ஜோ டி குரூஸ்-க்கு இந்த சுள்ளானின் சில கேள்விகள்!

ஜோ டி குரூஸ்-க்கு இந்த சுள்ளானின் சில கேள்விகள்!
(அது வேற வாய்; இது வேற வாய்)
0
கடந்த மார்ச் மாத இறுதியில் அண்ணன் அகரமுதல்வனின் ஆகுதி பதிப்பகம் சார்பாக ”சாதாரண மனுசன்” ஜோ டி குரூஸ் உடனான கலை, இலக்கிய, சமகால அரசியல் குறித்த உரையாடல் ஒன்று டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பாடாகி இருந்தது. நான், சேகர், மனோ மற்றும் சிலர் கலந்து கொண்டோம். ”அவரோட எழுத்துக்களை நான் இன்னும் படிக்கலை. அவர் ஒரு அரசியல் முகமாகத்தான் என் மனசுல பதிஞ்சு இருக்காரு, அது குறித்துதான் கேட்பேன் பரவாயில்லையா”னு கேட்டுட்டுத்தான் கூட்டத்திற்கே சென்றிருந்தேன்.

இதற்கிடையில் ஜோ டி குரூஸ் எனக்கு எப்படி அறிமுகம் என்றால், அவர் சாகித்ய அகாதெமி விருது வாங்கிய போது ஒரு வினாடி வினா போட்டியில் அது குறித்த கேள்வி ஒன்று கேட்கபட்டது. நெய்தல் நிலம் குறித்து எழுதி வருகிறார் என்றும், கப்பல் துறையில் பணிபுரிகிறார் என்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்துகொண்டேன். அப்போதுதான் அந்த பெயரை கேள்விப்படுகிறேன். அதற்கு பின்னர், 2014-ல் மோடியுடன் ஒரே மேடையில் ஒய்யாரமாக நிற்கிறார்; அப்போது மீண்டும் பார்க்கிறேன்.

இந்த நிகழ்வுக்கு செல்வது என்று முடிவான உடன், அவர் குறித்து மேலும் வாசிக்க ஆரம்பித்தேன். ”வினவு” இணைய பக்கத்தில் நிறைய விஷயங்கள் வாசிக்க கிடைத்தன. அவற்றை வாசித்து, சில வீடியோக்களை பார்த்த உடனே ஓரளவுக்கு தெரியவந்தது.

உண்மையில் அந்த கூட்டத்திற்கு அதிகம் பேர் வந்திருக்க வேண்டும். அரங்கம் நிறைந்து காணப்பட்டாலும் கலந்துரையாடலும், கேள்விகளும் வெகு சாதாரணமாகவே கழிந்தன. விஷ்ணுபுரம் சரவணன் சில கேள்விகள் கேட்டார். நான் வாசித்து சென்றவற்றில் இருந்து சில கேள்விகளை முன்வைத்தேன். அதற்கு அவரது பதில் எதுவுமே திருப்தி தருவதாகவே இல்லை. எந்த கேள்விக்குமே அவர் முழுமையான பதில் அளிக்கவேயில்லை என்பதாகப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு மோடியை ஆதரித்து, ஒரே மேடையில் இந்த ஜோ டி குரூஸ் தான் பேசினார்; இப்போது அதே குரூஸ் தான் அவரை எதிர்க்கிறார். ஏன்??

இதற்குத்தான் அவர் சொன்ன பதில் இன்றைய இந்து-வில் வந்து இருக்கிறது. (அது வேற வாய் இது வேற வாய் என்ற ரீதியில் இருக்கிறது)

ஒரு சமூகத்தின் ஐகான்-ஆக இருப்பவர், சாகித்ய அகாதெமி விருது பெற்றவர், ஒரு பிரதமர் வேட்பாளருடன் ஒரே மேடையில் இருந்து அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்கிறார், ஏன் செய்தீர்கள் என்று கேட்டால் ”அவன் நல்லவனு நெனைச்சேன் இப்போ அவன் நல்லவன் இல்லனு தெரிஞ்சு போச்சு அதான் எதிர்க்குறேன்”-னு சொல்றது எவ்ளோ பெரிய அறியாமை. ஒரு சமூகத்தில் எழுத்தாளன் என்பவன் எவ்வளவு அறிவுள்ளவனாகவும் பகுத்தறியும் தன்மை உடையவனாகவும் இருக்க வேண்டும்?? கேட்டால், ”நான் எழுத்தாளனே இல்லை, சாதாரண மனிதன்” என்று சப்பைக்கட்டு கட்ட வேண்டியது. அப்பறம் ஏனய்யா அந்த விருது???

இவர் சென்று பார்த்தபோது அகமதாபாத் அப்படி முன்னேறி இருந்ததாம், (பஸ்ஸுலாம் ரோட்டுல போச்சாம், கப்பல்லாம் தண்ணியில் அப்படி மிதக்குதாம்) அதனால் அதேப்போல் தமிழகமும் ஆக வேண்டும் என்று குரல் கொடுத்தாராம். இப்போது அது அப்படி இல்லையாம். அதனால் எதிர்க்கிறாராம். ஐயா, நானும் ஒரு மாதக்காலம் குஜராத் மற்றும் அதை சுற்றி இருக்கும் இடங்கள் சென்று வந்திருக்கிறேன். நாம் பார்த்திருப்போம், சில நிறுவனங்களில் உள் கட்டமைப்பு வசதிக்காக கோடிக்கணக்கில் செலவழித்து இருப்பார்கள், எல்லாம் எதற்காக என்றால் வரும் வாடிக்கையாளரை கவர்வதற்கு, அதேதான் அங்கும். அகமதாபாத், காந்தி நகரை கடந்து விட்டால் இது என்ன பக்கத்து மாநிலமா என்று கேட்கத்தோன்றும். வெறும் பொட்டல் காடுகளும், புழுதியுமாகத்தான் இருக்கும். நாம் செல்லும் வாகனம் ஏதேனும் ஒரு இடத்தில் நின்றுவிட்டால் எந்த பக்கம் என்ன திக்கு இருக்கிறது என்று தெரியாத அளவு இருக்கும். அப்படி இருக்கும் அந்த குஜராத் மாநிலம் போல் ஆக வேண்டுமென நினைத்து தமிழகத்தில் தாமரை மலர வேண்டும் என்று கூறினாராம்.

சரி அதைவிடுங்கள். நீங்கள் கைகாட்டிய கட்சி தற்போது ஆர்.எஸ்.எஸ்-ஸின் பிடியில் இருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறும் பதில் இதுதான், ”நான் மோடி வர வேண்டும் என்றுதான் விரும்பினேன், ஆர்.எஸ்.எஸ்-க்கு நான் சப்போர்ட் செய்யவில்லை” என்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் (********) ஒன்றும் சொல்வதற்கில்லை, விடுங்கள். ஒரு சாகித்ய அகாதெமி விருது வாங்கிய தமிழ் எழுத்தாளரின் பேச்சு இப்படித்தான் இருக்கிறது.

சரி, இப்போது ஏன் பாஜகவில் இருந்து வெளியேறுகிறார்?

கவனித்து பார்த்தால் தெரியும் ஆழி சூழ் உலகு, கொற்கை ஆகிய நாவல்கள் பரவலாக பேசப்பட்ட அளவுக்கு ”அஸ்தினாபுரம்” நாவல் பேசப்படவில்லை. அவருக்கே தோணியிருக்க வேண்டும், ”நம்மீது அரசியல் முத்திரை விழுந்துவிட்டது, அதுவும் தவறான, நெகட்டிவான முத்திரை விழுந்திருக்கிறது இப்படியே சென்றால் நம் எழுத்து கவனிக்கப்படாமலையே போய்விடலாம்” என்று. ஏற்கனவே, இதன் காரணமாக இவரது புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து கொண்டிருந்த தோழர்.வ.கீதா மொழிப்பெயர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார்.  இதை கருத்தில் கொண்டே பா.ஜ.க-வில் இருந்து வெளியேறுவதை போன்றதொரு பிம்பத்தை உருவாக்குகிறாரோ என்று தோணுகிறது.

இன்னொரு முக்கிய விஷயம், இவர் தமிழ்நாட்டின் ஏதோ சமஸ்கிருத அமைப்பு தலைவராக வேறு இருக்கிறார். அதுமட்டுமில்லாது தமிழர்கள் அனைவரும் சமஸ்கிருத்த்தை கண்டிப்பாக கற்க வேண்டும் என்று வேறு கூவுகிறார்.

ஜீவா படைப்பகம் வெளியீடாக ”வேர் பிடித்த விளைநிலங்கள்” என்றதொரு புத்தகம் வேறு இப்போது வெளியிட்டிருக்கிறார். அந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆறுமுகத்தமிழன் லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதை கீழிருக்கும் வீடியோவில் காணுங்கள். கண்டிப்பாக பார்க்கவும்.

வீடியோ :

1. ஆகுதி பதிப்பகம் நடத்திய உரையாடல். (கேள்விகள் இருக்காது, அவர் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற ரீதியில் இருக்கும்)

2.   புத்தக வெளியீட்டு ஆறுமுகத்தமிழன் பேச்சு.


Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா