அறம் (உண்மை மனிதர்களின் கதை) - ஜெயமோகன்

அறம்
(உண்மை மனிதர்களின் கதை)
ஜெயமோகன்

ஜெமோவை வாசிப்பதை இதுவரை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். காரணம் தெரியவில்லை. அவரைக் குறித்து என் மனதில் எழுப்பபட்டிருந்த ஒரு பிம்பம் கூட காரணமாக இருக்கலாம். அந்த பிம்பம் உண்மையானதாக கூட இருக்கலாம். ஆனால், அதை எல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டது இந்த ’அறம்’. ஜெமோவின் அதிதீவிர எதிர்ப்பாளர்கள் கூட இதை கொண்டாடுவார்கள் என்றே நினைக்கிறேன். இங்கு எழுத்து என்று எழுதப்படும் அனைத்துமே எழுதுபவரின் கதையோ அவர் பார்த்து, கேட்டு அனுபவித்த கதைகளோ தான். புனைவுகளில் கூட அவர்களது வாழ்வின் அனுபவங்களும், உணர்வுகளும் வெளிப்பட்டுவிடும். தனது சொந்த வாழ்வினூடே தான் அந்த புனைவுலகம் கட்டமைக்கப்படும். மிகுந்த யோசனையோடு தான் இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். 400 பக்கம் என்பது சற்று மலைப்பாகத்தான் இருந்தது, ’அறம்’ என்ற முதல் கதையின் இரண்டாம் பக்கத்தை தாண்டும்வரை. அதன்பின்னர், அந்த தொகுப்பை வாசிப்பது சுவாசத்தை போல இயல்பாய் நடந்துக்கொண்டேயிருந்தது. இதிலுள்ள ஒவ்வொரு கதை குறித்தும் ஒரு திறனாய்வு கட்டுரை வடிக்கலாம். ஒரு கதை என்பது அது நடந்த காலத்தை பிரதிபலிக்க வேண்டும். இன்னும் நூறு வருடம் கடந்து வாசிப்பவர்க்கும் அந்த காலக்கட்டம் எப்படி இருந்தது என்பதற்கு ஒரு சிறந்த குறிப்பாக அமைய வேண்டும். அந்த வகையில் இந்த தொகுப்பு ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். இதிலிருக்கும் ஒவ்வொரு கதையும் குறிப்பிட்ட காலகட்டத்தையும், மனித மனங்களையும் தெளிவாக உணர்த்தும்.

1. அறம்

ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை; அந்த காலங்களில் எழுதுபவர்களுக்கு இடையேயான உறவு எப்படி இருந்தது என்பதை அழகாய் உணர்த்தும் கதை. இணையமும், தொழில்நுட்பமும் பெருகிய இக்காலத்தில் ஒரு அரைப்பக்கம் எழுதுவதற்கே மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியிருக்கும் நிலையில், பல்வேறு புத்தகங்களின் மூலம் குறிப்பெடுத்து நூறு புத்தகங்கள் எழுதுவதெல்லாம் நிச்சயம் !!!! தான். மேலும், அந்த காலத்தில் எழுத்துக்கு இருந்த மரியாதையும் கவனிக்கத்தக்கது. எப்போதுமே எழுதுபவன் தான் ஏழையாக இருந்து வருகிறான், அதை வியாபாரமாக்கியவன் செழித்தே வாழ்கிறான். அவர் அந்த அம்மாவிடம் சென்று முறையிட்டதும் அந்த அம்மா கணவனுக்கு பயந்து அந்த விஷயத்தை அப்படியே விட்டிருக்கலாம், ஆனால் அவள் சரஸ்வதிக்கு பயந்தாள். கல்வி செல்வத்தின் மதிப்பறிந்தவளாய் இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இப்படி சொல்கிறாள், ”லச்சுமி வருவா போவா..சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துதான் கண்ணு பாப்பான்னு சொல்வாங்க..”  ஆம். அப்படித்தான்!!!

2. வணங்கான்

வணங்கான் என்பது வெறும் ஒரு பெயர் என்று நினைத்தால், நாம் 100 ஆண்டுகளுக்கு முந்தைய நம்மை அறியவில்லை என்றே அர்த்தம்.  ’வணங்கான்’ தான் கதைசொல்லி. இல்லை இல்லை, உண்மைசொல்லி. இதில் மூன்று தலைமுறைகளின் வாழ்வும் மனவோட்டமும் மிகத்தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. வணங்கானின் தாத்தா வாழ்ந்த காலம், வணங்கானின் அப்பா காலம், வணங்கானின் பிள்ளைகள் காலம். எப்படி ஒருவனின் உழைப்பு அவனை உயர்த்துகிறது. எப்படி ஒருவனின் எழுச்சி அவனை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. அடைப்பட்டு, அடைக்கப்பட்டு கிடந்தவன் வெகுண்டெழுந்தால் என்னவாகும் என்று விரிவாய் பேசுகிறது இந்த கதை.  ஒரு சமூகம் எவ்வாறு நசுங்கி கிடந்தது, அது எப்படி நசுக்கப்பட்டது குறித்த ஒரு மினி வரலாறே இந்த வணங்கான். இந்த கதை மிக அதிக அளவில் படிக்கப்பட வேண்டும். நமக்கு தெரியாமலையே நம்மை பீடித்திருக்கும் அடிமை சங்கிலியை அறுத்தெறிய வேண்டும்!!

3. யானை டாக்டர்

என்னுடைய ஒரே கோரிக்கை இந்த கதையை எப்படியேனும் வாசித்துவிடுங்கள் என்பதே. இது ஒரு நாவலாக வந்திருக்கலாம் என்பது என் எண்ணம். ஒரு நாவலுக்கு என்னென்ன டீடெய்லிங்க் தேவையோ அது அனைத்தும் இதிலிருக்கிறது. இதை படிக்கும்போது சில சமயங்களில் நாம் அந்த வன அலுவலராய் மாறிவிட துடிப்போம், சில இடங்களில் டாக்டர் கே -யாக மாறிவிடுவோம். ஜெமோ, சாரு போன்றோரின் எழுத்துக்களை வாசித்தால் மனிதர் மீது வன்மம் தோன்ற வாய்ப்பிருக்கிறது, ஆனால் சத்தியமாக விலங்குகளை பற்றிய புதிய பார்வை தென்படும். தனது கோரைப் பற்களால் மிரட்டிக்கொண்டிருந்த ஒரு நூறு நாய்களும்,  தந்தத்தால் கிலி ஏற்படுத்திய யானைகளும் நாவாலும், துதிக்கையாலும் நம்மை சுற்றி அமர்ந்து வருட தொடங்கிவிடுகிறது. மிஸ்டர்.ஜேமொ ஏன் விருதை வேண்டாம் என தவிர்த்தார் என்று புரிந்தது. இந்த கதையை எழுதிய பின்பு எப்படி ஜெமோவால் மத்திய அரசு தரும் ஒரு விருதை ஏற்றுக்கொள்ள முடியும்?


4. சோற்று கணக்கு

கெத்தேல் சாகிப். இந்த கதையை வாசிக்கும் எவருக்கும் ”யார்டா இந்த கெத்தேல் சாகிப்? எனக்கே பார்க்கணும்போல இருக்கே” என்று கண்டிப்பாக தோன்றும். ஒரு உறவினர் வீட்டில் தங்கி படிப்பவனுக்கு என்னென்ன வலிகள் ஏற்படும் என்று மிகத்துல்லியமாக சொல்லியிருப்பார். தனது அம்மா தனக்கு உணவு பரிமாறுவதை இப்படி விளக்குகிறார், “அவளுக்கு பரிமாறத் தெரியாது. ஒரு கண் எப்போதும் பானையில் இருக்கும் சோற்றையும் சட்டியில் இருக்கும் குழம்பையும் கணக்குப் போடுவதைத் தவிர்க்க தெரியாது. அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசி திரும்பக் கொட்டிவிடுவாள். கையோ மனமோ குறுகிவிட்டது”. வறுமையின் பிடியில் இருந்து மீண்ட பின்னும் ஒரு தாய் அந்த மனநிலையில் இருந்து வெளிவராமல் அதன் பாதிப்பில் இருந்து மீளாமல் இருப்பதை உணரமுடிகிறது. இந்த கதையில் சாகிப் நம்மிடையே அதிகம் பேசுவதில்லை. அவரது கரங்கள் தான் பேசுகின்றன. அன்னத்தை அளக்காமல் அள்ளி அளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்களின் ஈகை பண்பை அப்பட்டமாக விளக்கும் கதையிது. ”சமையலை தொழுகை போன்று செய்துக்கொண்டிருந்தார் சாகிப்”. ஆம், எவன் ஒருவன் தனது வேலையை ஆத்மார்த்தமாக செய்கிறானோ அவனுக்கே அந்த மனமும், மணமும் வசப்படும்.  எனக்கு வசதியிருந்தால் இந்த கதையை அதிகம் பேருக்கு இலவசமாக ப்ரிண்ட் செய்து கொடுக்க ஆசை.


5. நூறு நாற்காலிகள்

ஒரு தாய்க்கும் மகனுக்குமான கதை என்ற ரீதியில் தொடங்கும் இந்த கதை ஒரே ஒரு சமூகத்திற்கும் ஏனைய உலகிற்கும் இடையேயான கதை என்பது முதல் பத்து பக்கங்களை தாண்டிய பின்னர் புரிய வருகிறது. இந்த கதையை மனதில் வைத்துதான் இந்த தொகுப்பு ஒரு பொக்கிஷம் என்று கூறியிருந்தேன். ஆம், நாயாடி என்று ஒரு சமூகம் இருந்ததை நமது தலைமுறைக்கு தெரியப்படுத்தியது இந்த கதைதான். இது 0.001 சதவீதம் தான். இதுப்போன்று இன்னும் நூற்றுக்கணக்கான சமூகங்களும், இனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த கதையை படிக்கையில் என்னையறியாமலே ஒரு பயமும், மிரட்சியும் என்னை சூழ்ந்துக்கொண்டது. சிவில் சர்வீசஸ் பதவியென்பது நாட்டி உயரிய பதவியென்றும், அது கிடைத்தால் நாட்டையே தலைகீழாக மாற்றிவிடலாம் என்றும் நினைத்துக்கொண்டிருந்தேன். அதை தவிடுபொடியாக்கி, மலம் அள்ளுபவனும் நீயும் ஒன்றுதான்; அவனுக்கு 5000 சம்பளம், உனக்கு 50000 சம்பளம் அவ்வளவுதான் வித்தியாசம் என்று உணர்த்தியது. அந்த அம்மா இத்தனை மோசமாக நடந்துக்கொண்டாலும் அவர் மீது எனக்கு கோபம் வரவே இல்லை. அவர்களுக்கு அப்படித்தான் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது; சட்டை அணியக்கூடாது, நாற்காலியில் அமரக்கூடாது. அதில் ’அவர்கள்’ மட்டும்தான் அமர வேண்டும். நீங்கள் அமர்ந்தால் அடிவிழும்; சிகப்பாய் இருப்பவர்கள் ரத்தத்தை உறிபவர்கள். இங்கு சிகப்பு என்பது நிறத்தை மட்டும் குறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமூகத்தின் முந்தைய நிலையையும் வளர்ச்சியையும் மாறுதல்களையும் உணர இத்தகைய பதிவுகள் அவசியம். இதுபோன்று இன்னும் எத்தனை நூறு நாற்காலிகள் தேவைப்படும் என்று தெரியவில்லை.

6. பெருவலி

இந்த கதையில்  சில விஷயங்களை படிக்கும்போதே நம்மால் உணர முடிந்தது. வலி குறித்து கோமல் கூறும் வரிகள் முக்கியமானவை. வலியை ஒரு குழந்தை போல அவர் ஏற்றுக்கொள்கிறார். அதை வலுக்கட்டாயமாக இறக்கிவிட அவர் முயலவேயில்லை. ”இது என்னோட வலி. என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேல ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துட்டு போறது. வளத்து ஆளாக்கிருவோம்”. ஒருவரால் தனக்கு ஏற்பட்டிருக்கும் உடல் உபாதையை இப்படி சொல்ல முடியுமா? அப்படி சொன்னால், சத்தியமாக அவர் யோகியாக இருக்க வேண்டும் அல்லது எழுத்தாளனாக இருக்க வேண்டும்!!!
ஜெயகாந்தனின் கங்கை எங்கே போகிறாள் நாவலின் இறுதி பக்கங்களை வாசிக்கையில் கிளம்பி காசிக்கே போயிவிடலாம் என்று தோன்றும். அதேப் போன்று இந்த கதையை வாசிக்கும்போது இமயமலைக்கே அழைத்து சென்றுவிடுகிறார் கோமல்.

7. மத்துறு தயிர்

குரு-சிஷ்யன் கதையென்று சொல்லலாம் இதை. பேராசிரியர் கம்பரை சிலாகிக்கும் விதம் கம்பராமாயணத்தை படிக்கத்தூண்டுகிறது. சிஷ்யனுக்காக குரு ஒரு பெண்ணின் காலில் விழவும் தயாராக இருக்கிறார் என்பது, அந்த சிஷ்யனின் அருமையை உணர்த்துகிறது. இந்த கதையின் ஆகச்சிறந்த இடமாக திகழ்வது, கடைசியில் அண்ணாச்சி (ராஜம்) பேராசிரியரின் காலடி மண்ணைத் தொட்டு, இருட்டுக்குள் சென்று மறைவதாக அமைந்திருப்பதாகும். தனக்காக தனது குரு ஒரு பெண்ணின் காலில் விழும் அளவுக்கு சென்றது, அவருள் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டே இருந்திருக்க வேண்டும். ராஜம், பேராசிரியரை பார்க்காததே தன்னிகரில்லா தன் குருவுக்கு ஒரு சிஷ்யன் செய்யும் பெரும் மரியாதையாக இருக்கும்.

8. ஓலைச்சிலுவை

அந்த காலக்கட்டத்தில் இருந்த மருத்துவமனைகளின் நிலைமையை மிக தெளிவாக கூறும் கதை. எட்டு பிள்ளைகள் பெற்ற, சாமியாடி குடும்பத்தை சேர்ந்த கணவனையிழந்த ஒரு பெண் வயிற்றுப்பாடுக்காக மதம் மாறுகிறாள். இதில் பசி குறித்து ஒரு வரி வரும் “பசித்தவனுக்கு அவன் சோறுதான்”. சத்தியமான வார்த்தைகள்!!! இக்கதை குறித்து சுருக்கமாக கூற வேண்டுமென்றால், கதையின் முடிவில் சாமர்வெல் நம் மனதில் ஒரு மீட்பனாகவே தங்கிவிடுகிறார்.

9. கோட்டி

இக்கதையை படிக்கையில் ஜோக்கர் படம் நினைவுக்கு வருவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாதிய அடக்குமுறைகளை விளக்குவதன்மூலம், தற்போது அதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தையும், பெரிய அளவில் எந்த மாற்றமும் நிகழாத அதன் சமகால நிலையையும் புரிந்துக்கொள்ள முடிகிறது. கதை முழுவதும் கோட்டியாகவே வாழ்ந்து கோட்டியாகவே மடிந்து போகிறார் பூமேடை. ஆனால், அவர் கேட்கும் கேள்விகள் ஆணித்தரமாக நமது மனங்களில் தங்கி விடுகிறது.




Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா