'Stayfree' கணவர்



'Stayfree' கணவர்



ரயில் பயணங்கள் எப்போதும் நம்மை வெறுங்கையோடு அனுப்பிவிடாது. எவ்வளவு வெறுமையோடு ஏறினாலும் இறங்கையில் நம்மை நிறைத்துதான் அனுப்பும். உடன் பயணிப்பவரிடம் அளவளாவுவது, அவர்களின் வாழ்க்கையை அவர்கூற கேட்டறிவது, தம்பதிகளின் அன்னியோன்யம் இப்படி ஏராளமான விஷயத்தோடுதான் ரயில் நம்மை இறக்கிவிடும். அந்த வகையில், ஒரு சம்பவம். ஒரு கணவன்-மனைவி அவர்களது ஒரு வயது கைக்குழந்தை. அந்த அக்காவிற்கு காலில் எலும்பு முறிவு; பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வைத்து கட்டியிருக்கிறார்கள். நடப்பதற்கு சிரமம்தான். இந்நிலையில் அந்த அக்கா பாத்ரூம் போக உடன் அந்த கணவரும் துணைக்கு சென்றார். அந்த குழந்தையை என் பொறுப்பில் விட்டுச் சென்றிருந்தனர். திடிரென்று அந்த கணவர் மட்டும் அவசரமாக வந்தார். வந்து பைக்குள் எதையோ தேடினார். கிட்டத்தட்ட ஒரு 5 நிமிடம் பையைப் போட்டு உருட்டினார்.
"என்னண்ணே"?-இது நான்
"ஒண்ணுமில்லமா எதாவது பேப்பர் இருக்குமானு பார்த்தேன்"- இது அவர்.
என்னால் ஓரளவு யூகிக்க முடிந்தது, 
"இந்தாண்ணே" என்று காலையில் நான் படித்துவிட்டு வைத்திருந்த ஒரு செய்தித்தாளின் வெள்ளிமலரை எடுத்துக்கொடுத்தேன். அந்த செய்தித்தாளை பைக்குள் கொண்டுச்சென்று பையிலிருந்த 'Stayfree' பாக்கெட்டை அதில் சுற்றி எடுத்துச்சென்றார்.
ஏன் அவர் அதை பேப்பரில் சுற்றி எடுத்துச்செல்ல வேண்டும்?? என்று யோசிக்கையில், ஒரு ஆண் அதை பெப்பரப்பே என்று கையில் தூக்கிச்செல்ல ஒரு ஹெஸிட்டேஷன் இருக்கத்தான் செய்யும். ஆனால், இது மட்டும் காரணமாயிருக்கும் என்றெனக்கு தோணவில்லை.
நாம் இன்னும் இதை ஒரு சாதாரண விஷயமாக பார்க்கும் மனப்பக்குவத்திற்கு வரவில்லை என்றே தோன்றுகிறது. சுவாசத்தைப் போல அதுவும் இயல்பான ஒன்று என்பதை ஏற்றுக்கொள்ளும் மனம் ஏனோ நமக்கு வருவதில்லை.
ஆண்களை விட பெண்களே இதை புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான் கொடுமையின் உச்சம். ஒரு பெண் மாதவிலக்கானால் 'தீட்டு' என்று பெயரிடப்பட்டு மற்றொரு பெண்ணாலையே தீண்டத்தகாதவளாக பார்க்கப்படுகிறாள். 'தீண்டாமை ஒரு பாவச்செயல்' என்பது இதற்கும் பொருந்தும். என் தோழிகளிடம் கேட்கையில், "அந்த நாட்களில் பள்ளிக்கும் கல்லூரிக்கும் வருவதற்கே பெரும் சங்கடமாக இருக்கும். வகுப்பு நடக்கையில் இரத்தபோக்கு வந்துவிட்டால் அதைவிட பெருந்துன்பம் வேறெதும் இல்லை. இடைவேளை வரை அதைப்பொறுத்துக்கொண்டு துணிகளில் கரைப்படாமல், வேறு யாருக்கும் தெரியாத வகையில் நாப்கினை புத்தகத்துக்குள் மறைத்து வைத்துதான் கழிவறைக்கு எடுத்துசெல்வோம்" என்று கூறுவர். உச்சகட்டமாக, ஒரு தோழி தனது பையில் வைத்திருக்கும் பைபிளுக்குள் அந்த நாப்கினை வைத்திருப்பதாக கூறினாள். ஏன் என்றதற்கு அதில் வைத்தால்தான் யாருக்கும் தெரியாது; புக், நோட்டில் வைத்து யாராவது பார்த்துவிட்டால் அசிங்கமாக போய்விடும் என்றாள். ஒரே துணியை மாற்றி மாற்றி துவைத்து பயன்படுத்தி வந்த நிலை மாறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். இதுகுறித்து எவ்வளவு பேசினாலும் தீராது. பெண்களின் உடல்நலத்திற்கும் நாட்டின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி தொடர்பிருப்பது நமக்கு தெரியவேண்டும். அவர்களது உடல்நலனின் முக்கியத்துவம் புரிந்து, இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இவ்விடத்தில் மகாத்மாவின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது'
"நீ விரும்பும் மாற்றமாக நீ இரு"
-பஞ்சகல்யாணி.

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா