அவள் - அவன் - மற்றும் நான்
அவள் - அவன் - மற்றும் நான்
------------------------------------------------
26ம் நம்பர் பஸ், ஆனந்த் தியேட்டர் டூ கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வர்றதுகுள்ளான இடைப்பட்ட நேரத்தில் நடந்த சம்பவம். சுமாரான கூட்டமுள்ள பஸ். மேலிருந்து இரண்டாவது படியில் நின்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு மேல் படியில் என்னைப் போன்ற ஒரு பையனும் நின்றுக்கொண்டு வருகிறார். கண்டக்டர் தனது சிம்மாசனத்தில் அமர்ந்து டிக்கெட் வழங்கிக்கொண்டும் வழக்கம்போல் படியில் நிற்பவரை புகழ்ந்துக்கொண்டும் வந்தார். அந்த சிம்மாசனத்தை ஒட்டி, கதவுக்கு அருகில் கம்பியை பிடித்துக்கொண்டு நிற்கிறாள் ஒரு மாணவி(வயது 20 இருக்கும்). அப்போதுதான் பார்க்கிறேன், அந்த மாணவியின் பக்கவாட்டில் இருக்கும் கம்பியைப் பிடித்துக்கொண்டுதான் நான் நின்றுக்கொண்டிருக்கிறேன். அவள் சற்று திரும்பினாலோ அல்லது ஒதுங்கி மற்றவர்க்கு வழிவிட்டாலோ கண்டிப்பாக அவளது தொடையோ அல்லது இடுப்போ எனது கைகளில் அழுந்தக்கூடும். மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு, ஏதேனும் திருப்பம் வராதா, யாரேனும் இறங்க மாட்டார்களா என்று. இப்போது எதேச்சையாக எனக்கு மேல் நின்றுக்கொண்டிருந்த அந்த பையனைப் பார்க்கிறேன், அவனும் அந்த கம்பியை பிடித்துக்கொண்டு எதையோ எதிர்பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் யார் அந்த கம்பியை அங்கு பிடிப்பது என்று ஒரு அறிவிக்கப்படாத போர் போன்று எனக்கும் அவனுக்கும் நடந்துக்கொண்டிருந்தது. அந்தப்பெண் நடப்பதேதும் அறியாதவளாய் கூட்டத்தில் வழக்கம்போல கஷ்டப்பட்டு நின்றுக்கொண்டிருக்கிறாள். திடீரென்று யாரோ முகத்தில் அறைந்தது போல், காறித்துப்பியது போலிருந்தது. எதுவும் தோன்றாதவனாய் பேருந்தின் கடைசி படியில் வந்து நின்றுக்கொள்கிறேன் பத்திரமாக. அதன்பின்னர் தெரியாத்தனமாய் கூட அந்த பக்கம் திரும்பவில்லை. மனதிற்குள் என்னலாமோ கலவையான எண்ணங்கள் ஓடியபடி இருக்கின்றன. ஏன் இப்படியொரு புத்தி?
இதன் பெயர்தான் ஆண்புத்தியா??
ஏன் பெரும்பாலான ஆண்கள் இப்படி இருக்கிறோம்??
வாய்ப்பு கிடைக்காதவரைதான் அனைவரும் நல்லவர்களோ??
நான் படித்த ரமணிசந்திரனும் பாலகுமாரனும் ஜெயகாந்தனும் பெரியாரும் தள்ளி நின்று எகத்தாளமாய் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதைக் கண்டிப்பாய் எழுதி விடு எழுதிவிடு என்று உள்ளுணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது. இதோ எழுதியும் விட்டேன்.
கமெண்ட் அடிப்பதற்கு முன்பு மனக்கண்ணாடியில் உங்கள் பிம்பத்தைப் ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்!!!
-தமிழ்மறவோன்
Comments
Post a Comment