ஓரான் பாமுக்கை விடுத்து தோட்டியின் மகனை பிடித்த கதை!
ஓரான் பாமுக்கை விடுத்து தோட்டியின் மகனை பிடித்த கதை!
0
கடந்த வெள்ளிக்கிழமை சற்று மந்தமாக நகர்ந்துக்கொண்டிருந்தது.
என்ன செய்வதென்று யோசிக்கையில், ”ஏன் திருவல்லிகேணி போக கூடாது”? என்று தோன்ற, ”போலாமே”
என்று கிளம்பிவிட்டேன். பொதுவாக யாரையும் எதற்காகவும் எதிர்பார்ப்பதில்லை; தனியாகத்தான்
செல்வது வழக்கம். ஏற்கனவே, பழைய புத்தகங்களுக்காக தி.கேணி பாரதி வீதியில் ஒருமுறை அலைந்து
திரிந்ததுண்டு. கடந்தமுறை சென்றிருந்தபோது மூன்று அருமையான தமிழ் புத்தகங்கள் கிடைத்தது.
அதிலொன்று, முகநூலில் ‘புகழ்’ பெற்ற வளரும் எழுத்தாளர், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட
கட்டுரை (!) தொகுப்பு. ஜனவரி மாதம் வெளியான புத்தகம், மார்ச் முதல் வாரத்தில் பழைய
புத்த்க கடையில் எந்தவித சேதாரமுமின்றி கிடைத்ததை என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதில்
பக்கங்களை புரட்டி படித்த எந்தவொரு தடமும் இல்லை. அழுக்கும் இல்லை. ஒன்று அது யாருக்கோ
ஓசியில் கொடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் அல்லது ஏதேனும் மதிப்புரைக்கு அனுப்பியதாக
இருக்க வேண்டும். ஒன்று மட்டும் சொல்ல தோன்றுகிறது, புத்தகங்களை நேசிப்பவர்க்கும் மதிப்பவர்க்கும்
மட்டும் புத்தகத்தை கொடுங்கள். நோட்டீஸ் மாதிரி எல்லாருக்கும் விளம்பாதீர்கள்!
சரி, விஷயத்திற்கு வருகிறேன். கடந்தமுறை சென்றிருந்தபோதே
ஓரான் பாமுக்கின் என் பெயர் சிகப்பை பார்த்தும் வாங்காமல் விட்டுவிட்டேன். இந்தமுறை
நேராக அந்த கடைக்கு சென்று கேட்டேன், ”அப்படியொரு புக்கே இல்லையேப்பா” என்ற அண்ணனின்
கைகளில், இரண்டு தமிழ் புத்தகங்கள் இருந்தன. பிடுங்காத குறையாக அதை வாங்கிப் பார்த்தேன்.
ஒன்று, இளைஞர்களின் எழுச்சி(!) என்று சொல்லப்பட்ட கோபிநாத்தின் புத்தகம். ஏற்கனவே நான்
நிறைய சுகி.சிவம் புத்தகங்கள் படித்திருப்பதால் அதை தள்ளுபடி செய்துவிட்டு அடுத்த புத்தகத்தை
பார்த்தேன்.
காலச்சுவடு – தகழி சிவசங்கரன்பிள்ளை – சு.ரா – தோட்டியின்
மகன்!
ஒரு நொடி யோசிக்காமல்,
“எவ்ளோண்ணே”?
”75 கொடுப்பா” (புது புத்தகம். கைப்படாத கன்னி. பக்கங்களின்
மேல்பகுதி மட்டும் வெட்டுப்படாமல் சேர்ந்து சேர்ந்து இருந்தது)
வழக்கம்போல, 5 ரூபாய் குறைத்து 70 கொடுத்தேன்.
”இப்பதான் வந்தாரு தோட்டியின் மகன், வெட்டி தரலாம்னு நினைச்சேன்
அதுக்குள்ள வாங்கிட்டு போறீங்க”
”ரொம்ப நன்றிண்ணே” என்று 70 ரூபாய் கொடுத்து வாங்கிய குற்றவுணர்வுடன்
நடந்தேன்.
அடுத்த கடையில், இந்திய வரலாறு தொடர்பான புத்தகங்கள் கேட்டேன்.
India’s Struggle for Independence and Indian History
After Gandhi என்ற இரண்டு புத்தகங்களை எடுத்துக்கொடுத்தார். கொஞ்சம் மிரண்டுதான் விட்டேன்.
புதிதாக வாங்கினால் அதில் ஒரு புத்தகத்தின் விலையே 300 ரூபாய் வரும்.
”சரிண்ணே, ரேட் சொல்லுங்க”.
”450 கொடுங்க தம்பி”
”ஒரே ரேட், பைனல் ரேட் 350 ஓகே-வாண்ணே”?
கொஞ்சம் யோசித்தவர், ”சரி தம்பி கொடுங்க” என்றார்.
செம்ம..சந்தோஷத்துடன் 350 கொடுத்துவிட்டு கிளம்பினேன்.
”தம்பி, இன்னொரு ஜியாகிரபி புக் இருக்கு பாக்குறீங்களா”?
கொடுங்கண்ணே, என்று அதையும் 100 ரூபாய் கொடுத்து வாங்கி பையும்
மனமும் நிறைய நிறைய வாங்கி வந்தேன். அடுத்தமுறை இன்னும் நிறைய புத்தகங்கள் எடுத்து
வைத்திருப்பதாக சொன்னார்.
”நீங்கள் எனக்கு வெறும் புத்தகங்களை மட்டும் அளிக்கவில்லை
என்று சொல்ல தோன்றியது அவரிடம்!
தேடல் வாழ்வின் உன்னதமான நிலைக்கு நம்மை கொண்டு செல்கிறது.
(இது அனைத்துமே பழைய புத்தக கடையில் கிடைத்த புதிய புத்தகங்கள்
என்பது குறிப்பிடத்தக்கது).
Comments
Post a Comment