எனக்கு பிடித்த பச்சை சட்டை
எனக்கு பிடித்த பச்சை சட்டை
~
என்கிட்ட ஒரு பச்சை சட்டை உண்டு. பச்சையென்றால் எந்த மாதிரி பச்சைன்னா, மாடு சாணி போட்டுட்டு அது மேலயே ஒண்ணுக்கு அடிச்சா ஒரு பச்சை வருமே.. அந்த பச்சை. அந்த சட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும். பொதுவா காலேஜுக்கு கிறுக்கன் மாதிரிதான் போவேன், ஆனா அன்னைக்கு இந்த சட்டை போட்டதால கொஞ்சம் டீசண்ட்டா, டக்-இன் பண்ணி, ஷூ போட்டு போயிருந்தேன். போற வழியிலேயே பூரா பயலும் "மச்சான் செமல; பட்டைய கெளப்புதுனு" ஆரம்பிச்சிட்டானுங்க. என்னைய யாராது இப்படி சொன்னாலோ, பாராட்டினாலோ கொஞ்சம் பயம் வந்துடும். ஆஹா, இன்னிக்கு என்ன நடக்கப்போவுதோ?? நீதான்ப்பா காப்பாத்தணும்னு முனி மேல பாரத்த போட்டு கிளாஸுக்கு போனேன். அங்க போனா நமக்கு முன்னாடியே சனியன் ஸைடு ஸ்டாண்ட் போட்டு நின்னுட்டிருக்கு. மேட்டர் என்னனா, எங்கிளாஸ்ல படிக்கிற ஒரு பொண்ணும்(!!!) அதே கலர்ல சுடிதார் போட்டு, கிளாஸுக்குள்ள போறதுக்காக பெர்மிஷன் கேட்டு வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கு. நானும் போயி வெயிட்டிங்ல ஜாயின் பண்ணிகிட்டேன். உள்ள நுழையவும் பின்னாடி பெஞ்ச்லயிருந்து "ஷ்ஷ்ஷ்" னு எவனோ ஆரம்பிச்சான், நம்மாட்களுக்கு அப்பதான் தொண்டை கட்டிக்கும், இருமல் வரும், எல்லாம் வரும். நாங்க ரெண்டு பேரும் ஏதோ பேசி வச்சு ஒரே கலர்ல போட்டு வந்ததா நினைச்சுகிட்டு இருந்தாய்ங்க பதருகள். நம்மகிட்ட ரகசியம் பேசுதேன்னு மேடையில நிக்குற டீச்சருக்கு கேக்குற மாதிரி "என்ன மச்சான் சேம் பின்ச்சா"னு கேட்டவன சாத்த சொல்லிட்டு அந்த பொண்ண பார்த்தேன். அந்த கிண்டலும் கேலியும் பொய்யா இருந்தாலும், நல்லாதான் இருந்தது. அன்னிக்கு முழுசும் உள்ளுக்குள்ள ஒரு குறுகுறுப்பு இருந்துகிட்டே இருந்தது. ரொம்ப சுறுசுறுப்பா வேலை பார்க்க முடிஞ்சுது. மதியம் ஹாஸ்டல் போகும்போது மாத்திடலாம்னு நினைச்சேன்; ஆனா அந்த குறுகுறுப்பு இன்னும் வேணும்போல இருந்ததுனால மாத்தல. அந்த பொண்ணும் மாத்திட்டு வரல (அப்ப அதான ஜெஸ்ஸி மொமண்ட்!!!) வாழ்க்கையில அப்பப்ப இந்த மாதிரி விஷயங்கள் தேவைப்படுது. ஆனா ஒண்ணு மட்டும் உண்மை மக்கழே, இது எதுவுமே பிளான் பண்ணி நடக்கல. இது ஒரு விபத்து. அதுக்கப்புறம் நானும் நிறைய தடவை அந்த சட்டைய போட்டு வருவேன். இன்னிக்காது அதே மாதிரி ஒரு சம்பவம் நடக்காதான்னு. ம்ம்ம்ம்ஹம்.. கடைசி வரை அந்த சம்பவம் நடக்கவேயில்லை. பின்னாட்களில் விசாரிக்கும்போது தான் தெரிந்தது அந்த சுடிதார் பிட்டுபிட்டாக கிழிக்கப்பட்டு ஷூ துடைக்கும் துணியாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-பஞ்சகல்யாணி
Comments
Post a Comment