பஜன் பஜன் காலை!
பஜன் பஜன் காலை!
(18+ இல்ல)
இதோ தொடங்கிவிட்டது மார்கழி மாதம்.
மார்கழி மாதம் குளிருக்கானது என்ற பேச்செல்லாம் பழையதாகிவிட்டது. பருவநிலை மாற்றம் என்ற பெயரில் மழை பெய்யும் காலம் குளிர்கிறது, குளிர் காலம் மழை பொழிகிறது. கண்ட கண்ட இடமெல்லாம் பனி உட்புகுந்து, காதுக்குள் ஊசி குத்துவதைப் போல் இறங்கவில்லையென்றால் மார்கழி மாதத்திற்கான மரியாதையே போய்விடும். அத்தகைய மார்கழி மாதத்து மற்றொரு முக்கிய விஷயம், ’பஜனை’. நன்றாக நினைவில் நிற்கிறது, 5 வகுப்பு படிக்கையில் பனி அதிகமாக இருக்கிறது என்று மார்கழி பஜனைக்கு செல்ல வீட்டில் அனுமதிக்கவில்லை. அழுது புரண்டு ’இரண்டு மணிநேரம்’ உண்ணாவிரதமெல்லாம் இருந்துதான் அனுமதி வாங்கினேன். அன்றுத் தொடங்கி 10 வகுப்பு வரை ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்திற்காக ஏங்கி கிடந்தேன். தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோவிலிலிருந்து கிட்டத்தட்ட 130 நபர்கள் செல்வோம். 6 வயது குழந்தைகள் முதல் 60 வயது சீனியர் சிட்டிசன் வரை. தினமும் இரண்டு வீதிகள் வீதம் தியாகராஜநகர், டிவிஎஸ் நகர், திருமால் நகர், மல்லிகா காலனி இன்னும் அதை சுற்றியுள்ள பகுதிகளையெல்லாம் பஜனை பாடல்களை பாடிக்கொண்டே சுற்றி வருவோம். பிள்ளையாரில் ஆரம்பித்து, அவரது அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா, ஒன்றுவிட்ட ரெண்டுவிட்ட வகையறாக்களையும் கவர் செய்து பாடிவிடுவோம். இத்துடன் திருவெம்பாவையும்; ஆதி முதல் அந்தம் வரை அத்துப்படி. நமது குரல்வளத்தை(!!!) கண்டு 8 வகுப்பில் இருந்து பாடல் பாடும் வாய்ப்பும் நமக்கு கிடைத்தது. நாம் பாட பாட 130 பேரும் பின்னால் பாடுவார்கள்; ரொம்ப பெருமையா இருக்கும். பயங்கர பயபக்தியாலாம் போவீங்களா?ன்னா அப்படிலாம் கிடையாது. நிறைய நாள் குளிக்காமலாம் கூட போயிருக்கேன். போற வழியில நிறைய வீடுகள்ல பால், டீ-லாம் கொடுப்பாங்க. அதுமட்டுமில்லாம, பேனா, பென்சில்-லாம் வேற கொடுப்பாங்க. 5 கிளாஸ்ல இருந்து 10 கிளாஸ் வரைக்கும் நான் கடையில பேனாவே வாங்குனது இல்லனா பாத்துக்கோங்களேன்.
வாய்ப்பிருந்தால் மீண்டும் சைக்கிளை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று அதிகாலை மார்கழி பஜனையில், ………எம்பவாய் பாடவேண்டும்!!!
-தமிழ்மறவோன்
Comments
Post a Comment