தனிமை

நேற்று தோழி ஒருத்தி பேசியிருந்தாள். பள்ளிப்பருவ தோழி அவள். தற்சமயம் புனே-யில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறாள். வெகு அரிதாகவே பேசிக்கொள்வோம். நேற்று பேசிக்கொண்டிருக்கும்போது, “என்ன பண்ற”? என்ற என்னுடைய கேள்விக்கு “சும்மா சுவத்த பாத்துட்டு உக்காந்திருக்கேன்” என்றாள். ரொம்ப போர் அடிப்பதாகவும் தனிமை உணர்வு அதிகமாக இருப்பதாகவும் கூறினாள். என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. அவளது நிலைமையையும் தனிமையையும். வேறு எதுவும் வழியே இல்லை என்ற நிலையில் தான் எனக்கு பேசுவாள். அவளது பேச்சின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு சலிப்பு தெரிந்தது.
1. அலுவலகத்தில் மூன்று ஷிப்டுகள் மாறி மாறி வேலை இருக்குமாம். சரியான தூக்கம் இருக்காது என்றாள். சாப்பாடும் சரியில்லையாம்.
2. இதற்கு முன் இருந்த அறை சரியில்லாததால், வேறு அறை மாறியிருப்பதாகவும் இங்கு தான் மட்டுமே இருப்பதாகவும் சொன்னாள்.
3. வெளியே செல்ல வேண்டும் என்றாலும் உடன் வருவதற்கு கூட யாருமில்லை என்றாள்.
4. தனியாகவே வெளியே சென்று வருகிறேன், வெளியுலகத்தை அதிகம் தெரிந்துக்கொள்கிறேன் என்கிறாள். (பொதுவாக அவள் அப்படிப்பட்டவள் இல்லை)
5. வீட்டுக்கு வந்து 6 மாதங்களுக்கு மேலாகிவிட்டதாம்.
6. ”பின்ன இன்னும் எதுக்கு அங்க இருக்க, பேசாம வந்துரு என்றேன். இல்ல எதாது கத்துக்கலாம்-னு இருக்கேன்” என்கிறாள்.
ஆம், தனிமை மிகவும் வாதையானது. கொடுமையானது. அந்த தனி அறையில் தட்டில் சோற்றை எடுத்துப்போட்டு சாப்பிடும்போது யாருமற்ற அனாதை போன்ற ஒரு உணர்வு வரும். அதை சொல்லிமாளாது. இந்த தனிமையிடம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் ஆளை அடித்து தூக்கிவிடும். ஒரு விதமான மனநிலைக்கு தள்ளிவிடும். தனிமையில் தான் நாம் நம்முடன் அதிகம் பேசிக்கொள்ள முடியும். அந்த அமைதியில் தான் நம்மை பற்றிய உண்மை நமக்கு சத்தமாக சொல்லப்படும். வாழ்க்கையின் மீதான ஒரு பிடிமானம் இற்றுப்போகும்.
இது இவளுக்கென்று இல்லை. வீட்டைவிட்டு தூரா தொலைவில் இருக்கும் அனைவருக்கும்தான். இதையெல்லாம் தூக்கி எறிய தான் நண்பர்கள் மூலமாகவும் தமக்கு பிடித்தமானவர்கள் உடனும் பொழுதைக் கடந்து கொண்டிருக்கிறோம்.
நேற்றில் இருந்து இதையே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த நிலையில் தான் சம்பத்-தின் ’இடைவெளி’ நாவலை வாசிக்கப்போகிறேன்.
கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது!
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்