அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

அம்மா வந்தாள்தி.ஜானகிராமன்

நான் படிக்கும் தி.ஜா.வின் நான்காவது புத்தகம் இது. முதலில்மோகமுள்அடுத்துசெம்பருத்தி’, மூன்றாவதாககொட்டுமேளம்சிறுகதைத் தொகுப்பு. தி.ஜா.வை வாசிப்பது என்பது எனக்கு பிடித்தமான ஒன்று. அது பாலா படம் போன்று மூர்க்கமானது கிடையாது. மிகவும் சாந்தமானது; ஆனால், தட்டையானது இல்லை. சுவாரஸ்யம் மிகுந்தது. ஒரு சிறிய விஷயத்தையும் அழகாக விவரித்திருப்பார். வர்ணிப்பதில் வல்லவர் கல்கி, கலைஞர் கருணாநிதி என்பர், ஆம் உண்மைதான். கலைஞரின் வர்ணிப்பு பிரமாண்டமானது, ஓங்கியுயர்ந்து நிற்பது. ஆனால், தி.ஜா.வின் வர்ணிப்பு நம் கண்முன் நடப்பதை நாம் காணா வேறொரு கோணத்தில் விவரிப்பது. படிக்கும்போதே வேறொரு மனநிலைக்கு அழைத்துச் செல்லும்; மோனநிலைக்கு கரம்பிடித்து கூட்டிப் போகும்.
உதாரணமாக,
0)   கோவில் மணி டைங், டைங் என்று சளி பிடித்தாற்போன்று மூக்கடைப்பு குரலில் அடித்தது.
1)   தார்க்குச்சியை தோலில் செருகித் திருகி இழுத்த மாடு போல அப்பு உள்ளே துள்ளினான்.
தி.ஜாவின் படைப்புகளில் வரும் உரையாடல்கள் சுவாரஸ்யாமானவை. அதிலும், அந்த பெண்கள் பேசும் பேச்சுக்களில் ஓராயிரம் உள்ளர்த்தம் பொதிந்துக் கிடக்கும். அப்படிதான் அப்புவுக்கும் இந்துவுக்குமான உரையாடல் தொடங்குகிறது. அந்த உரையாடலின் ஊடே இந்துவின் முந்தைய திருமண வாழ்வையும், தற்போதைய நிலையையும் ஆசிரியர் கூறி செல்கிறார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுப்போல் இந்து தொடங்குகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அப்புவை தடுமாற வைக்கிறாள். அவனால் அந்த இடத்தில் நின்று பேச முடியவில்லை. அந்த அளவுக்கு இருக்கிறது இந்துவின் பேச்சு. அநேக இடங்களில் மோகமுள்ளின் வாசம் வீசுகிறது. அது தி.ஜாவின் வாசமாக இருக்குமென்று தோன்றுகிறது.
இன்னொரு காட்சி பாருங்கள், அப்புவுக்கும் அவனது தந்தைக்குமான உரையாடல்,
அப்பா: ”அம்மா காத்திண்டிருப்பா.”
அப்பு: ”யாருக்காக?”
இந்த யாருக்காக-வில் தான் எத்தனை அர்த்தங்கள்?? மொத்த கதையையும் இந்த ஒரு வார்த்தையில் அடக்கிவிடலாம்!
அடுத்த வரி பாருங்கள், அப்பு அப்படி கேட்டவுடன் அப்பாவின் பார்வையை இப்படி விவரிக்கிறார்,
      ”எப்படி பார்த்தாரோ அவர், இருட்டில் தெரியவில்லை
இவரது பெரும்பாலான கதைகளில் காமம் குறித்து அதிகம் பேசுகிறார் (பேசாமல் பேசுகிறார்). இந்த காமம் அருவருக்கத்தக்கதாக இல்லை, முகம் சுளிக்க வைப்பதாக இல்லை. ஒரு பெண்ணின் உண்மையான அன்பின் வெளிப்பாடாகவே இருக்கிறது. எப்படி மோகமுள்ளில் பாபு தவிக்கிறானோ இங்கு இந்து தவிக்கிறாள். நாவலை வாசிக்கும்போதே காமம் குறித்து பேசுகிறார் என்று நமக்கு புரிந்தாலும் அதை நம் கண்ணில் காட்டாமல் அலைக்கழிக்கிறார். எங்கே எங்கே என்று தேட வைக்கிறார்! இறுதியில் நமக்கே தெரியாமல் அது மறைந்தும்விடுகிறது; அதுதானே நிதர்சனமும் கூட..
சிறு வயதிலிருந்தே இந்துவுக்கு அப்புவின்மீது ஒரு பிடித்தம் இருக்கிறது. இதை தி.ஜா எப்படி தெளிவுப்படுத்துகிறார் பாருங்கள்,
0)   வேதம் படிக்க அங்கு தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு தலை பின்னிவிடுகிறாள் இந்து, அப்போது மற்ற மாணவர்களின் தலையிலிருந்து பேன்கள் அப்புவின் தலைக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அவனுக்கென்று தனி சீப்பை பயன்படுத்துகிறாள்
தி.ஜா ஒரு தேர்ந்த கலைஞன் என்பது பல இடங்களில் புலப்படுகிறது. ஒரு தருணத்தை இப்படி விவரிக்கிறார்,
0)   அந்த இருளில் அவள் முகத்தில் பாதியிலும், வலது தோள்மீதும் வெளிச்சம் விழுந்து இருக்கிறது”.
1)   அரிக்கேன் வெளிச்சம் முழுவதும் மேனிமீது விழ சுவரைப்பார்த்து நின்றாள்
(என்ன ஒரு போட்டோஜெனிக் பார்வை; அந்த காட்சியை மனக்கண்ணில் நினைத்துப் பாருங்கள்)
ஒரு படைப்பாளி முதலில் கூர்ந்து கவனிக்கிறவனாக இருக்கவேண்டும். அனைத்தையும் உள்வாங்க கூடியவனாக இருக்க வேண்டும். இந்த தருணத்தை எழுத்தில் கொண்டுவருகிறார் என்றால் அவர் எவ்வளவு உன்னிப்பாக இதை உள்வாங்கியிருக்க வேண்டும்.
தமிழ் இலக்கிய உலகில் நல்ல இசை அறிந்தவர்களுள் தி.ஜா.வும் ஒருவர். தெரிந்தோ தெரியாமலோ இவரது படைப்புகளில் அது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இசையின்றி இவரால் ஒரு சிறுகதை கூட எழுதமுடியாது என்ற அளவிற்கு இசைக்கும் தி.ஜாவுக்குமான தொடர்பு உண்டு. உதாரணமாக இந்த நாவலில் வரும் விவரணை ஒன்று,
0)   தெருவில் எங்கெங்கோ கிடக்கிற ஏழெட்டு நாய்கள் திடீரென்று நினைத்துக்கொண்டு ஒன்றுக்கூடி - கச்சேரியில் மிருதங்கம், பானைடோலக்கு, கஞ்சிரா, கொன்னக்கோல் எல்லாரும் சேர்ந்து சண்டை போடுவார்களே அதுபோல், ஒன்றின்மேல் ஒன்று விழுந்து கட்டுப்பட்டாசுப்போல் வெடிக்கின்றன.
நெல்லைக்கு பரணி. மதுரைக்கு வைகை, தஞ்சைக்கு காவேரி. தி.ஜா.வின் ஒவ்வொரு படைப்புகளிலும் காவேரி ஒரு கதாபாத்திரமாகவே வந்து செல்வாள். என்னதான் பெரும்பாலான கதை சென்னையில் நகர்வதாக இருந்தாலும் காவேரியை விடமுடியவில்லை அவரால்.
என்னை பொறுத்த அளவில் தி,ஜா.வின் படைப்புகள் முழுக்க முழுக்க இலக்கிய தரம் வாய்ந்தவை. எதற்காகவும் யாருக்காகவும் அதை அவர் சமரசம் செய்துக்கொள்வதே இல்லை. அவர் நினைத்திருந்தால் சிறிது மசாலாவை தூக்கலாகப்போட்டு நாவல் செய்திருக்க முடியும், அவருடைய நாவல்களில் அதற்கான இடமும் இருக்கிறது, ஆனால் அவர் நம்பியது அவருடைய எழுத்தை மட்டுமே..
தமிழில் வாசிக்கும் ஒரு வாசகன் தவறவிடக்கூடாதநாவலாசிரியர்

தி.ஜானகிராமன்.!

Comments

Post a Comment

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா