எஸ்.ராமகிருஷ்ணன்
எல்லோரையும் போல எனது வாசிப்பும், எட்டாம் வகுப்பு படிக்கையில் ராஜேஷ்குமார் ரமணிசந்திரனில் இருந்தே தொடங்கியது. ஊர்ப்புற நூலகத்தில் இருக்கும் 50,60 ராஜேஷ்குமார் புத்தகங்களும் படித்தாகிவிட்டது. அடுத்ததாக என்னவென்று தேடுகையில் வந்தவர் ’சுஜாதா’. அவரை படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் சமகால தமிழிலக்கியம் புலப்படத் தொடங்கியது. சரியான வழிகாட்டுதலின்றி கண்டதையும் வாசித்துக்கொண்டிருந்தேன்.
2014-ம் ஆண்டு என்று நினைவு; நெல்லை புத்தக கண்காட்சி நடந்துக்கொண்டிருந்தது. இலக்கியத்தில் ஆர்வமும் அறிமுகமும் கொண்ட எனது கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் சென்று வாசிப்பதற்கு நூல்களை பரிந்துரைக்குமாறுக் கேட்டேன். அவர்தான் எனக்கு எஸ்.ராமகிருஷ்ணனை அறிமுகப்படுத்தினார். இதனிடையில் ஊர்ப்புற நூலகத்திலே அவரது புத்தகங்களை கண்டுக்கொண்டேன். அதுவரை வேறொரு வாசிப்பு தளத்தில் இருந்த எனக்கு, இவரது எழுத்துக்கள் முற்றிலும் புதுமையாக இருந்தது. போகிறப்போக்கில் ஒரு பெரிய மாற்றத்தை நம்மில் நிகழ்த்திவிடும்படியான எழுத்து. அடடே..ஆமால்ல என்று யோசிக்க வைத்துவிடும் எழுத்து. விகடன் மற்றும் மற்ற பத்திரிக்கைகள் தவிர்த்து சிறுகதைகள் (தொகுப்பு) என்று நான் முதலில் வாசித்தது இவரது புத்தகங்கள் தாம். இவரது வெயிலைக்கொண்டு வாருங்கள், பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது என்று குறிப்பிட்ட ஒரு குறைந்த காலக்கட்டத்தில் தொடர்ந்து வாசித்தேன். மேலும், ’தேசாந்திரி’ இதுவரை தமிழில் வெளிவந்தவற்றுள் சிறந்த பயணக்குறிப்பு என்றால் மிகையல்ல. ’சிறிது வெளிச்சம்’ ஒரு பெரும் பாய்ச்சலை என்னுள் நிகழ்த்தியிருந்தது. எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா போன்ற புத்தகங்கள் வரலாற்று பொக்கிஷம். மதுரை ‘வதனம்’ இலக்கிய அமைப்பு நடத்திய ”எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகளுடன் ஒருநாள்” என்ற நிகழ்வு இவரை மேலும் அறிந்துக்கொள்ள உதவியது. இன்னொரு விஷயம், தமிழ் எழுத்தாளர்களில் புனைப்பெயரின்றி எழுதிவரும் மிகச்சிலருள் இவரும் ஒருவர்.
.
பிறந்தநாள் வாழ்த்துகள் எஸ்.ரா! (நேற்றெழுதியது)
Comments
Post a Comment