போதை



நண்பர் மனோ(Mano Red) போதை பழக்கத்தை முன்வைத்து தினமலரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதுபற்றி எனக்கும் கொஞ்சம் சொல்ல இருக்கிறது.
சிறு வயதில் நம்மைவிட வயது மூத்தவர்கள் உடனான பழக்கம் அனைவருக்கும் இருந்தே இருக்கும்.வீட்டு அருகில், விளையாட செல்லுமிடத்தில், பள்ளியில், அண்ணனின் நண்பர்கள் இப்படி பல இடங்களில் உண்டு. அவர்களது பேச்சு, ஸ்டைல், சொல்லாடல்கள் என்று அனைத்தும் நாம் அறியாமல் நம்மை தொற்றிக்கொள்ளும்.
அப்படித்தான் என்னுடன் படித்த ஒருவன் அவர்களது ஏரியாவில் இருக்கும் பெரிய பசங்களிடம் நட்பானான். விளையாட்டு, பேச்சு என்ற அளவில் இருந்த நட்பு கொஞ்ச காலத்தில் வாடா, போடா, மச்சி, மாப்ள என்ற அளவில் முன்னேற்றம் அடைந்து இருந்தது. மெதுவாக அவர்களது வட்டத்துக்குள் சிக்க தொடங்கினான். தமிழ் வாத்தியார் ”மயிரு..” என்று திட்டினாலே, ”என்னல இவரு இப்படியெல்லாம் கெட்ட வார்த்த போடுதாரு” என்று மலைத்து நிற்கும் எங்களிடம்
புதிய புதிய கெட்ட வார்த்தைகளை கற்றுக்கொண்டு வந்து சொல்லி எங்களுக்குள் ஒரு திறப்பை நிகழ்த்துவான்.
விடுமுறை நாட்களில் பள்ளிக்கு எதிரில் கிருஷ்ணா ஆஸ்பத்திரிக்கு பின்புறம் இருக்கும் செயிண்ட் சேவியர் காலேஜ் கிரவுண்டில் தான் கிரிக்கெட் ஆடுவோம். அப்போதெல்லாம் அவனும் எங்களுடன் வருவான். ஆனால் பெரும்பாலும் விளையாடமாட்டான். நல்ல ஒரு மரத்தடியில் அமர்ந்து வலதுபக்க பாக்கெட்டில் இருந்து புரோட்டா கடைகளில் சால்னா ஊத்திக்கொடுக்கும் சிறிய பிளாஸ்டிக் கவரையும், இடப்பக்கத்தில் இருந்து ட்யூப் மாதிரி ஒன்றையும் எடுப்பான். அந்த ட்யூப்பில் இருப்பது ”ஃபெவி பாண்ட்”. செருப்பு தைக்கும் கடைகளில், ஆசாரி தொழில் செய்வோர் என்று பலரும் அந்த ஃபெவி பாண்ட் வைத்திருப்பார்கள். ஃபெவிக்காலின் அட்வான்ஸ்டு வெர்ஷன் தான் அது. நன்றாக சிக்கென்று ஒட்டிக்கொள்ளும். அதை எடுத்து நன்றாக பிதுக்கி அந்த கவரில் ஊற்றிக்கொள்வான்; பின்னர், அந்த கவரை ஒரு ஆக்ஸிஜன் மாஸ்க் மாதிரி மூக்கும் வாயும் சேர்ந்து கவராகும் வகையில் பிடித்துக்கொண்டு நன்றாக மூச்சை இழுத்து இழுத்துவிட்டு அதன் வாசத்தை சுவாசத்துடன் சேர்த்து உள்ளிழுத்து கொள்வான்.
நம்மில் பலருக்கும் பெயிண்ட் வாடை, மார்க்கர் வாடை, வொயிட்னர் வாடை பிடிக்கும். இதற்கெல்லாம் காரணம் அதிலிருக்கும் ஸ்பிரிட். ஸ்பிரிட் என்பது முழுக்க முழுக்க ஹைட்ரோ கார்பன் தான். ஹைட்ரோ கார்பன் என்றால்
-OH-; -OH- என்றால் அல்கஹால். எரிச்சாராயத்தை methylated spirit என்றும் கூறுவர். இந்த ஃபெவி பாண்ட் போதைக்கும் காரணம் இதுதான்.
சிறிது நேரத்திற்கு தன்னியல்பில் இருக்கமாட்டான். அந்த வயதில் அளவுக்கு அதிகமான போதையையே தந்திருக்கும் அது. நாங்கள் எல்லாம் விளையாடி முடித்த பின்னர் அவனை எழுப்பி கூட்டிச்செல்வோம்.
ரொம்ப நாட்களுக்கு பிறகு தெரிந்துக்கொண்டேன் அந்த பழக்கத்தை அந்த பெரிய பசங்களிடம் இருந்துதான் அவன் கற்றுக்கொண்டானாம்.
இப்போது இதைவிட அட்வான்ஸ்டாக பல வழிகளில் அடிக்கிறார்கள்.
-பிகு
7-7-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா