பொறுப்பு

J. H. வில்லியம்ஸின் "யானைக்கூட்டம்" என்ற புத்தகத்தை சண்முகசுந்தரத்தின் மொழிப்பெயர்ப்பில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். பர்மாவில் யானைகளை பராமரிப்பதற்காக தான் சென்றபோது யானைகளுடனான தனது அனுபவங்களை தொகுத்து எழுதியுள்ளார் வில்லியம்ஸ். பர்மாவின் முக்கிய தொழில், மர வியாபாரம். அந்த தொழிற்சாலைகளுக்கு யானைகளின் பங்கு அளப்பரியது. அப்படி ஒரு தேக்கு மர தொழிற்சாலையில், சரியாக 1 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்காக சங்கு ஊதுவார்கள். அதைக்கேட்ட மறு நொடியில் எவ்வளவு பெரிய மரத்துண்டை தனது தும்பிக்கையில் ஏந்தி இருந்தாலும், யார் சொல்லையும் கேளாது அப்படியே போட்டுவிட்டு மதிய உணவுக்காக அந்த யானைகள் சென்றுவிடுமாம்.
0
சிறுவயதில் இருந்தே சரியாக மதியம் ஒரு மணி ஆனால் போதும், பாழாப்போன வயிறு கொண்டா கொண்டா என்று கூப்பாடுப் போட தொடங்கிவிடும். பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் அதைத்தான் நாம் பழகி இருக்கிறோம். திடீரென்று மாற்றுவதென்பது குதிரைக்கொம்பு. வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒரு டீமில் இருந்தேன். ஐ. டி துறை என்றாலும் கொஞ்சம் அலைச்சல் பிடித்த வேலைதான். அலுவலகம் முழுதும் அலைந்து திரிய வேண்டும். தாவு தீர்ந்துவிடும். எனக்கு மேலிருக்கும் சீனியர் வேலைகளை பிரித்து கொடுத்தனுப்புவார். அவர் அவரது மேலதிகாரிகளிடம் மணிக்கொரு முறை அப்டேட் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். நமக்குத்தான் சரியாக 1 மணிக்கு வயிற்றில் மணியடித்துவிடுமே; சாப்பிட போவதாக சொல்லி சென்றுவிட்டு, மீண்டும் வருவதற்கு தாராளமாக ஒரு மணிநேரமாகும். நீங்க சாப்பிடலையா என்று கேட்டால், சாப்பிடணும்டா என்பார். சாப்பிட்டுவிட்டு வந்து கேட்டால் சாப்டேன்டா என்பார். எப்போது போனார், எப்போது வந்தார் என்று எதுவும் தெரியாது. வேலை மீதான அவரது பிடிப்பும் பொறுப்பும் ஆச்சரியமாக இருந்தது. "என்னத்துக்கு இந்த மனுசன் இப்படி லூசு மாதிரி வேல பாக்கான்" என்றுக்கூட தோணும்.
0
ஒரு வெள்ளி காலை 9 மணி இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் காப்பிக்கடையில் அவரைப் (இவர் வேறொருவர்) பார்த்தேன். எனது டிபார்ட்மெண்ட்-ல் கொஞ்சம் சீனியர் அவர். வயது 30-க்குள் தான் இருக்கும். அதற்குள் ஒரு அந்தஸ்த்தான நிலையை அடைந்திருந்தார்.
"என்ன ஜி, சாப்டீங்களா?"
"என்னப்பா அதுக்குள்ள சாப்டியா னு கேக்குற, மணி என்ன ஆகுது?"
"தல, மணி 9 ஆச்சு தல" .
"டேய்.. நேராநேராத்துக்கு சாப்பிட நாம என்ன காலேஜா படிக்குறோம். சாப்ட 11 மணி ஆகும்" என்றார்.
Workoholic என்றொரு பதம் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுதான் இதுவோ என்று நினைத்துக்கொண்டேன்.
சிறுவயதில் பொறுப்புகளை நாமாக விரும்பி ஏற்றுக்கொள்வோம். உதாரணமாக, கடைக்கு சென்று அந்த மாதத்திற்கான பலசரக்கு வாங்க ரொம்ப ஆர்வமாக இருப்போம். யாருக்கேனும் திருமணமென்றால் பந்தி பரிமாறுவதில் முந்திரிக்கொட்டையாக இருப்போம்.
வளர வளர பொறுப்புகளில் இருந்து நம்மை நாமே விலக்கிக்கொள்கிறோம், விடுவித்துக்கொள்கிறோம் என்றுத் தோணுகிறது. நம்மிடம் ஒரு பொறுப்பு வரும்போது பதறிவிடுகிறோம். முடிந்தவரை பொறுப்பை தட்டிக்கழிக்கிறோம். வேறு வழியே இல்லாதபட்சத்தில், நம்மீது திணிக்கப்படும்போதே அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
இதேப்போல் ஒருக்கட்டத்தில் அந்த அப்டேட் கொடுக்கும் நிலை எனக்கு ஏற்பட்டது. இரண்டு மூன்று பேரிடம் இருந்து டேட்டா வாங்கி அதை மேலிடத்திற்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். சரியாக 1 மணிக்கு அந்த மூன்று பேருக்கு கால் செய்தபோது சாப்பிட வந்துவிட்டதாக சொன்னார்கள். எனக்கு பக்கென்று ஆகிவிட்டது. அவசர அவசரமாக நானே சென்று அந்த டேட்டாக்களை எடுத்து வந்தேன்.
அந்த அப்டேட் கொடுக்கும்வரை எனக்கு பசிக்கவேயில்லை.
பொறுப்புகள், குழந்தையை மிரட்டும் குடுகுடுப்பைக்காரனைப் போல நம்மை பயமுறுத்துகிறது.
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்