கலைஞரின் திடத்தையும், தன் படைப்பு மீதான நம்பிக்கையையும் சொல்லி செல்கிறார், மற்றது ஒரு அகதியின் வாழ்வினை மிக எளிமையாக புரிய வைத்திருக்கிறார். எத்தனையோ பேர் அவளது ஓவியத்தை கேட்கும்போது கொடுக்க மறுத்து, அதன் உண்மையான உள்ளடுக்குகளை சொல்பவருக்கே விற்பது என்று முடிவெடுத்து காத்துக்கொண்டிருக்கிறாள், எமிலி. மேலும், கதையின் முடிவில் அகதி ஒருவன் வந்து அதன் சரியான அர்த்த்த்தை சொல்லி ஓவியத்தைக் கேட்கிறான். எமிலியும் மிகவும் மகிழ்ந்து, அந்த ஓவியத்தை அவனுக்கு உவப்புடன் அளிக்கும்போது அதை வாங்க மறுத்து அவன் சொல்லும் காரணங்கள் தாம் உண்மையான அகதி வாழ்வு என்பது புலப்படுகிறது. இடையில் வரும் லீவிஸ் தொடர்பான சில பத்திகள் கதையை ஜவ்வாக இழுக்கிறது.

கேசம் மற்றும் ரோமம் கதைகள் ஏதோ ஒரு வகையில் ஒத்துப்போவதாக தோன்றுகிறது. கேசம் கதை கொஞ்சம் ரொமண்டிசைஸ் செய்து எழுதப்பட்டிருந்தாலும், சில விஷயங்கள் ஈர்க்கிறது. குறிப்பாக, காலில் இருக்கும் அந்த புண்களை தன்னுடைய குழந்தையாக உருவகப்படுத்திக்கொள்வது, ஆத்தியப்பனின் வடிகாலில்லாத காமத்தை விளக்குவது. விவிலியத்தில் வரக்கூடிய ஒரு கதையை சற்று மாற்றி எழுதியிருப்பதாக தெரிகிறது. அப்படியாக இருக்கும்பட்சத்தில் ஆசிரியரின் மொழிக்கும், கதைசொல்லல் முறைக்கும் மட்டுமே கருத வேண்டிய கதையிது.

ரோமம் கதையும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. லயித்து வாசிக்க இயலவில்லை. வாசிப்பதற்கு சற்று புதியதாக தெரிந்தாலும், நீட்டி முழக்கி கதையை முடிக்க கஷ்டபட்டு முடித்ததை உணர முடிகிறது.

இந்த தொகுப்பில் இருக்கும் முக்கியமான இரண்டு கதைகள், பெண் காது மற்றும் மூன்று சீலைகள். இந்த இரண்டு கதைகளையும் நான் முன்னமே (விகடனில் வந்தபோது) வாசித்து இருந்தேன்.

கண்ணதாசனின் வனவாசத்தில் ஒரு வரி வரும், ”தன் துயரத்தைப் பகிர்ந்துக்கொள்ள இன்னொருவர் இருந்தால் மனத்துக்கு ஆறுதல் கிடைக்கிறது. அதுவும் அவள் பெண்ணாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது”. தன்னுடைய சுகத்துக்கங்களை பகிர்ந்துகொள்ள இரு செவிகள் தேவைப்படுகிறது. ‘ம்கொட்டுவதின் அவசியத்தையும் அதனால் ஏற்படக்கூடிய நிலையையும் மிக தெளிவாக இக்கதை பேசுகிறது. ஆம், நம் அனைவருக்குமே நாம் பேசுவதைக் கேட்பதற்கு இரு செவிகளும்ம்கொட்டுவதற்கு ஒருவரும் நிச்சயம் தேவைப்படுகிறார்கள் தானே, அதுதான் இந்த கதை. இன்றைய காலக்கட்டத்தில் உளவியல் கதைகள் அதிகமாக எழுதப்படுவதாக சொல்கிறார்கள், அந்த வரிசையில் இது மிக முக்கியமான கதை. மூன்று சீலைகள் கதை, அதனுடைய மொழி வளமைக்கும், தேர்ந்தெடுத்த சொற்சிக்கனத்துக்கும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும், மூன்று சீலைகளில் மூன்றாவது சீலை குறித்து காசி சொல்லத்தொடங்குகையில் தான் கதை வேறொரு தளத்திற்கு பயணிக்கிறது. விகடனில் இந்த கதை வெளிவந்த போது வரையப்பட்டிருந்த ஓவியம் இன்னும் கண்களுக்குள் நிறைகிறது.

லயன் சர்க்கஸ் என்றொரு கதை. சர்க்கஸ் தொழில் நலிவடைந்த ஒரு கலைஞனின் கதை. ஏற்கனவே வறுமையில் வாடி வரும் சர்க்கஸ் குழுவினரிடம் போலீஸ் வந்து லஞ்சம் வாங்கும் இடங்கள் தான் கதையின் நோக்கத்தை விளக்கக்கூடிய முக்கியமான இடங்கள். ஆனால், அவையெல்லாம் மிக நாடகத்தனமாக தெரிகிறது. மேலும், முடிவு யூகிக்க கூடியதாக அமைந்தது கதையின் பலவீனம். பரிராஜா கதையில் எனக்கு முழுக்க முழுக்க ஒரு ஹியூமர் வகை கதையாகத்தான் தெரிந்தது. பேராசிரியர் ஒருவரின் ஆராய்ச்சிக்காக குதிரையை தேடித்தரும் ஒருவனின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, குதிரையை கூட்டிக்கொண்டு போக செல்லும்போது குதிரைக்காரன் பதறியடித்து அலறுவது நல்ல இடம். ஆனால். கதையில் ஒரு இடத்தில் நாங்க பிஸிக்ஸ் டிபார்ட்மெண்ட் எங்களுக்கு கரப்பான்பூச்சி வேண்டும்என்று வருகிறது. பிஸிக்ஸ் டிபார்ட்மெண்டுக்கு கரப்பான்பூச்சி தேவையா? உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை.

செவ்வக வடிவ பெண்கள் கதை வடிவ ரீதியில் புதிய முயற்சி. தான் சொல்ல வந்ததை ஓரளவு தான் நரன் சொல்லியிருக்கிறார் என்று தோன்றுகிறது. ஒரே விஷயம் மூன்று பேரின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. வாசிப்பதற்கு நல்ல ஃப்ரெஷான கதை.

நரன், இன்னும் கவனமாக கதைகளை எழுத வேண்டும். வாக்கிய அமைப்பிலும் சிக்கல்கள் தெரிகிறது. கதையை கொண்டு செல்வதில் சில இடங்களில் தடுமாறுகிறார். தேவையற்ற விஷயங்களுக்கு அதிகம் இடமளிப்பதாக தோன்றுகிறது. கதைகளின் ஆரம்பத்தில் காலத்தை தெளிவுப்படுத்துவது ஒரு வகையில் பலமென்றாலும், பலவீனமும் கூட. காலத்தை வெளிப்படுத்தும்போது அது சார்ந்து அதிகம் கவனமுடன் எழுத வேண்டும்.

உதா:-  1) ரோமம் கதையில் வரக்கூடிய சவுரி விலை.
2)   சர்க்கஸ் போடுவதற்கு போலீஸ் வாங்கும் லஞ்சம்.

கதைகளில் ஒருமுறை வந்த வார்த்தைகளே அடிக்கடி திரும்ப வருகிறது. தனித்தனி கதைகளாக வாசிக்கையில் பிரச்சனையில்லை, தொகுப்பாக வாசிக்கும்போது இது அதிகம் வெளிப்படுகிறது. சுத்த தமிழில் எழுதுவதாக எழுதியிருப்பது, அது அவசியம்தானா என்று எண்ணுமளவுக்கு துருத்திக்கொண்டு நிற்கிறது. புத்தகம் முழுதும் வாக்கிய பிழைகளும்,, எழுத்துப்பிழைகளும் மண்டி கிடக்கிறது. வரும் காலங்களில் கவனமுடன் திருத்திக்கொள்ளவும்.

Related image

தொடர்ந்து எழுதுங்கள் நரன். வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா