அனந்தபுரி எக்ஸ்பிரஸும் -அவளும்!!
அனந்தபுரி எக்ஸ்பிரஸும் -அவளும்!!
-------------------------------------------------------------
அவள் என்னைப் பார்த்திருப்பாளா என்று தெரியவில்லை. எக்மோர் ஸ்டேஷனின் எட்டாவது பிளாட்பாரத்தில் லோக்கல் டிரெயினுக்காக காத்திருந்தேன். என் எதிரில் ஏழாவது பிளாட்பாரத்தில் அவள் தந்தையுடன் அமர்ந்திருக்கிறாள். எங்களிருவருக்கும் இடையில் ஜோடி சேரா இரு தண்டவாளங்கள். என் யூகத்தின் படி அவள் அனந்தபுரிக்காக தான் காத்திருக்க வேண்டும். சிவப்பும் ஊதாவுமான அந்த ஆர்.எம்.கே.வி டிராவல் பேக்கை மடியில் அமர்த்தி அதன் மீது கவிழ்ந்திருந்தாள். முகம் தெரியவில்லை. ஆனால், அந்த குழல்?? ஆம், அவள் ஒரு கார்மேககுழலி!!! பின்னிய ஜடையை அவிழ்த்துவிட்டால் கருநிற அருவி விழும். உச்சி தொட்டு உள்ளங்காலுக்கு ஒன்றரை அடி மேல் வரை நீண்டிருக்கும் கூந்தலது. இந்த குழல் தானே ஒரு சமயத்தில் என் பாடுப்பொருளாய் இருந்தது?
இந்த கருநிற அருவியில்தானே நான் நனைந்து ஆனந்தப்பட எண்ணியது?
என்னென்வோ எண்ணங்கள் எனைச் சூழ, திரும்பி அவளைப் பார்த்தேன், "சென்னையிலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் அனந்தபுரி விரைவு வண்டி ஏழாம் நடைமேடையில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்படும்" என்றொரு தேன்குரல் ஒலிபெருக்கியில் ஒலித்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை அந்த தண்டவாளங்கள் இணையவே இல்லை; இணையப்போவதும் இல்லை!!!
-பஞ்சகல்யாணி
29-09-2016
Comments
Post a Comment