#வாசகசாலை 3

தமிழ் சிறுகதை நூற்றாண்டை கொண்டாடும் வகையில் வாரா வாரம் #வாசகசாலை சார்பில் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் சிறுகதை கலந்துரையாடல் நிகழ்வு நடந்து வருகிறது. கடந்த இரு அமர்வுகளிலும் கலந்துக்கொண்டேன். நேற்றைய நிகழ்வுக்கான மூன்று கதைகள்,
1. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை
2. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி
3. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா

பெண்கள் எழுதிய மூன்று கதைகளை எடுத்துக்கொண்டு மூன்று பெண்களை பேச வைத்தது நல்ல முயற்சி.
அம்பையின் கட்டுரைகளை ஆங்காங்கே கடந்து வந்திருந்தாலும், இப்பொழுதுதான் கதைகள் வாசிக்க தொடங்கி இருக்கிறேன். இந்த கதை குறித்து சில்வியா பிளாத் நன்றாகவே பேசினார். ஆனாலும் ஏதோ முழுமை பெறாத ஒரு உணர்வு. இன்னும் நன்றாக பேசியிருக்கலாம் என்பதென் எண்ணம்.
அடுத்த கதைகள் உமா மகேஸ்வரியின் ’மரப்பாச்சி’ மற்றும் சந்திராவின் ’பூனைகள் இல்லாத வீடு’. இதைப்பற்றி பேசிய கீர்த்தனாவும் சிந்துவும் தெளிவாக கதையை விளக்கினார்கள். மரப்பாச்சி-யின் கதைக்கரு அற்புதமானதுதான், ஆனால் அதை எழுத்தில் பார்க்கையில் கொஞ்சம் இழுத்தடிப்பதுப் போலிருந்தது.
இதற்கு முன், சந்திராவின் கவிதைகள் வாசித்ததுண்டு, அவரது பேச்சை கேட்டதுண்டு. நல்ல படைப்பாளி. ஆனால், இந்த கதை அவ்வளவாக ஈர்க்கவில்லை.
இந்த இரு கதைகளையும் வாசிக்கையிலே நீங்கள் கண்டுபிடித்துவிடலாம் இதை எழுதியவர்கள் கவிஞர்கள் தான் என்று. இந்த இரு கதைகளுமே ஒரு நீள் கவிதையின் நீட்சியாகத்தான் எனக்கு தெரிந்தது. வண்ணதாசனை வாசிக்கையில் இப்படி தோன்றும் ஆனால் அதில் சலிப்பு தட்டாது. இதில் நிறைய விஷயங்கள் வளவள-வென்று பேசியிருப்பது போலிருந்தது.

சிறுகதை எழுதுவது குறித்து தி.ஜா. சொல்லியிருப்பார், ”தேவையில்லாத ஒரு வார்த்தைக்கூட கதையில் இருக்கக்கூடாது” என்று. நாவல் எழுதும் தி.ஜா. வேறு, சிறுகதை எழுதும் தி.ஜா. வேறு. 
 சுஜாதாவின் எழுத்துக்களிலும் இதைப் பார்க்க முடியும். ஒரு வார்த்தையோ, வர்ணனையோ அதிகமாக இருக்காது. இதைத் தவிர கதைக்குறித்து பேச அதிகமிருக்கிறது.

பெண்கள் குறித்த கதைகளை ஆண்கள் பேசியிருந்தால் வேறொரு பார்வையில் நிகழ்வு இருந்திருக்குமோ என்று தோன்றியது. மேலும், பேச வருபவர்கள் நேரத்திற்கு தகுந்தவாறு தங்களது content-ஐ கூட்டி குறைத்து பேச முயற்சிக்கலாம் அல்லது உறுப்பினர்கள் அவர்களிடம் சொல்லிவிடலாம் கால் மணி நேரம் கதைக்குறித்து நீங்கள் பேசுங்கள், கால் மணிநேரம் கலந்துரையாடல் போல் கொண்டு செல்லலாம் என்று. இப்படி செய்வதன் மூலம் கலந்துரையாடலுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்.
வாழ்த்துகள் வாசகசாலைக்கு! 
 -பிகு
13-03-2017
கதைகளை வாசிக்க விரும்புவோருக்காக...!
1. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை - http://azhiyasudargal.blogspot.in/2010/05/blog-post_17.html
2. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா - https://www.yarl.com/…/185784-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%…/
3. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி - http://azhiyasudargal.blogspot.in/2010/10/blog-post_23.html

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா