ஊருக்குச் செல்லும் வழி – நூல் விமர்சனம்

”ஊருக்குச் செல்லும் வழி – கார்த்திக் புகழேந்தி”


அண்ணன் கார்த்திக் புகழேந்திக்கு வாழ்த்துகள்.
நேற்றுதான் அவர் எழுதிய “ஊருக்குச் செல்லும் வழி” கட்டுரைத் தொகுப்பு படிக்க நேர்ந்தது. கி.ரா-வின் வளர்ப்பு சோடைப் போகாது என்று மீண்டுமொருமுறை நிருபித்துள்ளார் கா.பு. நானும் திருநெல்வேலிக்காரன் என்பதால் நிறைய இடங்களில் புத்தகத்தில் இருந்த எழுத்துக்கள் காட்சிகளாக மனக்கண் முன் விரிந்துச் சென்றது.


ஆவி பறக்கும் இட்’டி’லி; இதன் தலைப்பே மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. ‘இட்லி’ என்பதே எழுத்து வடிவம் ஆனால் அதை இட்டிலி என்ற எழுதுவதன் மூலம் நம்முடன் இயல்பாக உரையாட தொடங்கிவிடுகிறார். ஒரு நிகழ்ச்சியை விவரிப்பது என்பது அதை நம்முன் நிகழச் செய்வதை போலிருக்க வேண்டும். அந்த வகையில் பெண் பார்க்கும் படலத்தின் போது ஒரு வீட்டில் நடக்கும் நிகழ்வை அந்த வீட்டின் சூழலோடு அழகாக விவரித்திருப்பார்.
இவருக்கும் எனக்கும் இன்னொரு ஒற்றுமை. அவர் படித்தது கிறிஸ்து ஜோதி, நான் கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி. ரெண்டும் ஒரே குழுமம் தான். அவர் ஹாக்கி, நான் ஹேண்ட் பால்; அவரும் சப்ஸ்டியூட், நானும் சப்ஸ்டியூட்!
’ஊருக்குச் செல்லும் வழி’யில் ஒரு வரி வரும், ”மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு இடையே உள்ள தூரத்தை கடக்கும் அவகாசம்தான் உலகிலே கொடுமையான சித்ரவதை நிறைந்த தருணம்”. கிளாஸிக்!
அரங்க ஆட்டத்தில் வரும் தியேட்டர்களைப் பற்றிய தகவல்கள் மிகவும் நெருக்கமானதாய் தோன்றின. அந்த பாளை பஸ்-ஸ்டாண்ட் எதிரில் இருக்கும் (கமிஷ்னர் ஆபீஸ்) சுவர்தான், ராம்-முத்துராமின் ஆஸ்தான விளம்பர ஸ்தலம். பேருந்தில் அந்த இடத்தை கடக்கும்போதெல்லாம் அதில் வரைந்திருக்கும் நடிகர்களின் படங்களை வாய்ப்பிளந்து பார்ப்பதே பேருவகையாக இருக்கும். திருநெல்வேலிக்காரனுக்கே அதனருமை புரியும்! (இப்போது லக்ஷ்மி தியேட்டரும், பார்வதி தியேட்டரும் திருமண மண்டபமாகிப் போனது)
’பேருயிர்’ என்ற தலைப்பில் யானைகள் குறித்து எழுதியிருப்பார். இந்த தொகுப்பில் என் மனதுக்கு நெருக்கமானது இதுதான். அழியும் பேருயிர் புத்தகத்தையும் வாசிக்க வேண்டும்!
இன்னொரு முக்கிய பகுதி ’அம்மன் சன்னதி’. இதுகுறித்து தி.க.சி, புதுமைப்பித்தன், வண்ணதாசன், நெல்லை கண்ணன் என்று அனைவரும் எழுதியாகிவிட்டது. ஆனால் இன்னமும் அதுகுறித்து எழுதி எழுதி உய்யலாம். அதுதான் அதன் சிறப்பு. மேலும், திரு. நெல்லை கண்ணனின் தமிழுக்கு நான் ரசிகன் என்றாலும் அவர் குறித்து எனது பார்வை வேறு என்பதால் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.
’வணங்கான் கதை’. இதை ஏற்கனவே அறம் தொகுப்பில் படித்திருப்போம். மீண்டும் எதற்கு இதிலும் எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. ’தண்ணீர்’ குறித்து அண்ணன் கா.பு எழுதியிருப்பது சற்று முக்கியமான விஷயம். 
இதற்கு முன்பு கழனியூரனிடம் நெல்லை தமிழையும், நாஞ்சில் நாடனிடம் ’நாரோயில்’ தமிழையும், சமீபமாக என்.ஸ்ரீராமின் எழுத்துக்களில் கொங்கு நாட்டு தமிழையும் வாசித்து இருக்கிறேன். அந்த வகையில் இவர்
திருநெல்வேலி தமிழில் அநாயசமாக அடித்து ஆடுகிறார். இயல்பாகவே அண்ணனிடம் நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதை தன் எழுத்துக்களிலும் அங்கங்கு தெளித்துவிடுகிறார்; தெறிக்கவிடுகிறார்!!
புத்தகத்தைப் படிக்கையில் முகத்தில் ஒரு புன்னகை இருந்துக்கொண்டே இருக்கிறது, இறுதிவரை.


ஆனால், படித்துக்கொண்டிருக்கும் போதே திடீரென்று ஒரு சந்தேகம்; இவையெல்லாம் கட்டுரைகள் தானா? என்று. கவனித்துப் பார்த்தால் தெரியும் இதில் எங்குமே கட்டுரை என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியிருக்கமாட்டேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவேளை நேற்று முன்தினம் நாஞ்சில் நாடனின் ‘காவலன் காவான் எனின்’ என்ற கட்டுரைத்தொகுப்பை படித்ததுக் கூட காரணமாக இருக்கலாம். அதில் எண்ணிப்பார்த்தால் பத்து பன்னிரெண்டு கட்டுரைகள் தான் இருக்கும். நான் எண்ணிக்கை மட்டும் காரணமாக சொல்லவில்லை. அவை ஒவ்வொன்றும் அத்தனை செறிவான கட்டுரைகள். அனைத்திலும் ஒரு டீடெய்லிங் இருந்தது. ஆனால், கா.பு,வின் இந்த தொகுப்பில் அந்த டீடெய்லிங் மிஸ்ஸிங்.
அவரது முகநூல் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையில் இது அவரது முகநூல் பதிவுகளின் ஒரு தொகுப்பாகத்தான் எனக்குத் தெரிகிறது. சென்ற வருடம் இன்னொருவரும் இதேப்போன்று தனது முகநூல் பதிவுகளை புத்தகமாக்கினார். ”அதான் உங்க பதிவுகளை முகநூல்லயே படிக்குறோமே அப்பறம் எதுக்கு காசு கொடுத்து வேற வாங்கிப்படிக்கணும்?”னு ஒரு நண்பர் அவரிடம் கேட்டதாக ஞாபகம். எனக்கும் அது சரியென்றே தோன்றியது. ஒருவேளை மொத்த பதிவுகளை தொகுக்க வேண்டும் என்று நினைத்தால் பிடிஎப்-ஆக தொகுத்து, கேட்பவருக்கு அளிக்கலாம். முகநூல் பதிவுகளை புத்தகமாக்க விரும்பினால், அட்டையிலே போட்டுவிடுங்கள் ”இது எனது முகநூல் பதிவுகளின் தொகுப்பு” என்று. தொகுப்பை வாசித்த (விமர்சித்த) எவரும் இதைப்பற்றி பேசாதது ஏனென்று தெரியவில்லை. எழுதுபவனுக்காக பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. எழுத்துக்காக பேசுவது மட்டுமே எழுத்தாளனுக்கு சரியான அங்கீகாரம்.
மற்றொரு விஷயம் இதில் வரும் வெகு சில அத்தியாயங்களை தவிர பெரும்பாலான அத்தியாயங்கள் தன் வரலாறு போலவும், சுயசரிதை போலவும் தோன்றுவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் என்று சொல்கிறார், சரி, அப்புறம்? என்று கேட்கையில் ”அவ்வளவுதான்” என்று முடித்துவிடுகிறார்.
ஒரு தருணத்தில் அண்ணன் சொன்னதுண்டு “நான் பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்புவதில்லை” என்று. ஒருவேளை அவர் பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பினால் இன்னும் செறிவான கட்டுரைகளை அண்ணனிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். முகநூலிலே எழுதுவதால் ஒரு தேக்கம் ஏற்படுகிறதோ என்று தோணுகிறது. உள்ளுக்குள் ஓராயிரம் விஷயங்களை வைத்திருக்கிறார். அனைத்தையும் போட்டு உடைக்க வேண்டும்! என்பதே நேயர் விருப்பம்.
மீண்டும் சொல்லுகிறேன், அவனது எழுத்துக்காக பேசுவது மட்டுமே எழுத்தாளனுக்கு சரியான அங்கீகாரம்!


எனக்கு பெரிய அளவு வாசிப்பனுபவமோ எழுத்தனுபவமோ கிடையாது. ”ஊருக்குச் செல்லும் வழி”யில் என்னவெல்லாம் மனதுக்குள் தோன்றியதோ அப்படியே கொட்டி வைத்திருக்கிறேன். அவ்வளவுதான்!
”ஊருக்குச் செல்லும் வழியை இன்னும் செம்மையாக சொல்லிருக்கலாம்”.



-பிகு
05-03-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா