ஏன் இந்தி கற்க வேண்டும்?

ஏன் இந்தி கற்க வேண்டும்?
0
இந்தி கற்காததனால் நாம் 50 வருடங்கள் பின்னோக்கி இருக்கிறோம் என்று தோழர். சாரு நிவேதிதா கூறியிருப்பதையும், அது தொடர்பான சில பதிவுகளையும் காணமுடிகிறது. இந்த நேரத்தில் இந்தி கற்பது தொடர்பான எனது கருத்தையும் சொல்லிவிட்டால் கடமை முடிந்துவிடும்.
கடந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை வடமாநிலங்கள் செல்லும் வாய்ப்பு கிட்டியது. அலகாபாத், தில்லி மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு வெவ்வேறு நண்பர்களுடன் வெவ்வேறு காலக்கட்டத்தில் சென்று வந்தேன். அந்த குழுவில் எனக்கு மட்டும் ”தோடா தோடா இந்தி மாலும்”. மற்றவர்கள் எல்லாம் ”ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதாத்தா” ரகம் தான். நானும் இந்தி பண்டிட்லாம் இல்லை. ஒரு இடத்திற்கு செல்ல வழி கேட்கவும், பொருட்கள் வாங்கும் இடத்தில், ”ரேட் பகுத் ஜாஸ்தி ஹை”, ”ஏக் சௌ ருபே” என்ற அளவில் பேரம் பேச மட்டுமே தெரியும். மேலும் சில இடங்களில், தெரிந்த ஒன்றிரண்டு வார்த்தைகளை கோர்வையாக பேச தெரியாமல் தனித்தனி வார்த்தைகளாக பேசி சமாளித்துவிடுவோம். ஒருவாரக்கால பயணமாக சென்ற அலகாபாத்திலும், தில்லியிலும் பெரிதாக ஒன்றும் பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால், வேலை நிமித்தம் டிரெயினிங்காக சென்ற அகமதாபாத் தான் கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டது.
குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரம் அகமதாபாத். அபிஷியல் தலைநகரமாக காந்திநகர் இருந்தாலும், அகமதாபாத் தான் உயிர்நாடி. ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பயிற்சி நிலையம் அது. எங்கள் பேட்ச்சில் இருந்த 32 பேரில் 3 பேர் தமிழர்கள். மீதி ஒரு 5 பேர் கன்னடர்கள், தெலுங்கர்கள். மீதி 25 பேர் வடமாநிலத்தவர். ஒவ்வொருத்தரும் வேறு வேறு பகுதிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் இருந்த ஒற்றுமை ”அனைவருக்கு இந்தி தெரியும்”. இதில் பியூட்டி என்னவென்றால் கன்னட, தெலுங்கர்கள் சிலருக்கும் கொஞ்சம் இந்தி தெரிந்திருக்கிறது. இதன் காரணமாகவே கொஞ்சம் அந்நியப்பட்டு போனோம். ஆனால் ஒன்று சொல்லியே ஆகவேண்டும், மொழி தெரியவில்லை என்பதால் அவர்கள் எங்களை அப்படியே ஒதுக்கிவிடவில்லை. பெரும்பாலும் எங்களுக்கும் முக்கியத்துவம் தந்தே பழகினார்கள். இருந்தாலும் அவர்கள் பேச்சில் அவர்கள் அறியாமலையே இந்தி வந்துவிடுகிறது. பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று சத்தமாக சிரிப்பார்கள், நாமளும் ஏதோ புரிந்தமாதிரி மத்திமமாக ஒரு சிரிப்பை சிரித்து வைக்க வேண்டும். சரி, அலுவலகத்தில் ஆங்கிலத்தில் ஓரளவு சமாளித்துவிடலாம் என்றாலும், வெளியே எங்காவது செல்ல வேண்டுமென்றாலும் இந்தி தெரிந்த ஒருவனிடம் தொங்கிக்கொண்டிருக்க வேண்டும்.
எதற்காக இவ்வளவு சொல்கிறேன் என்றால் இது உளவியல் ரீதியாக நம்மை அதிகமாக பாதிக்கும். நமக்குள் ஒரு நம்பிக்கையின்மை உருவாகும். நாம் ஏமாற்றப்படுவதைப்போன்ற உணர்வு வரும். ”ச்ச்ச்ச… நமக்கு இந்தி தெரியாம போச்சே” என்று ஒரு முறையேனும் தோன்றிவிடும். வடமாநிலங்களில் பணிபுரிபவர்களுக்கு, புரிந்தவர்களுக்கு இதன் தேவை புரியும்.
இந்தி கற்காததால் நாம் 50 வருடம் பின்னோக்கி இருக்கிறோம் என்பதெல்லாம் சுத்த மடத்தனம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தியில் இலக்கியம் படைக்க வேண்டாம்; அறிஞர் ஆக வேண்டாம்! ஆனால் நமக்காக நம் வசதிக்காக, நமக்கு தேவையிருப்பின் இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதில் தப்பேதுமில்லை. வடமாநிலத்தவர் (கடைநிலை ஊழியர்கள்) பலருக்கு தங்களது தாய்மொழியை தவிர வேறு மொழி தெரியாது என்ற நிலையில் அவர்களுக்கு கொஞ்சமேனும் தெரிந்த இந்தியை நம் ”வசதிக்காக” கற்றுக்கொள்ளலாம்.
நன்றி. வணக்கம்!
-பிகு
11-06-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

கேசம் - நரன்

முள் - சாரு நிவேதிதா