வாத்தியார்

நண்பர் ஒருவர் தி.ஜா-வின் ’மோகமுள்’ நாவலை சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார். என் பங்குக்கு நானும் யமுனா துதி பாடிக்கொண்டிருந்தேன். இடையிலையே எப்படி இந்த புத்தகம் அறிமுகம் ஆனது என்ற பேச்சு வந்த போது, எனது பேராசிரிய நண்பர் தான் இதை எனக்கு அறிமுகப்படுத்தினார் என்றேன். அந்த நண்பருக்கு தெரியும், நான் பொறியியல் இறுதியாண்டு படிக்கிறேன் என்று. இருந்தும் கேட்டார்,
பிகு, நீங்க பி.இ தான?
ஆமாம் தோழர். ஏன்?
அப்பறம் எப்படி இந்த புத்தகமெல்லாம் உங்க டீச்சர்ஸ் அறிமுகப்படுத்துறாங்க?
அது அப்படித்தான்!
இலக்கியம் என்று வாசிக்கத் தொடங்கிய உடன் நான் போய் நின்றது அவரிடம் தான். முதன்முதலில் எனக்கு எஸ்.ரா-வை அவர்தான் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரது அறையில் இருக்கும் புத்தக அலமாரியை சூறையாட என்னை அனுமதித்தார். அதிலிருந்து எடுத்து வாசித்ததுதான் ’கோணல் பக்கங்கள்’. பாடங்கள் பேசியதைவிட எழுத்தையும் புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் அதிகம் பேசி இருக்கிறோம். ‘கோணங்கி’ குறித்து பேசியதுண்டு, லீனா மணிமேகலையும் வாசித்திருக்கிறோம். ஆ.வி கதைகள் பேசுவோம், கல்குதிரையிலும் பயணிப்போம். ’மோகமுள்’ மீது மோகம் கொண்டது அவரால்தான், ’ராஸலீலா’வை வகுப்புக்கு செல்லாமல் விடுதியில் கிடந்து படித்தது அவரிடம் இருந்து இரவல் வாங்கித்தான். பார்த்திபனின் ’கிறுக்கல்கள்’ அவர் அளித்தது. அனைத்தையும் விட முக்கியமானது, ’மீனின் சிறகுகள்’ மூலம் ’தஞ்சை ப்ரகாஷை’ எனக்கு அறிமுகப்படுத்தியது. அம்பேத்கரையும் பெரியாரையும் என்னுள் விதைத்தது இவர்தான்.
இவரிடம் மட்டும் பேசாது போயிருந்தால் என்னவாகிருப்பேன் என்று தெரியாது. ஆனால் நிச்சயமாக ஒரு வாசகன் ஆகியிருக்கமாட்டேன்!
இன்றும் பேசுகிறோம்! இன்னும் பேசுவோம்!!

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்