என்று தணியும் காஷ்மீர்?





என்று தணியும் காஷ்மீர்?



கடந்த 100 நாட்களாக நாம் பாகிஸ்தான், தீவிரவாதம், போர்போன்ற வார்த்தைகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே வருகிறோம் அல்லது கேட்க வைக்கப்படுகிறோம்.

இந்த நிலைக்கான மூலப் பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது என்று பார்த்தால், கடந்த ஜுலை மாதம் 8ம் தேதி புர்ஹான் வானி என்றவரை இந்திய பாதுகாப்பு படை கொன்றது. இவர் யாரென்றால், இந்தியாவிற்கு எதிராக ஆசாத் காஷ்மீரில் இயங்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய இந்தியத் தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட ஜம்மு காஷ்மீர் குறித்து சமூக ஊடகங்களில், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் காஷ்மீரி மக்களைக் கவரும் வகையில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்தவர். 9 ஜுலை 2016 அன்று புர்கான் வானியின் சவ ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டனர். புர்கான் வானியின் பிணத்தை புதைப்பதற்கு முன்பு, அவரது உடலை பாகிஸ்தான் நாட்டுக் கொடியால் போர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
புர்கான் வானியின் இறப்பின் காரணமாக காஷ்மீரில் கலவரம் பரவியது. காஷ்மீர் சமவெளியில் தொடர் வன்முறை வெடித்தது. கலவரத்தில் 7,000 பொதுமக்களும் 4,000 பாதுகாப்பு படைவீரர்களும் காயமடைந்தனர். 15 ஜுலை 2016 முதல் ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீரில் அலை பேசி சேவையும் துண்டிக்கப்பட்டது 53 நாட்கள் தொடர்ந்த வன்முறைக்கு பின் அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு, 31 ஆகஸ்டு 2016 அன்று காஷ்மீரின் சில பகுதிகளில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

காஷ்மீர் பிரிவினைவாதிகளால் 70 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து, வணிக கடைகள், பள்ளிகள் இயங்கவில்லை. வன்முறைக் குழுக்களால், அமர்நாத் யாத்திரையில் கலந்து கொண்டவர்களின் முகாம்கள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பாதுக்காப்பு படையினரின் முகாம்கள் கல் வீச்சால் தாக்கப்பட்டது. காஷ்மீரில் இணையதள சேவை முடக்கப்பட்டது. ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலை மூடப்பட்டது. மேலும் போக்குவரத்து வசதியில்லாததால், அமர்நாத் யாத்திரீகர்கள் சொந்த ஊருக்கு செல்ல இயலாது தொடர்ந்து பெரும் அல்லல் உற்றனர். அரசுப் பணியிலிருந்த 200க்கும் மேற்பட்ட காஷ்மீர பண்டிதர்கள் இரவு நேரங்களில் அரசு முகாம்களில் தங்கியிருந்தனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொல்லப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த புர்கான் வானியை, ஊடகங்கள் கதாநாயகனாக சித்தரிப்பது குறித்து கடுமையாக சாடினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகுதான் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்க தொடங்கின. யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்--முகமது என்ற அமைப்பு இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி என்ற இடத்தில் தாக்குதல் நடத்தியது. இதில், இந்தியாவை சேர்ந்த 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்தியா பாகிஸ்தானின் மீது துல்லியத்தாக்குதல் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல் அனைவராலும் பரவலாக பாராட்டப்பட்ட நிலையில், இனி பாகிஸ்தானுடன் போர் புரிவது மட்டும்தான் ஒரே தீர்வு என்ற வகையில் ஒரு பிம்பம் உருவாகி வருகிறது அல்லது உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த போர் நடவடிக்கைகளை மிகச் சிலரை தவிர வேறு எந்த சாரரும் எதிர்ப்பதாக தெரியவில்லை.

பாகிஸ்தானுடனான இந்த பிரச்சனைக்கு பிறகு இந்தியா சில முக்கியமான மாநாடுகளில் பங்கேற்றது. இதில் இந்தியா முன்வைத்த ஒரே விஷயம் பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடுஎன்பதுதான். இதை பங்கேற்ற நாடுகளின் ஆழ்மனதில் பதிக்க தேவையான அனைத்து விஷயங்களையும் இந்தியா செய்து வந்தது. பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு என்பது உலகறிந்த உண்மை. அதை மீண்டும் மீண்டும் ஏன் இத்தனை முக்கியமானதாக கூற வேண்டும்?

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் அங்கும் இதைத்தான் பேசினார். இந்த பிரச்சனைக் காரணமாக, சார்க் மாநாட்டை இந்தியா புறகணித்தது. இந்தியா ஓரளவு அதிகாரம் உள்ள நாடாக பார்க்கப்படுவது சார்க் நாடுகளின் மத்தியில்தான், இங்குதான் நாம் பெரியண்ணத்தனம் பண்ணிக்கொண்டு இருக்கிறோம். இந்த மாநாட்டை புறக்கணித்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து. ஒருவேளை இதை நாம் புறக்கணிக்காது இருந்திருந்தால், இது நம் அண்டை நாடுகளுடனான உறவுகளை மேலும் மேம்படுத்தியிருக்கும். இந்த ஆண்டு, கோவா மாநிலத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் நாம் இதைத்தான் பேசி இருக்கிறோம். (ஆனால் மாநாட்டின் கொள்கை தீவிரவாதம் பேசுவது அன்று) கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடைப்பெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பொருளாதாரக் கொள்கைகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யா உடனும் (ஆயுத ஒப்பந்தம்), பிம்ஸ்டெக் மாநாட்டில் மியான்மருடனும் கையெழுத்தான ஒப்பந்தங்களை தவிர பெரிதாக எதுவும் நடக்கவில்லை. மிக முக்கியமான விஷயங்கள் பேச வேண்டிய இடங்களிலெல்லாம் நாம் பாகிஸ்தானை குற்றஞ்சாட்டியே மற்ற விஷயங்களைக் கோட்டைவிட்டுள்ளோம். அப்போ, பாகிஸ்தானை பற்றி பேச வேண்டாமா? அவர்களின் அராஜகத்தை தெரியப்படுத்த வேண்டாமா என்று கேட்கலாம். ஆம், அனைத்தும் வேண்டும் தான், ஆனால் அதற்கென்று ஒரு இடம் இருக்கிறதல்லவா? எங்கு எதை பேச வேண்டும் என்பது முக்கியம். நாம் மாநாடுகளில் இதையும் பேசியிருக்க வேண்டும், ஆனால் இதை மட்டும் பேசிவிட்டோம்.
அதுதான் பிரச்சனை!!


போர் தேவைதானா?

எங்கு பார்த்தாலும் ஒரே போர் போர் என்ற முழக்கங்கள் தான் கேட்கிறது. தற்போதைய நிலையில் போர் அவசியமா? அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன? என்பதை யோசிக்காமல் கண்மூடித்தனமாக போர் முழக்கமிட கூடாது. நம் பிரதமர் பெரிய ஆளாக இருக்கலாம், அல்லது அவ்வாறு இருப்பதாக முன்னிறுத்தபடலாம். பாகிஸ்தானை ஒரே அடியாக தூக்கி அடித்து, போரில் நாம் வென்றாலுமே குறிப்பிட்ட அளவு இழப்பு என்பது இன்றியமையாதது. தற்சமயம் எந்தவிதமான சிறு இழப்புக்கூட நமக்கு ஏற்படக்கூடாது; அதற்கு நாம் வழிவகுக்க கூடாது. இதன் மூலம் அதிகமாக பாதிக்கபடுபவர்கள் எல்லை மாநிலங்களில் இருக்கும் மக்கள்தான், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே அந்த மக்கள் அதிக அளவிலான இன்னல்களை சந்தித்துவரும் நிலையில் இந்த போர் நடவடிக்கை அவர்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்பது ஐயமில்லா உண்மை.

முடிந்த அளவு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதே இதற்கு  சரியான முடிவாக இருக்கும். ஒருவேளை அதில் முடிவு எட்டப்படாத பட்சத்தில் மேற்கொண்டு போர் நடவடிக்கைகளை தவிர்த்து வேறு நடவடிக்கைகள் எடுக்கலாம். நிறைய பேசியாகிவிட்டது, இனி பேச எதுவும் இல்லை ஒரே வீச்சுதான் என்றால், அதற்கு நாம் கொடுக்க வேண்டிய விலை அதிகமிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை முன்பு நின்றுக்கொண்டு போர் போர் என்று கத்தக்கூடாது. அங்கே லடாக் ஏரியில் இருப்பவரும் நம் சகோதரன் தான், அதுவும் நம் நாடுதான் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்!!!!


Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா