நரைத்த மீசை



நரைத்த மீசை"(குறுங்கதை)

28 February 2015 at 10:46
*****"நரைத்த மீசை"*****
-------------------------
அவளுக்கு எப்படியேனும் அதை செய்து விட வேண்டுமென்று ஆசை.
தனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து அதை செய்வதற்கு தான் முயன்றுக் கொண்டிருக்கிறாள்.அவளது நேரம் வீட்டில் அவளது அம்மாவோ குட்டி தங்கையோ இருந்துக்கொண்டே யிருந்தனர்.அவளால் அதை செய்ய முடியவில்லை.வீட்டில் அனைவரும் இருக்கும்போது அதை செய்ய முடியாது.ஒருவேளை செய்து மாட்டிக்கொண்டால் அசிங்கம் என்றெண்ணி செய்யாமலிருந்தாள்.இன்று அவளது ஒன்றுவிட்ட சித்தப்பாவின் திருமணத்திற்கு அனைவரும் சென்றுவிட்டனர்.அனைவரும் சென்றபின் வாசற்கதவை தாழிட்டு உள்ளே வந்தாள்.அறையின் அனைத்து சன்னல்களையும் அடைத்து திரைச்சீலையை இழுத்துவிட்டாள்.இதயம் ஏனோ அவளையறியாமலே வேகமாய் அடித்தது.அறைக்குள் வந்து அதை செய்ய முனைந்தாள்.அப்போது வாசலில் ஏதோ சத்தம் கேட்கவே,பதற்றத்துடன் அடித்து பிடித்து இயல்பாய் இருப்பதாய் நடித்து கதவை திறந்தாள்.இரண்டு கரும்பூனைகள் எதிரெதிரில் நின்று உறுமிக் கொண்டிருந்தன.அதை விரட்டியடித்தாள்.அவளை முறைத்துக்கொண்டே அப்பூனைகள் சென்றன.மீண்டும் கதவினை அடைத்து தாழிட்டாள்.சரியாக தாழிட்டோமா என்று பார்த்துக்கொண்டாள்.அறைக்குள் வந்தாள்;அலமாரியைத் திறந்தாள். ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் வெட்கமாகவும் இருந்தது.வெட்கத்துடனே அதையெடுத்து தனது மார்போடு இறுக்கிக்கொண்டாள்.அவளது குட்டி தங்கைக்காக வாங்கி வைத்திருந்த அந்த cerelac டப்பாவின் சில்லென்ற உணர்வு
அவளது மார்புக்கூட்டிற்குள் இறங்கியது.வீட்டில் யாருமில்லையென்றாலும் ஏனோ அவசர அவசரமாய் அந்த cerelac-ஐ அள்ளித் தின்றாள்(திணித்தாள்).மெய்யாகவே மெய்மறந்து ரசித்து சுவைத்தாள்.அந்த மாவு அவளுக்கு நரைத்த மீசையை உண்டாக்கியிருந்தது. அவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.நிம்மதி பெருமூச்சுடன் வாசற்கதவை திறந்தாள்;அந்த பூனை யார் வீட்டிலோ பாலைக் குடித்து விட்டு நரைத்த மீசையுடன் அமர்ந்திருந்தது அமைதியாக!!!
-#தமிழ்மறவோன்

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா