அண்ணா நூற்றாண்டு நூலகம்!
அண்ணா நூற்றாண்டு நூலகம்!
0
மெரினா, மால்கள், மகாபலிபுரம். சென்னை வரும் ஒரு குடும்பம் அல்லது கல்வி சுற்றுலா என்ற பெயரில் வரும் மாணவர்கள் பார்க்க விரும்பும் இடங்களாக மேற்கண்டவையே இருக்கின்றன. இவை தவிர்த்து பொழுதுபோக்கிற்காக மேலும் பல இடங்களும் சென்னையில் இருக்கின்றன. ஆனால் என்னுடைய தாழ்மையான கோரிக்கை என்னவென்றால் சென்னை வரும் ஒவ்வொருவரும் சென்னையில் இருக்கும் ஒவ்வொருவரும் தவறாது செல்ல வேண்டிய இடம் ”அண்ணா நூற்றாண்டு நூலகம்”.
திமுக ஆட்சியின் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், கல்வி சூழலில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த வகையில் இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழக மக்களுக்கு, குறிப்பாக சென்னை மக்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரம். சுமார் 8 தளங்கள், கோடிக்கணக்கான புத்தகங்கள், குளிர்சாதன வசதி, குடிநீர் வசதி, லிப்ட் வசதி என்று அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு ஒரு பொக்கிஷமாக ஓங்கியுர்ந்து நிற்கிறது. அரசு மருத்துவமனையில் கூட இத்தனை பணியாளர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. இங்கு அத்தனை பணியாளர்கள் இருக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளின் முக்கியமான படைப்புகள், அறிவியல் புத்தகங்கள், மருத்துவம், பொறியியல் என்று அனைத்து துறைசார் புத்தகங்களும் குவிந்து கிடக்கிறது.
2016 ஜூன் மாதத்தில் இருந்து சென்னையில் இருந்தாலும் கடந்த இரண்டு மாதங்களாகத்தான் இந்த நூலகம் சென்று வருகிறேன். இந்த நூலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதில் #வாசகசாலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நான் ஜி.நாகராஜனை தெரிந்துக்கொண்டதும், ஆதவனை ஆதர்சமாக ஏற்றுக்கொண்டதும் இங்குதான். இடையில் சில காரணங்களால் புதிய புத்தகங்கள் வாங்கப்படாமல் இருந்திருக்கிறது. தற்போது அதிக அளவில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
வாரயிறுதிகளில் சுற்றுலா செல்வதுப்போல் குடும்பத்துடன் சோத்துமூட்டையை கட்டிக்கொண்டு சென்றுவிடுங்கள். குழந்தைகளை புத்தகங்களுடன் பழகவிடுங்கள், அந்த ஸ்பரிசத்தை உணரச்செய்யுங்கள். இதன்மூலம் புத்தகத்தின்பால் ஒரு பிடிப்பை உண்டாக்கலாம். ஒரு சிறந்த வீக் எண்டிற்கு ’அண்ணா நூற்றாண்டு நூலகம்’ செல்லலாம்.
போட்டித்தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு இது ஒரு பெரும் வரம். படிப்பதற்கான சூழல் இங்கு இயற்கையாகவே அமைந்துள்ளது, அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நூலகம் என்றால் எல்லாம் இருக்கத்தானே செய்யும், இதிலென்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.
சரிதான். ஆனால், இதில் ஏதோ இருக்கிறது.. சென்று பாருங்கள்!
உலக புத்தக தினம் இன்று!
-பிகு
Comments
Post a Comment