தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு 1

தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு
”யானையின் சாவு ”
– சார்வாகன்
சமீபமாக தமிழின் முன்னோடி எழுத்தாளர்களை வாசித்து வருகிறேன். அந்த வரிசையில் இன்று எழுத்தாளர் சார்வாகன் எழுதிய “யானையின் சாவு” சிறுகதை. சிறுகதை என்றால் பொதுவாக சொல்லப்படும் விஷயம், நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை ஆழ்ந்து நோக்கி சுவைப்பட எழுதினாலே சிறுகதை கிடைத்துவிடும். ஒவ்வொருவரையும் சுற்றி ஏராளமான விஷயங்கள் தினந்தோறும் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், அதை எழுத்தாக்குவது என்பது சிலருக்கு மட்டுமே கைக்கூடும். அந்த வகையில் சார்வாகனின் இந்த கதை ஒரு க்ளாஸிக்.
கதைக்களம் என்று எடுத்துக்கொண்டால், மிகவும் எதார்த்தமான ஒரு விஷயம் தான். யானை பொம்மை வேண்டும் என்று ஒரு குழந்தை தன் தந்தையிடம் அடம்பிடிக்கிறது. முதலில் மறுக்கும் அந்த தந்தை, பின்னர் மரத்தாலான ஒரு யானை பொம்மையை வாங்கிகொடுக்கிறான். அந்த குழந்தையோ அதை பொம்மை என்று ஏற்க மறுத்து, ஜீவனுள்ள ஒரு உயிரினமாகவே பார்க்கிறது. அந்த தந்தை எவ்வளவோ முயன்று பார்த்தும் அந்த குழந்தைக்கு புரிய வைக்க முடியவில்லை. இது அந்த கதையின் முதல் பாதி. இதுவரை சாதாரணமாக செல்லும் இந்த கதை இதற்கு பின் அப்படியே மாறி, எதிர்பாரா திசை சென்று முடிகிறது.
ஒரு குழந்தை, தந்தை, ஒரு யானை பொம்மை இதை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வளவு லாவகமாக ஒரு கதையை படைத்திருப்பது ஆச்சரியம். இப்போது மொழி, மொழி என்று பல தரப்புகளில் விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த கதையில் மொழியை மிக அழகாக கையாண்டிருக்கிறார் சார்வாகன். படிப்பவருக்கு எரிச்சலூட்டாமல் எழுதுவது தனிக்கலை. அது சார்வாகனுக்கு இயல்பாகவே வருகிறது. ஆற்றுப்படுகையில் அந்திசாயும் வேளையில் மண்ணுள் கால் பொதிய நடப்பதைப்போன்று இலகுவாக இருக்கிறது அவரை வாசிப்பது. அவரது வார்த்தைகளுடன் எளிதாக ஒன்றிவிட முடிகிறது. இவரது கதைகளை படிப்பதற்கு எவ்வித பிரயத்தனங்களும் தேவைப்படுவதில்லை.
 மேலும், இவரது கதைகளில் ஒரு எள்ளலும், நகைச்சுவை கூடவே வருகிறது. பச்சை யானை, ரோஸ் வாய், எலுமிச்சை மஞ்சள் தந்தம், யானை மீன் விளையாட்டு என்று வாசிக்கையில் ஒரு சிறு புன்னகை நம்மையறியாமலையே வந்து தொற்றிக்கொள்கிறது.
சாரு இவரைப்பற்றி குறிப்பிட்டு தனது பழுப்பு நிறப்பக்கங்களில் எழுதியிருக்கிறார். நற்றிணை பதிப்பகம் இவரது சிறுகதைகளை தொகுத்து ”சார்வாகன் சிறுகதைகள்” என்று வெளியிட்டுள்ளது.
சார்வாகனை கஷ்டப்படாமல் இஷ்டப்பட்டு வாசிக்கலாம்!
-பிகு
#தமிழ்ச்_சிறுகதை_நூற்றாண்டு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா