இயற்கை பேரழிவு


இதுதான் உண்மையான 

"இயற்கை பேரழிவு"!!!
-----------------------------
கடந்த 2004 சுனாமி ஆகட்டும், தானேவாகட்டும், சென்ற ஆண்டு வந்த சென்னை மழை ஆகட்டும்; இவையனைத்தும் ஒரு வகை என்றால், இன்று வந்த இந்த 'வர்தா' வேறொரு வகை. அவை இயற்கையால் வந்த பேரழிவு, இது இயற்கைக்கே வந்த பேரழிவு!!! கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் புரியும், அந்த இயற்கை சீற்றத்திலெல்லாம் அதிகம் பாதிக்கப்பட்டது மனிதனும், அவனது உடைமைகளும் தான். அதற்காக இயற்கைக்கு அழிவில்லை என்று சொல்லவில்லை. 'தானே' புயலால் இயற்கை பாதிக்கப்பட்டது உண்மைதான்,ஆனால் இந்த அளவு இல்லை என்றே நினைக்கிறேன். சென்ற ஆண்டின் டிசம்பர் மழையும் அப்படித்தான். ஆனால், இந்த புயல் மொத்தமாய் வாரி சுருட்டி சென்றிருப்பது இயற்கையை. 75% இயற்கைதான் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சென்னையின் எந்த ரோட்டிற்கு சென்றாலும் அங்கு குறைந்தது நான்கு மரங்கள் விழுந்துக்கிடக்கும். சேலையை இடுப்பில் தூக்கி செருகிக்கொண்டு மரத்தை இழுத்துக்கொண்டிருக்கும் பெண்களை ஒவ்வொரு தெருவிலும் பார்க்க முடியும். தள்ளாத வயதிலும் அரிவாளால் மரக்கொப்புகளை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் தாத்தாக்கள். தெருவில் இறங்கி நடந்தால், மரண வீட்டில் நாமறியாமலையே நம்மை பீடிக்கும் சாவு வாசனைப்போல எங்கு சென்றாலும் பச்சை வாடை நம்மை அப்பிக் கொள்கிறது. கும்பல் கும்பலாக நின்று கூட்டோடு சாய்ந்த மரங்களை கூறுப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்னர் நாம் கொடுத்த உயிர் பலிகளுக்கு சற்றும் குறைவில்லாதது இந்த 
"இயற்கை பலி"!! எத்தனை எத்தனை ஆண்டுகள் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்ட மரங்கள், தான்தோன்றி மரங்கள் என்றனைத்தும் பாரபட்சமின்றி சாய்த்து தள்ளப்பட்டுள்ளது??? 
மனிதனின் மனநிலைக்கும் இயற்கைக்கும் அதிகம் சம்பந்தமுண்டு என்று சமீபத்தில் வாசித்த நினைவு. அந்த கூற்று உண்மை என்றே தற்போது தோன்றுகிறது. மனிதனின் மனம் கழிவுகளாலும், அபத்தங்களாலும் நிறைந்திருப்பதே இத்தகைய பேரழிவுகளுக்கு ஓர் முக்கிய காரணமாய் இருக்கக்கூடும். இந்த கேடுக்கெட்ட மனிதர்களிடம் இருந்து தன்னை புதுப்பித்துக்கொள்ளவே இயற்கை இத்தகைய நிகழ்வுகளை நிகழ்த்தி செல்கிறது. சுனாமியையோ, தானே புயலையோ, டிசம்பர் மழையையோ நான் நேரில் பார்க்கவில்லை; ஆனால் இந்த மரங்களில் இருந்து காற்றினூடே மிதந்து வரும் பச்சை வாடையை நுகர்கையில்..
மனித இனத்துக்கு,
அழிவு அதிக தூரமில்லை என்றே தோன்றுகிறது!!!
-தமிழ்மறவோன்.
12-12-2016
(வர்தா அன்று மாலை)

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்