ஐ.டி கார்ட் - அட்டுத்தனம்

ஐ.டி கார்ட் - அட்டுத்தனம்
0
அலுவலக கேண்டீனில் எடுத்த என் புகைப்படத்தை வாட்ஸ்ப்பில் டி.பி.யாக வைத்திருந்தேன். நண்பன் ஒருவன் பேசினான். அவன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், நாங்கள் படித்த பிரிவில் சர்வீஸ் இன்ஜினியராக பணிபுரிகிறான்.
”என்னல, எல்லா போட்டோலயும் ஐ.டி.கார்டும் கழுத்துமா இருக்க??, ஆபிஸ்ல எப்பவும் ஐ.டி கார்ட் போட்டுட்டே தான் இருக்கணுமா?”
ஆம். அப்படித்தான். கையில் விரல்கள் இல்லாதவனுக்கு கூட உள்ளே வேலையுண்டு, ஐ.டி கார்ட் இல்லாதவனுக்கு உள்ளே செல்லவே அனுமதியில்லை. ஒவ்வொரு நாளும் காலை அலுவலகத்திற்குள் நுழையும் போதே, ஐ.டி. கார்டை ஸ்வைப் செய்துதான் உள்ளே செல்ல வேண்டும். ஐ.டி எடுத்து வராததால் விடுப்பெடுத்து வீட்டிற்கே சென்ற கதையெல்லாம் உண்டு. உள்ளே செல்வதற்கு மட்டும்தான் ஐ.டி கார்டா? என்றுக் கேட்டால், இல்லை. அலுவலகத்தில் எங்கு சென்றாலும் ஐ.டி கார்ட் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். எந்த இடத்திலும் நம்மை நிறுத்தி ஐ.டி கார்டு அணியச் சொல்ல அலுவலகத்தில் இருக்கும் அனைத்து செக்யூரிட்டிகளுக்கும் அதிகாரம் உண்டு. சிலர் கழுத்தில் அணிந்திருப்பார்கள், சிலர் பேண்ட் லூப்பில் பருத்த தொப்பைக்கு அருகில் மாட்டி இருப்பார்கள். நிறுவனத்தின் முதலாளியே வந்தாலும் ஐ.டி கார்ட் கட்டாயம்.
பொதுவாகவே நிறுவனங்களை பொறுத்தவரையில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலும் மென்பொருள் நிறுவனத்தில் தற்போது ”டேட்டா திருட்டு” அதிகம் இருப்பதால் கெடுபிடி கொஞ்சம் அதிகம்தான்.  
0
பள்ளியில் படிக்கும்போது ஐ.டி கார்ட் போடவில்லை என்று பி.டி சார் பச்சை செல்லோ-டேப் சுற்றிய பிரம்பால் பிட்டியில் மரண அடி அடிப்பார். கழுத்தில், அணிவது மாதிரி அணிந்து அவர் சென்றவுடன் கழற்றி டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொள்வோம். அந்த வயதிலேயே, அதை அணிவது ஏதோ அருவருப்பான காரியம் போல் இருக்கும். கெத்து குறைந்தது போல இருக்கும்.
கல்லூரி படிக்கையில் துறைத்தலைவரும், ஆசிரியர்களும் ஐ.டி கார்ட், ஐ.டி கார்ட் என்று தலைப்பாடாய் அடித்துக்கொள்வார்கள். அப்போதும் அந்த ஐ.டி கார்டை அணிவது ’அட்டுத்தனம்’ என்றே நினைத்திருந்தோம். அட்டுத்தனம் என்றால் சிறுபிள்ளைத்தனம், பழம் என்று அர்த்தம். அரைக்கை சட்டை அணிந்து, கழுத்தில் செயின் தெரிவது போல் முதல் பட்டனை திறந்துவிட்டு சீன் போடுவதற்கு இந்த ஐ.டி. கார்ட் இடைஞ்சலாக இருக்கும். அதனால் அதை கழற்றி அந்த கயிறு மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் பேண்ட் பாக்கெட்டில் வைத்து கல்லூரியை வலம் வருவோம். இப்போது யோசித்துப் பார்த்தால் தெரிகிறது, பார்ப்பதற்கு அது எவ்வளவு கேவலமாக இருந்திருக்கும் என்று.
அன்றே சொன்னார் சுரேஷ் சார், ”உங்களுக்கெல்லாம் வேலைக்கு போனாத்தான், இதோட அருமை புரியும்” என்று.
ஆம்,புரிகிறது. ஐ.டி கார்ட் அணிந்தால்தான் வேலை என்றார்கள். சரியென்று விட்டோம். இப்போதெல்லாம் ’அட்டுத்தனமாக’ தெரியவில்லை. மாதாமாதம் 31-ம் தேதி சரியாக சம்பளம் வந்துவிடுகிறது.

-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா