டிரைவர் மொழிகள்

எப்படி பேருந்து இருக்கையின் ஜன்னலோரத்தில் அமர்ந்து பயணிப்பது பேரின்பமோ அதற்கு சற்றும் குறைவில்லா அனுபவத்தை அளிக்க கூடியது, டிரைவருக்கு அருகில் இருக்கும் சீட்டில் அமர்ந்து பயணிப்பது. சில டிரைவர்கள் வண்டி ஓட்டுவதை பார்க்கையில் சூப்பர் ஸ்டாரெல்லாம் க்யூவில் நிற்க வேண்டும். அவ்வளவு ஸ்டைலாக இருக்கும்.

எங்கள் ஏரியாவில் 3-டி என்றொரு வண்டி உண்டு. திலி.சந்திப்பு டூ தாமிரபதி காலனி என்ற ரூட்டில் ஓடும். அந்த வண்டியில் எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்தே அவர் தான் டிரைவராக இருக்கிறார். அந்த வண்டியில் ஏறுவதற்கென்றே ஒரு கூட்டமிருக்கும். பேருந்தில் அவர் ஓடவிடும் பாடல்கள் அப்படி. செம்ம ரசனையான மனிதர். இப்போது வரும் பேருந்துகளில் தான் பவர் ஸ்டியரிங், பவர் கியர் எல்லாம். அது ஆதிக்காலத்து பேருந்து வகையைச் சார்ந்தது. 

நல்ல வசமாக டிரைவர் சீட்டின் பக்கவாட்டில் இருக்கும் தனி சீட்டில் அமர்ந்துக்கொள்வேன். அவர் அருகில் இருக்கும் அந்த கியர் ஒரு சிறுவனை அருகில் நிற்கவைத்தது போல் உயரமாக இருக்கும். கியர் போடுகையில் எல்லாம் அதன் தலையை ஒரு உலுக்கு உலுக்கி வலமும் இடமும் முன்னும் பின்னும் ஆட்டுவார். அதை பார்க்கும்போது, சின்ன ’ர’ பெரிய ‘ற’ மாற்றி எழுதியதற்காக எனது தமிழ் வாத்தியார் என் தலை முடியை பிடித்து ஆட்டியதுதான் நினைவு வரும். அதுவும் ஏதேனும் பெரிய திருப்பமோ, வளைவுகளோ வந்தால் குஷியாகிவிடுவேன். சர்க்கஸ் பெண்கள் இடுப்பில் ஆடும் வளையம் போல் இருக்கும் அந்த ஸ்டியரிங்கை ஒடித்து வளைத்து திருப்பி சர்ர்ர்ர்…ரென்று விட்டு மீண்டும் பிடிப்பதையெல்லாம் காண்பதற்கு கண் நூறு வேண்டும். 

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், சற்று லூசாக கட்டிருக்கும் வாட்ச்சும், ஸ்டியரிங்கில் இருந்து கையை விடுத்து தலை சீவுவதும், தண்ணீர் பாட்டில் மூடியை திறந்து குடிப்பதும் பேரழகு.
பெரும்பாலான டிரைவர்களிடம் பேசுவதற்கு அதிகம் விஷயமிருக்கும். முக்கியமாக அரசியல், கிரிக்கெட், போக்குவரத்து ஊழியர்கள் சம்பளம், ஸ்டிரைக், விடுமுறை நாட்கள். இப்படி பேசும்போது ரோட்டை பார்த்து ஓட்ட வேண்டிய அவர்கள் நம்மை பார்த்து பேசிக்கொண்டிருப்பார்கள்; முகத்தை பார்த்து பேச வேண்டிய நாம் ரோட்டை வெறித்துக்கொண்டிருப்போம் பயத்தில்…

இன்னொன்று கவனித்து இருக்கிறீர்களா? கண்டக்டர் க்டைசி சீட்டில் இருப்பார், ஆனாலும் இருவருக்கும் ஒரு உரையாடல் நடந்து கொண்டிருக்கும். ஏதாவது நிறுத்தம் வந்து கண்டக்டர் விசில் அடிக்கவில்லை என்றால் டிரைவர் ஒரு ஹார்ன் சவுண்ட் கொடுப்பார். அதாவது, நிறுத்தம் வந்துவிட்டது, ஆள் இறக்கம் இருக்கா இல்லையா என்பதற்கான குறியீடு. கண்டக்டர் டபுள் விசிலடிக்கவும் வண்டி டாப் கியரில் பறக்கும்.

அதுவும் அடுத்த வண்டியுடன் நடக்கும் போட்டிகளும் விட்டுக்கொடுத்தல்களும் சுவாரஸ்யமானவை. அது ஒரு ஜெண்டில்மென் அக்ரிமெண்ட் போன்றது.

இன்னும் நிறைய சொல்ல இருக்கிறது, ஆனால் பதிவின் நீளம் கருதி நிறுத்துகிறேன். இதோ கீழே இருக்கும் இந்த படம் அகமதாபாத்தில் இருக்கும்போது சென்ற ட்ரிப்பில் இன்னோவா ஓட்டி வந்த சாரதியின் கண்கள்.


Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா