சுஜாதா

சுஜாதா இலக்கியவியாதியா இல்லையா என்ற வாதமெல்லாம் ஒருபுறம் நடந்துக்கொண்டே இருக்கட்டும். ஒன்று மட்டும் நிச்சயம், தமிழ் வாசிப்புலகுக்குள் ஒருவரை கொண்டுவர சுஜாதா நிச்சயமாக தேவைப்படுகிறார் என்றுதான் சொல்லவேண்டும். சுஜாதாவின் எழுத்தை உலகத்தரம் வாய்ந்த எழுத்தென்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால் சுஜாதா அளவிற்கு தமிழ் படைப்புலகில் யாரும் எழுதி இருக்கிறார்களா என்று கிளறிப்பார்த்தால், யாருமேயில்லை இதுவரையிலும்; இனிமேலும் வருவார்களா என்று சொல்ல முடியாது.
வாசிப்புக்குள் வரும் ஒருவனை தமிழ் இலக்கியத்தை நோக்கி மடைமாற்ற சுஜாதா பெரிதும் உதவுகிறார். இந்த தலைமுறையின் பெரும்பாலான வாசகர்களுக்கு தாங்கள் வாசிக்க தொடங்கிய பின்னான முதல் அறிமுகம் சுஜாதாவாகத்தான் இருக்கும்; சிலருக்கு ராஜேஷ்குமார், பி.கே.பி வகையறாக்கள் முதல் வாசிப்பாக இருந்தாலும் சுஜாதாவை தாண்டித்தான் அனைவரும் வந்தாக வேண்டும். அப்படி வருகையில், ஒரு பெரும் சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிடுகிறார் சுஜாதா. அடடே.., இந்த கதைகளெல்லாம், நாவலெல்லாம் செம்ம இண்ட்ரெஸ்டிங்கா இருக்கே என்று, தொடர்ந்து வாசிக்க தொடங்குவான்.
ஒரு கட்டத்தில் மெதுவாக வேறு திசைக்கு செல்ல ஆரம்பிப்பான். அங்கும் சுஜாதாவைத்தான் தேடுவான், ஆனால் அங்கு சுஜாதா இருக்கமாட்டார்; முற்றிலும் வேறொரு தளத்தில் நின்றுக்கொண்டிருப்பான். இதற்குள்ளாக ஜெயகாந்தனும், அசோகமித்திரனும் அவனது கைகளில் தவழ்ந்துக்கொண்டிருப்பர். அதற்குபின் அவனது தேடலையும் ஆர்வத்தையும் பொறுத்து நகுலனும் தி.ஜா.வும் அவனயறியாமலையே உள்நுழைவர்.
சுஜாதாவின் கனவுத்தொழிற்சாலை வாசித்தேன். சுஜாதாவின் நாவல்களில் அதிக பக்கம் கொண்டது இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். விகடனில் தொடராக வந்தபோது பெரும் வரவேற்பை பெற்றதாம். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில் இதன் கதைக்களம் ”சினிமா”; இது ஒன்று போதாதா??
இதில் கதையென்று பெரிதாக ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. அந்த காலகட்டத்தில் இருந்த சினிமா உலகம் எப்படி இருக்கும் என்பதன் எழுத்துவடிவம் தான் இந்த கனவுத் தொழிற்சாலை. முதல் பத்தி வாசித்த மாதிரிதான் இருந்தது, அதற்குள் புத்தகம் முடிந்துவிட்டது. ஆனால் கதையின் சாராம்சம் என்று திருப்பி பார்த்தால் ஒன்றுமேயில்லை.
சரி, அதான் ஒன்றுமில்லையே பின்னர் எதற்கு படிக்க வேண்டும்??
ஒரே காரணம் சுவாரஸ்யம்!
வாசகர்களை எப்படி கட்டிப்போடுவது, கவர்வது என்று எல்லாமும் தெரிந்து வைத்திருக்கிறார் வாத்தியார். மேலும், அந்த துடுக்கான நய்யாண்டியான எழுத்தெல்லாம் ஒன் அண்ட் ஒன்லி சுஜாதா ஸ்பெஷல் என்றுதான் சொல்ல வேண்டும்.

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா