உடை(யும்) உளவியல்!

உடை(யும்) உளவியல்!
0
எழுதித் தீரா விஷயங்களில் இந்த உடை விஷயமும் ஒன்று. ’ஆள் பாதி ஆடை பாதிஎன்பது பழமொழியாக இருந்தாலும் இன்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது. கல்லூரி காலங்களில் இதுகுறித்து அவ்வளவாக புரிதல் இருந்திருக்காது. மேம்போக்காக கடந்திருப்போம். வேலைக்கு சென்ற பின் மெதுவாக இதற்கு பின் இருக்கும் உளவியலும் இதன் முக்கியத்துவமும் புரியத்தொடங்கும்.
சம்பவம் 1
இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் வைத்திருந்த ஷூ முன்பகுதியில் சிறிது கிழிந்துவிட்டது. பொதுவாகவே இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் கடந்துவிடுவேன். அப்படித்தான் ஒரு மாதம் ஓடியது. கொஞ்ச நாள் கழித்து அதை காலில் அணிந்து நடக்கும்போதெல்லாம் அனைவரும் என் காலை பார்ப்பதுபோலவே தோன்றும். அதற்காகவே அலுவலகத்தில் அதிகம் வெளியே அலையாமல் இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னால் வேறு எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை. நானும் பெவி-பாண்ட் போட்டு எல்லாம் ஒட்டி பார்த்தாலும் எதுவும் சரிவரவில்லை. இதற்கு மேலும் தாங்காது என்ற ரீதியில் ஒரு வழியாக புது ஷூ ஒன்று வாங்கிவிட்டேன். அதன் பின்னர் தான் என்னால் இயல்பாக இருக்க முடிந்தது .
சம்பவம் 2
நேற்று அலுவலகம் செல்வதற்காக பேருந்தில் ஏறினேன். காலை வேளைகளில் .எம்.ஆர் சாலையில் செல்லும் பேருந்துகளில் இருக்கும் கூட்டத்தை சொல்லி தெரியவேண்டியதில்லை. அப்படி நிறைமாத கர்ப்பிணியாக வந்த பேருந்தில் ஏறிக்கொண்டேன். இருக்கையில் நவநாகரிக யுவதி ஒருத்தி காதில் ஹெட் செட்டுடன் அமர்ந்திருந்தாள். நான் அந்த இருக்கையை ஒட்டி நின்றுக்கொண்டிருக்கிறேன். இல்லை, கூட்டத்தில் நைந்துக்கொண்டிருக்கிறேன். நிமிடத்துக்கு ஒருமுறை நிமிர்ந்துப் பார்ப்பாள். முதலில் நானும் கவனிக்கவில்லை, பின்னர்தான் கவனித்தேன். நான் நிற்கும் இடத்தில் இருந்து பார்த்தால் அந்த பெண் அணிந்திருந்த லோ-நெக் டாப்ஸின் வழியே க்ளிவேஜ் தெரியும் நிலையில் இருந்தது. அது அந்த பெண்ணிற்கும் தோணியிருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் என்னை பார்த்துவிட்டு தனது லோ-நெக் டாப்ஸை சரிசெய்து கொள்வாள். மீண்டும் அது கீழிறங்கும், மீண்டும் ஏத்திவிடுவாள்; மார்போடு ஒட்டிவைப்பாள். இப்படியே நடந்துக்கொண்டிருந்தது. நான் இறங்கிவிட்டேன்;
வேறு யாரேனும் அந்த இடத்தில் வந்து நின்றிருக்க கூடும், அவள் மீண்டும் அதேப் போல் சரிசெய்திருக்க கூடும், அதையே பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த பொழுதுகளில் தனக்கு பிடித்த பாடலின் பிடித்த வரியை தவறவிட்டிருக்க கூடும், பேருந்தைவிட்டு இறங்கி அலுவலகத்தில் வேலை செய்யும்போதும் அதையே யோசித்து கொண்டிருக்ககூடும். கோடிங்கில் வந்த எரரை சரிசெய்ய முடியாமல் கவனம் முழுதும் அதிலையே இருந்திருக்க்கூடும். அன்றைய நாள் முழுவதும் தான் அணிந்து வந்த அந்த லோ-நெக் டாப்ஸுடன் அவள் மன்றாடியிருக்க கூடும்.
இது பொதுவாகவே பால்பேதமின்றி அனைவருக்கும் இருக்ககூடிய பிரச்சனை தான். தனக்கு சம்பந்தமில்லாத உடையை பகட்டுக்காகவோ, எல்லாரும் அணிந்திருக்கிறார்கள் என்பதற்காகவோ வாங்குகிறோம். ஒரு டி-ஷ்ர்ட் நன்றாக இருக்கிறது, விலை குறைவாக இருக்கிறது, என் உடனிருப்பவன் வாங்கியிருக்கிறான் என்று வாங்கும் நாம் அது நமக்கு பொருத்தமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க தவறிவிடுகிறோம். அதை அணியும் நாட்களில் நம் இயல்பு சுத்தமாக பாதிக்கப்படுகிறது. கீழே விழும் பொருளை குனிந்து எடுப்பதற்கு கூட தயங்குகிறோம்.
டைட்டாக ஜீன்ஸ் அணிகிறோம், நமது பின்புறமோ தொடை பகுதியோ அசிங்கமாக தெரிகிறது என்று நமக்கு தெரிகிறது, இருந்தாலும் வாரா வாரம் அதைத்தான் அணிந்து வருகிறோம். வெள்ளை வண்ண டி-ஷர்ட் அணிகிறோம், டைட்டாக இருக்கிறது, மார்பு காம்புகள் வெளியே தெரியும் அளவு டைட்டாக இருக்கிறது, இருந்தாலும் அதைத்தான் அணிகிறோம். ஏனென்றால் அவன் அணிகிறான், அவள் அணிகிறாள். எல்லாரும் அணிகிறார்கள். நானும் அணிவேன்.     
நீங்களே உங்கள் அலுவலகத்தில் ஒருநாள் கவனித்து பாருங்கள், இதுப்போன்று உடை அணிந்து வருபவர்களை. அவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் இயல்பு பாதிக்கப்பட்டிருக்கும். வேகமாக நடக்கமாட்டார்கள், கைகளை தூக்கமாட்டார்கள், அதிகம் அதிர்ந்து சிரிக்ககூடமாட்டார்கள்.  
உண்மையில் இது கவனிக்க வேண்டிய விஷயம். எனக்கு சௌகரியம் இல்லாத, தேவையில்லாத உடைகளை பகட்டுக்காக நான் அணிய மாட்டேன் என்ற தெளிவு வேண்டும். நாம் பயன்படுத்தும் எந்த பொருட்களும் நம் இயல்பை பாதிக்காதவாறு இருக்க வேண்டும். ஆடைகள் நம் மனதுக்கு பிடித்தமாதிரி இருக்கலாம், உடலை பிடித்தமாதிரி இருக்ககூடாது. அது இழுக்கும் இழுப்புக்கெல்லாம் நாம் செல்லக்கூடாது, நமக்கு ஏற்றவாறுதான் அது இருக்க வேண்டும். உடைகளில் கவனம் தேவை.
இதில் வந்து பெண்ணிய - ஆணாதிக்க சாயம் பூசாதீர்.
உடை(யும்) உளவியல்!
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா