அந்த பத்து நிமிடம்






*"அந்த பத்து நிமிடம்"*                                                     -தமிழ்மறவோன் 

பேருந்தில் இருவர் அமரும் இருக்கையில் வழக்கம்போல தனியாக அமர்ந்திருந்தேன். 
ஓட்டுநரின் எதிரில் ஐவர் அமரும் இருக்கையில் ஒரு தாயும் மகளும் மட்டும் அமர்ந்திருந்தனர்.எங்கோ பார்த்துக் கொண்டிருந்த நான் தற்செயலாக அப்பக்கம் திரும்பினேன். அந்த மகள் ஆர்ப்பாட்டம் இல்லாத அழகியாக இருந்தாள். அவள் அணிந்திருந்த டாப்ஸும் ஜீன்ஸும் ஆபாசமாக இல்லை. பார்க்க பார்க்க ஆசுவாசமாக தான் இருந்தது. நான் பார்த்தபோது ஜன்னலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஜன்னல் கம்பி இவள் ஸ்பரிசத்தால் மகிழ்ச்சியில் துள்ளியது போலிருந்தது. திடிரென்று, அவ்விருவரும் என்னை நோக்க, நான் என்ன எதிர்வினை செய்வதென்று தெரியாமல் தலை தாழ்த்தி தரை நோக்கினேன்.சிறிது நேர நிதானத்திற்கு பின்னர், மெதுவாக அவளைப் பார்த்தேன். இம்முறை அந்த அம்மா என்னை பார்க்கவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு அப்பெண்ணை ரசிக்க துணிந்தேன். நான் பார்ப்பதை பார்த்த அப்பெண்ணும் என்னை நோக்கினாள். "அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினான்". அவள் உதடுகளில் தவழும் புன்னகை 
இல்லையில்லை, 
"அவள் புன்னகையில் 
தவழும் அந்த உதடுகளை" என்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்தேன். சுருள் சுருளான கேசமும்,பிறையாய் வளைந்த புருவங்களும்,வெண்மைக்கு வெள்ளையடித்தாற் போலிருந்த பால் பற்களையும் பருகிக்கொண்டிருந்த என்னை நடத்துனரின் "உய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்" என்ற விசில் சத்தம் கலைத்தது. அவர்கள் இருவரும்  நிறுத்தத்தில் இறங்க தயாரானார்கள். நமக்கு பிடித்த உணவை நமக்கு தராமல் எடுத்துச் செல்லும் போது என்ன உணர்வு இருக்குமோ அப்படியோர் உணர்வு எனக்கு. இறங்கும் போது அத்தாயின் இடுப்பை அரியணையாக்கி அமர்ந்திருந்த அப்பெண்குழந்தை தனது பிஞ்சு விரல்களை ஆம்பல் போல் விரித்து டாட்டா காட்டியது. நான் ஏனோ டாட்டா காட்டவில்லை.எனக்கு, வாயில் வைத்திருந்த லாலிப்பாப்பை யாரோ பிடுங்கிச் சென்றது போல் இருந்தது. அந்த பத்து நிமிட பயணத்தில் என் மனம் பத்து மடங்கு பூரித்துக்கிடந்தது.. 
-தமிழ்மறவோன்.

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா