தங்கல்


ஸ்போர்ட்ஸ் ஜானர் படங்கள் நமக்கு அத்தனை பரிச்சயமான களம் அல்ல. மசாலா படங்களையும், ஆக்ஷன் படங்களையும் பார்த்து உய்ந்துக்கொண்டிருந்த நமக்கு, கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணோ ஆணோ காலை 5 மணிக்கு எழுந்து ஓடி, பிடித்த சாப்பாட்டை சாப்பிடாமல் தியாகம் செய்து, கடுமையாக பயிற்சி எடுத்து ஒலிம்பிக்கிலோ, நேஷனல் கேம்மிலோ தங்கம் வென்று பின்னால் ”ஜனகனமன” ஒலித்தால் போதும் கண்ணில் ஜலம் வச்சுண்டு, நரம்புகள் முறுக்கேற தியேட்டரை விட்டு வெளியே வருவோம். என்னை பொறுத்தவரை தங்கல் ஒரு சாதாரண ஸ்போர்ட்ஸ் ஜானர் படம். நம்மூரில் காய்ந்து கிடந்துவிட்டு, வெளிநாட்டினர் லிப் லாக் செய்வதை ஆஆ..வென்று வேடிக்கை பார்ப்பதை போலத்தான் இதுவும். நாம் அதிகம் பார்க்காத ஒன்றை காட்டி உள்ளதால், அது நமக்கு புதியதாய் தோன்றுகிறது.
நாம் செய்யும் மிகப்பெரிய தப்பு, நம்மால் முடியாததை நம் குழந்தைகளின் மீது திணிப்பது. இதுகுறித்து ஆ..ஊ..வென்று பேசினாலும், இதைத்தான் நாம் ரசித்துக்கொண்டிருக்கிறோம். ஆமிர்கான் அந்த குழந்தைகளின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். அவர்களை அவர்களாக இருக்கவிடாமல் அவருடைய எண்ணத்தை அவர்கள் மீது திணிக்கிறார். இது எந்த அளவு சரியென்று தெரியவில்லை. அவர்கள் அதில் தேர்ந்து மெடல் வென்றிருக்கலாம்; ஆனால், ஒருவேளை ஆமிர் அவர்களை குத்துசண்டையில் ஈடுப்படுத்தாவிட்டால் ஒரு பாடகியாகவோ, எழுத்தாளராகவோ ’அவர்களுக்கு பிடித்தமாதிரி’ அவர்கள் ஆகியிருக்க கூடும்.
’இறுதிச் சுற்று’ ’சக் தே இந்தியா’ கிட்டத்தட்ட இதே கதைக்களம் தான் என்றாலும் அதில் முக்கியமான ஒரு விஷயத்தை பேசியிருப்பார்கள் “விளையாட்டு அரசியல்” அது முக்கிய பிரச்சனை; அனைவருக்கும் தெரிய வேண்டிய, வெளிச்சத்துக்கு வரவேண்டிய ஒரு பிரச்சனை; இதில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ’பாக் மில்கா பாக்’கிலும் நிறைய விஷயமிருக்கும். நிறவெறி, குடும்ப பிரச்சனை, பயிற்சியாளர், காதல் என்று நல்ல டீடெயிட்டலிங் இருக்கும். ஆனால், இதில் கூறப்பட்டிருக்கும் ஒரே விஷயம் பெண்களாலும் அனைத்து துறைகளிலும் சாதிக்கமுடியும் என்ற ஒன்றுதான். ஆனால் இன்னும் எத்தனை படங்களில் அதை மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை.
படத்தின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. கவனிக்க வைத்த இன்னொரு விஷயம் ’சவுண்ட் எடிட்டிங்’. அந்த மெடல் சுவற்றில் படும்போது உருவாகும் சத்தம், கீதாவின் முடியை வெட்டும்போது அந்த கத்தரி ஓசை போன்றவை அருமை.
இந்த படத்தை பார்த்துவிட்டு பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தங்களது விருப்பத்தை திணிக்காமல் இருக்க வேண்டும்!!!
பேசாத பல திரை மறைவு விஷயங்களை பேசும் படங்கள் இன்னும் அதிகம் வரவேண்டும்!!
தங்கல் – சாதாரண ஒரு ஸ்போர்ட்ஸ் ஜானர் படம்!

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா