என் வீக் எண்ட்!
என் வீக் எண்ட்!
0
’தமிழ் இந்து’ ஆரம்பித்த புதிதில் அதில் ’என் வீக் எண்ட்’
என்று ஒரு பகுதி வரும். நண்பர் சுந்தர் காந்தியின் அனுபவம் கூட அதில் ஒருமுறை வந்திருந்தது.
அப்போதெல்லாம் அதேப்போல் நானும் எழுத வேண்டும் என்று தோன்றும். ஆனால் சொல்லிக் கொள்ளுமளவுக்கு
(எழுதுமளவுக்கு) எனது வீக் எண்டுகள் இருந்ததில்லை. ஆனால், கடந்த ஒரு மாத காலத்தில்
எனது பெரும்பாலான வாரயிறுதிகளை நல்ல முறையில் கழித்துள்ளது எனக்கே சற்று குதூகலமாக
இருக்கிறது. அதில் அனைத்திற்கும் உச்சமாக அமைந்தது எதுவென்றால் இந்த வாரயிறுதிதான்.
ஏற்கனவே சொல்லியிருந்ததை போல வெள்ளி மாலையில் திருவல்லிகேணி
வீதியுலா மனநிறைவாக இருந்தது. அடுத்ததாக சனிக்கிழமை என்ன திட்டம் என்று யோசிக்கையில்,
வந்து நின்றது ’அண்ணா’ நூலகம். சில சொந்த வேலைகளை முடித்துவிட்டு 11.30 மணியளவில் நூலகம்
சென்றுவிட்டேன். இந்த நூலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதில் வாசகசாலைக்கு அதிக பங்குண்டு.
(இதுகுறித்து வேறொரு பதிவில் பேசலாம்). நான் வாசிக்கத் தொடங்கி இதுநாள் வரை தேடி தேடி
திரிந்ததெல்லாம் அந்த நூலகத்தின் இரண்டாம் தளத்தில் இருந்து தாய் தூக்கும் தன்பிள்ளையாய்
என்னை வாரி அணைத்துக்கொண்டது.
வெள்ளை சட்டை எடுக்கையில் எல்லா சட்டையும் வெள்ளையாக இருந்தாலும்
எந்த சட்டை எடுப்பதென்று ஒரு குழப்பம் வருவதைப்போல, எந்த புத்தகத்தை முதலில் படிப்பதென்று
ஒரு குழப்பம். ஒருவழியாக முடிவெடுத்து,
நான் வாசித்த 4 புத்தகங்கள் :
1. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் – சாரு
2. இந்திய வரலாறு காந்திக்கு
பிறகு – ராமசந்திரா குஹா
3. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
4. குறத்தி முடுக்கு (ஜி.நாகராஜன்
ஆக்கங்கள்) – காலச்சுவடு பதிப்பகம்
இவை எதுவும் முழுதாக முடிக்கவில்லை. ஒவ்வொரு புத்தகம் குறித்தும்
உள்ளுக்குள் எண்ணி எண்ணி, எப்படிச் செல்லும் இந்த கதை, சாரு என்ன சொல்ல போகிறார், ஆதவன்
தான் நமது ஆதர்சமாக இருக்க போகிறாரா?, ஜி.என் ஏன் இப்படி எழுதி நம்மை பித்துப் பிடிக்க
செய்கிறார் என்று நினைத்து மருகி, வெதும்பி, தளும்பி மீண்டும் அதை அடுத்த வாரம் படிக்கையில்
கிடைப்பதுதான் நான் பேரின்பம் என்பேன்.
ஒரு 5 மணிவாக்கில் பானை வயிறு பிசைந்தெடுந்த பின்னர்தான்
மதியம் சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வருகிறது. கீழே இறங்கி ஒரு டீ அடித்துவிட்டு
மீண்டும் மேலே சென்றேன் அங்கு ஒரு அரங்கில் நம்மூர் தமிழில் யாரோ பிச்சு உதறிக்கொண்டிருக்கும்
சத்தம்; யாரென்றுப் பார்த்தால், ’நெல்லை.கண்ணன்’
அவர்கள் பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள். சரியென்று அங்கேயே உட்கார்ந்துவிட்டேன்.
ஒருமணி நேரம் போன வேகம் தெரியவில்லை. அவர் போன பின்னர்தான் அது ஒரு புத்தக வெளியீட்டு
விழா என்றே தெரிந்தது. அருமையாக பேசினார்,
ஆனால் தப்பித்தவறிக்கூட புத்தகத்தை பற்றி பேசிவிடவில்லை.
(ஒரு பணியாரம், பருப்பு வடை, கட்லெட் ஆகியவை கொசுறாக கிடைத்தவை)
அதை முடித்துவிட்டு கீழே இறங்கினால், அண்ணா நூலகம் சார்பில்
நடத்தப்படும் ’பொன்மாலை பொழுது’ நிகழ்வில் கவிஞர். ’நெல்லை ஜெயந்தா’ பேசினார். கவிதைகள்,
மனிதர்கள், திரைத்துறை ஆளுமைகளின் வாழ்வியல் சம்பவங்கள் (தேவையானவை மட்டும்) என்று
அவர் பேசியதில் ஒருமணி நேரம் உபயோகமாக கழிந்தது.
ஞாயிறு மாலை டிஸ்கவரி புக் பேலஸில் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்-வுடன்
கலந்துரையாடல் நிகழ்விற்கு சென்றிருந்தேன். நல்ல நிகழ்வு ஆனால் இன்னும் நல்லதாக இருந்திருக்கலாம்
என்று தோன்றியது. (இது குறித்தும் தனி பதிவு எழுதுகிறேன்).
ஆசிர்வதிக்கப்பட்ட வாரயிறுதி!
-பிகு
04-04-2017
Comments
Post a Comment