அங்காளம் - ஒரு வாசகப்பார்வை

அங்காளம் - ஒரு வாசகப்பார்வை
0
சமகாலத்திய தமிழ் இலக்கியச் சூழலை கவனிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும், தமிழ் படைப்புலகின் மீது குறுகிய காலத்தில் நடைப்பெற்றிருக்கும் இளம் எழுத்தாளர்களின் படையெடுப்பு எத்தகையது என்று. ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒரு புதிய அலை எழும்புவது இயல்பெனினும், கடந்த பத்தாண்டுகளில் அதன் எண்ணிக்கை சற்றே மலைக்க வைக்கக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மரபில் இலக்கியம் என்பது பல்வேறு வகைகளில் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. அதில்  கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்பன அனைவரும் அறிந்தது.

தமிழ் தெரிந்தவர், தெரியாதவர் என்றல்லாமல் பேஸ்புக் கணக்கு இருப்பவர் அனைவரும் கவிஞர் என்ற நிலை உருவாகி இருக்கிறது. வெறும் காதல் கவிதைகள் மட்டும் எழுதுபவர்களைத் தவிர்த்து சிலர் முக்கியமான சில நல்ல கவிதைகளும் எழுதி வருகின்றனர்.
அனைவராலும் சொல்லப்படுவதைப் போல, சிறுகதை என்ற களம் சற்றே சவாலானது தான். அதிலும் குறிப்பிட்ட அளவு எழுத்தாளர்கள் புது விதமான கதைக்களன்கள், கதை சொல்லும் உத்திகளை தொடர்ந்து கையாண்டு வருகிறார்கள்.

நாவல் கொஞ்சம் பாதுகாப்பான வெளி. ஒரு இடத்தில் கொஞ்சம் பிசகினாலும், வேறொரு இடத்தில் சரிக்கட்டிவிடலாம் என்ற வாய்ப்புண்டு அதில். கட்டுரை என்று எடுத்துக்கொண்டால், ஒன்று சமகால அரசியல்-சமூக பிரச்ச்னைகளை முன்வைத்து எழுதப்படுவது அல்லது இலக்கியத்தின் மீது வைக்கப்படும் விமர்சனக் கட்டுரைகள். இதில் இரண்டாவதாக இருக்கும் வகை கட்டுரைகள் தற்சமயம் தமிழிலக்கியத்தில் புழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

சிறுகதை, நாவல் என்று எழுதும் பெரும்பாலானோர் மிக சாமர்த்தியமாக புனைவுகளின் பக்கம் ஒதுங்கி கொள்கின்றனர். சமகால அரசியல்-சமூக போக்குகளை எழுதுபவர்களும் நன்றாக எழுதுபவர்களாகவே இருக்கிறார்களே அன்றி களச்செயற்பாட்டாளர்கள் வெகுக் குறைவு. ஒரு பேட்டியில் கோணங்கி சொல்லியிருந்தார், அவருடைய ’த’ நாவலுக்காக நாகப்பட்டினம் பகுதிகளில் மாதக்கணக்கில் சுற்றி திரிந்ததாக; அதேப்போல் தொ.பரமசிவன் அவர்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் தவிர்க்கவியலா பொக்கிஷங்கள். இன்றும் அவரது புத்தகங்கள் ”அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள்” ஆகியவை பெஸ்ட் செல்லர்கள் தாம். அதில் இருக்கும் தகவல்களும் விஷயங்களும் அத்தனை செறிவானவை. 

இதுப்போன்ற இடங்களில் உருவாகி இருக்கும் வெறுமையைத்தான் கார்த்திக் புகழேந்தி நிரப்புகிறார்.

கடந்த வருடம் ’ஊருக்குச் செல்லும் வழி’ என்றொரு ”கட்டுரைத்தொகுப்பு” கொண்டு வந்திருந்தார். அந்த புத்தகம் குறித்து எதிர்மறையாக சொன்னவன் நானாக மட்டும்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். அதன்பின் ”அவளும் நானும்” என்றொரு சிறுகதைத் தொகுப்பு வந்தது. இப்போது அவரது ஐந்தாவது புத்தகமான ”அங்காளம்” என்னும் கட்டுரைத்தொகுப்பு வந்துள்ளது.

சமீபத்திய என்னுடைய வாசிப்புகளில் சற்றே வித்தியாசமான அனுபவமாக இருந்தது அங்காளம். மொத்தம் பதினெட்டு கட்டுரைகள் இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட பத்து கட்டுரைகள் நல்ல செறிவானவை என்று நான் சொல்வேன். மீதமிருப்பதில் ஒரு ஐந்து கட்டுரைகள் இன்னும் நன்றாக எழுதப்பட்டிருக்கலாம் என்ற வகையறா மற்றும் மீதி சில கட்டுரைகள் பக்க கணக்கிற்காக எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது.

சங்குத்தவம் என்ற கட்டுரை முதல் கட்டுரையாக இடம்பெறுகிறது. பல்வேறு காலகட்டங்களில் தான் கேள்விப்பட்ட, மூதாதையர்கள் சொன்ன கதையின் ஊடாக ”சங்கு” பற்றிய தகவல்களை சொல்லுகிறார். குறிப்பாக இடம்புரி வலம்புரி சங்குகளின் கதை, குமரி மாவட்டத்தில் நடைபெறும் சங்கு வியாபாரம் என்று நாம் அறியாத பல தகவல்களை வெறும் தரவுகளாக மட்டுமல்லாமல் கதை சொல்லல் முறையில் சொல்வது ஈர்க்கிறது.    

அடுத்ததாக பெண்பாலுறுப்பு, சூல் பொருள் என்ற கட்டுரைகள். புகழின் கதைகள் வாசித்ததுண்டு, அதில் விரசமான விவரணைகள், காமம் சார்ந்த சொல்லாடலகள் பெரும்பாலும் இருக்காது. ஆனால் இந்த கட்டுரையில் அதற்கு நேர்மாறாக முழுக்க முழுக்க வசைக்களுக்காகவும், அவச்சொற்களாகவும்  நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை, அதிலும் குறிப்பாக பெண்களின் பாலுறுப்புகள் குறித்த பார்வைகளை பதிவு செய்திருக்கிறார். அதன் வேர்ச்சொல்லையும், சங்க காலத்தில் அவை பயன்படுத்தப்பட்ட பாடல்களையும் மேற்கோள் காட்டி, அந்த சொற்களின் மீதான நம்முடைய பார்வையை தெளிவுப்படுத்துகிறார். தமிழில் இந்த மாதிரியான ஒரு கட்டுரை வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. (பெருமாள் முருகனின் கெட்ட வார்த்தை பேசுவோம் தவிர்த்து) அந்த வகையில் இது தைரியமான ஒரு முயற்சி.

பந்தயப்புறா மற்றும் வேட்டையன் என்ற கட்டுரைகள் விலங்குகள் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள். பந்தயப்புறா கட்டுரையில் வரும் புறா குறித்த தகவல்களும் புறாப்பந்தயம் பற்றிய குறிப்புகளும் இதுவரை நமக்கு காட்டப்பட்ட புறாப் பந்தயங்களை புறங்கையால் தள்ளி உண்மையான கள நிலவரத்தை விளக்குகிறது. வேட்டையன் கட்டுரை நாய்களின் வகைகளையும் அதுசார்ந்த நாம் அறியாத விஷயங்களையும் சுவாரஸ்யமாக குறிப்பிடுகிறார்.

இதில் இருக்கும் மற்றொரு சிறப்பான கட்டுரை ”தேரோட்டம்”. தேரோட்டம் குறித்து எழுத சொன்னால் அன்றைய நாளில் நடக்கும் விஷயங்களை அந்த தெருக்களை சேக்காளிகளுடன் செய்த சேட்டைகளை யாரென்றாலும் எழுதிவிடாலம்; ஆனால் புகழ் அதையெல்லாம் தாண்டி தேரின் உள்ளே ஏறுகிறார். அதன் செய்முறை குறித்து சம்பந்தபட்டவர்களிடம் பேசுகிறார், அதை பதிவு செய்கிறார். இவையெல்லாமே முக்கியமான ஆவணங்கள். ஒரு அரசு செய்ய வேண்டிய வேலைகள் இவை, வரும் தலைமுறைக்கு கடத்த வேண்டிய தொன்மங்கள். அந்த பொறுப்பு இலக்கியத்திற்கும் இருக்கிறது. அந்த வகையில் இது முக்கியமான பொக்கிஷம்.

இவை தவிர தொன்மத்தின் பிடிமண், கதைப்பாடலின் கதை, கழனியூரன் குறித்த கட்டுரை என்று பல முக்கியமான கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.

கட்டுரைகளை வாசிக்கும்போது புகழின் தேடலும், கள ஆய்வும், ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள்வதற்கான அவரது மெனக்கெடல்களும் தெளிவாக தெரிகிறது. இறுதியில் அவர் குறிப்பிட்டிருக்கும் மொத்த புத்த்கங்களை ஒருவன் படிப்பதற்கு எந்த அளவு சாத்தியக்கூறுகள் இருக்கிறதென்று தெரியவில்லை. அந்த மொத்த புத்தகங்களின் சாராம்சம் தான் இந்த ”அங்காளம்”.

ஒரு சில இடங்களில் வரும் மன்னர்களின் பெயர்கள், சங்க இலக்கிய பெயர்கள் வாசிப்பதற்கு கொஞ்சம் உழைப்பை கோருகிறது. அதன் காரணமாக வாசிப்பு ஓட்டத்தில் சற்று தடங்கல் ஏற்படுவதாக தோன்றுகிறது. மேலும், அவசர அவசரமாக எழுதியதாகவும் தெரிகிறது. இருக்கும் சில குறைகளை செப்பனியிட்டு அடுத்த பதிப்பில் வெளியிட வாழ்த்துகள் கார்த்திக் புகழேந்தி அவர்களுக்கு.


Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா