சௌந்தர்யா

பொழுது போகவில்லை; போரடிக்கிறது; என்ன பண்ணலாம் என்று யோசிக்கும்போது நமக்கு பிடித்த வீடியோ சாங் ஒன்றை பார்ப்போம் இல்லையா?? எனக்கு அப்படி தோணும்போதெல்லாம் நான் பார்க்கும் பாடல் இதுதான்.
சூப்பர் ஸ்டாரை விட்டுவிடுங்கள்; ஏ.ஆர்.ரகுமானையும் விடுங்கள்; வைரமுத்துவையும் பிறகு பார்க்கலாம். நான் சொல்ல வருவது சௌந்தர்யாவை பற்றி.
எனக்கு எதும் ஃபோபியாவா என்று தெரியவில்லை. 80,90-களில் திரையில் தோன்றிய நடிகைகளை அதிகம் பிடித்து தொலைக்கிறது. அதில் முக்கியமானவர் ”சௌந்தர்யா”.
”கோணவாய்” என்று சொல்வார்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. இவருக்கு அப்படித்தான். (இது உருவத்தை கேலி செய்வதற்காக சொல்லவில்லை) நமக்கு பரிச்சயமானவர்களில் நடிகர் அர்ஜூன், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கும் இப்படித்தான் இருக்கும். கூர்ந்து கவனித்தால் தெரியும் இவர்கள் சிரிக்கும்போது கூடுதல் அழகாக இருக்கும். கவனித்து பாருங்கள்.
பாடலின் தொடக்கத்தில் ”ஹோ..” என்றொரு குரல் வரும். அதற்கு இவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷனில் இருந்தே நம்மை கவர ஆரம்பித்து விடுகிறார். ஒரு ரோஜாப்பூ மேலிருந்து கீழிறங்கி இடை தழுவி வந்து நிற்கும் பாருங்கள், நாமும் சற்று தடுமாறித்தான் போகிறோம். சரியாக 4 முறை அந்த ”ஹோ..” வரும். 400 வாட்ஸ்-க்கு சமம் அது.
பாடலின் 20-வது நொடியில், திடுதிடுமென்று ஓடி வந்து சட்டென்று நின்று ஒரு ஓவியன் கையில் வைத்திருக்கும் தூரிகையை போல் இடுப்பை முன்னும் பின்னும் அசைத்து ஆடுவார். அடுத்த 10 நொடிகளில் பின்னால் திரும்பி நின்றுக்கொண்டு முடியை முன்னால் தூக்கி போட்டவாறு அதே தூரிகையின் மென்நடனம். ”இடுப்புல சொருக பாத்தாக” என்ற வரிவரும்போதும்லாம் வேறா லெவல் மூவ்மென்ட்!
”காது கடிக்கும் காது கடிக்கும் பல்லுக்கு” என்று தலைவர் பாடும்போது ஒரு ரியாக்ஷன் கொடுக்கும் பாருங்க அந்த பொண்ணு, ”அய்யோ” டிவைன்ங்க அது!
அடுத்து, ”உறங்காதீக…” என்று ஒரு இழுவை இழுத்து நாடியை வைத்து அந்த ஜிமிக்கி குலுங்க இடிக்கும் அந்த அழகு இருக்குதே..அது அழகு இல்லை; அதற்கும் மேல்.
பிரம்மன் கலைஞன் தான். தலைவரின் மீசை முடி மார்பில் குத்த ”அய்யோ” என்று சொல்லும் அழகுக்கு முன் ஒரு ரம்பையும் ஊர்வசியும் வரமுடியாது ஒய்…
வெள்ளை அரேபியன் குதிரை என்று படித்திருப்பீர்கள் அல்லவா? அது நடந்து வருவதை பார்க்க வேண்டுமா?? சரியாக மூன்று நிமிடம் 10 நொடிகளில் ஒய்யாரமாக இவர் நடந்துவருவதை பார்த்துக்கொள்ளுங்கள்.
காலனும் என்னைபோலவே காதலித்தான் போல சீக்கிரம் அழைத்துக்கொண்டான்.
இவ்விரவு இவளின் நினைவுகளோடு நிற்கட்டும்.!

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா