நேட்டிவிட்டி


”எந்த ஊர் நீங்க?”
”திருநெவேலி-ங்க”
”திருநெவேலி-யா? ஆனா உங்க பேச்சுல திருநெவேலி பாஷையே வரலையே!!”
என்னிடம் அறிமுகமாகும் நண்பர்கள் பெரும்பாலும் இதையே தான் கூறுகின்றனர். உண்மைதான், நான் பேசுகையில் திருநெவேலி வாடை ரொம்ப குறைவாகவே அடிக்கும். தி.வேலியின் மையமான பாளையங்கோட்டையில் இருந்து வந்தாலும் ஏனோ அந்த ஸ்லாங் என்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நான் படித்த பள்ளியும் கல்லூரியும் கூட காரணமாக இருக்கலாம். மேலும் சிறுவயதில் இருந்தே மேடைப் பேச்சுக்களில் பேசியதன் விளைவாக, அந்த பேச்சே என் நாவில் வேதாளமாய் ஒட்டிக்கொண்டிருக்குமோ என்றும் தோன்றுகிறது. முடிந்த அளவு எங்கள் ஸ்லாங்கை விட்டுவிடாமல், நண்பர்களிடம் பேசும் சமயங்களில் எல்லாம் கெட்டியாக பிடித்தே வருகிறேன். தோழிகளிடம் அதிகம் பேசுவதால் என்னமோ பேச்சுக்களில் ’டா’ அதிகமாக விழுகிறது. இப்போதெல்லாம் தோழர்களிடம் பேசும்போது மிக கவனமாக வலிந்துபோய் ’ல’ போட்டு பேசுகிறேன். இன்னொரு விஷயம், திருநெவேலி ஸ்லாங் என்பது படங்களில் ’நெல்லை’ சிவா பேசுவதும், பாபநாசத்தில் உ.நாயகன் பேசியது மட்டும் அல்ல. ஏகப்பட்ட ஸ்லாங் இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கு, ஒவ்வொரு சமூகத்திற்கு என்று பேச்சுவழக்கு மாறும். 

அதேப்போல் சாப்பிடுவதில் கூட நேட்டிவிட்டியை விட்டு தள்ளிப் போய்கொண்டிருக்கிறோம் என்று தொணுகிறது. ஆந்திர நண்பன் ஒருவன் இருக்கிறான், பெரும்பாலும் ஸ்பூனில் தான் சாப்பிடுவான்; சாப்பிடும்போது கையில் அந்த குழம்போ மோரோ பட்டுவிட்டால் அவ்வளவு அருவருப்புப்படுவான். நமக்கு அப்படிலாம் சாப்பிட முடியாது, புறங்கையில் வழியும் ரசத்தை உர்..ரென்று உறிவதில் தான் இருக்கிறது அறுசுவையை தாண்டிய ’அந்த’ சுவை என்று நம்புவன் நான். தேவதையின் இடை தரும் சுவைக்கு ஒப்பானது பாயாசமும் தயிரும் இணையும் அந்த புள்ளி!
ஒருமுறை வெளிநாட்டுக்காரர் ஒருவர் கேட்டாராம்,
“வெறும் கையில் சாப்பிடுகிறீர்களே உங்களுக்கு அசிங்கமாக இல்லையா?? ஸ்பூன் வைத்துக்கொள்ளலாமே”
”யார் யாரோ சாப்பிட்ட எச்சில் ஸ்பூனில் சாப்பிடுவதை விட நம் கையால் சாப்பிடுவது ஒன்றும் அசிங்கமில்லை” என்றாராம் யாரோ ஒருவர்!
நேட்டிவிட்டியை விட்டுவிடாதீர்கள்; அதுவே நம் சொந்த ஊரில் இருப்பதைப்போன்ற உணர்வைக் கொடுக்கவல்லது.
-பிகு

21-05-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா