மையத்தில் இருந்து நகர்ந்து நிற்கும் கதைகள்


மையத்தில் இருந்து நகர்ந்து நிற்கும் கதைகள்
(ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவலை முன்வைத்து)

சில சமயங்களில் சிலருடைய எழுத்துக்களைவிட அந்த எழுத்தாளர்களே நமக்கு முதலில் அறிமுகமாவார்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அனுபவங்களும் நம்மை இரும்பு கண்ட காந்தமாய் அவர்களை நோக்கி இழுத்துச் செல்லும். அப்படி எனக்கு அறிமுகமான இரண்டு பேர், தஞ்சை ப்ரகாஷ் மற்றும் ஜி.நாகராஜன். இதில் தஞ்சை ப்ரகாஷினுடைய எழுத்து கொஞ்சம் முன்னதாகவே அறிமுகம் ஆனது; அவருடைய மீனின் சிறகுகளும் மிஷன் தெருவும் சில சிறுகதைகளும் வாசித்திருக்கிறேன். ஆனால் ஜி.நாகராஜனுடைய எழுத்துக்களை சமீபமாகத்தான் வாசிக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் தான் அந்த புத்தகம் என் கண்களில் தென்பட்டது. காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ஜி.நாகராஜன் ஆக்கங்கள்என்ற புத்தகம் அது. அந்த கட்டி அட்டைப் புத்தகத்தை கையில் எடுத்து சிறிது நேரம் அதிலிருந்த ஜி.நாகராஜனின் புகைப்படத்தை பார்த்தவாறு நின்றிருந்தேன். ஏனோ, அவரது தோற்றமே என்னை பெரிதும் ஈர்த்தது. முறுக்கிய மீசையும் சில்க் சட்டையும் புலிப்போன்ற கூர்மையான பார்வையும் அத்தனை ஏகாந்தமாய் இருந்தது. சற்று அதிகமான சிறுகதைகள் எழுதியிருந்தாலும், குறுநாவல்கள் என்று இரண்டே இரண்டுதான் எழுதியிருக்கிறார். குறத்திமுடுக்கு மற்றும் நாளை மற்றுமொரு நாளே. அங்கு அமர்ந்தவாறே சில சிறுகதைகளையும் குறத்திமுடுக்கு என்ற நீண்ட சிறுகதையையும் வாசித்தேன். குறத்தி முடுக்கு என்பதை எங்கோ கேள்விப்பட்டது போல் இருக்கிறதே என்று யோசிக்கையில் தான், பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஊர்ப்புற நூலகத்தில் இருந்து எடுத்து படித்த எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய குறத்திமுடுக்கின் கதவுகள் நினைவுக்கு வந்தது. குறத்தி முடுக்கை தொடர்ந்து நான் வாசித்ததுதான் நாளை மற்றுமொரு நாளே.
நாகராஜனின் கதைகள் விளிம்பு நிலை மக்களின் கதைகள். மையத்தில் இருந்து நகர்ந்து நிற்கும் கதைகள். நேர்க்கோட்டில் இருந்து விலகி நடக்கும் கதைகள். பேசத்தயங்கும் கதைகள். மூடி மறைக்க விரும்பும் கதைகள். யாருக்கும் தெரியாமல் நாம் செய்ய விரும்பும் செயல்களின் கதைகள். அதிலும் குறிப்பாக பாலியல் தொழில் புரிவோரின் கதைகள். இதுவும் அப்படியான ஒரு கதை. ஒருவனின் கதை!
கந்தன் என்ற ஒருவனின் ஒரு நாளைய வாழ்க்கைதான் இந்த கதை. ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழு நாவலையும் வடிவமைத்து இருக்கிறார் ஜி.என்; நாவலின் மையமாக கந்தனை முன்னிறுத்தி அவனை சுற்றித்தான் எல்லா சம்பவங்களும் நடக்கின்றன. ஒருவனின் ஒரு நாளைய கதைதானா இது? என்றுக் கேட்டால், இல்லை அது மட்டும் இல்லை. ஒரு நாளில் அவனது வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு அவனுடைய மொத்த வாழ்க்கையையும் சொல்லி செல்கிறார்.
கந்தனுக்கு காலை விடிவதே ஜிஞ்சரின் முகத்தில் தான். அது உள்ளே சென்றால் தான் அன்றைய நாளை அவனால் தொடங்க முடிகிறது. கந்தன் யார், என்ன தொழில் செய்கிறான், அவன் வாழும் சூழல் என்ன என்பதை சொல்லாமல் சொல்கிறார். பசுபதியின் இறைச்சி கடை-அக்ரஹார வரலாறு பரமேஸ்வரனின் காதல் காரியங்கள் மூலம் அன்றைய சமூக நிலைப்பாட்டையும் கூறுகிறார்.
மீனாவிற்கும் கந்தனுக்குமான உறவு எப்படி வந்தது என்பதை அழகாக கூறியிருப்பார் ஜி.என். ஒரு விபச்சாரியான மீனாவை கோவிலில் பார்க்கும் கந்தன் அவள் பின் சென்று அவளது ஓனரிடம்பேசுகிறான். ஒரு குறிப்பிட்ட தொகை சொல்லி அவளை மணக்க சம்மதிக்கிறான். அவளை அவன் மணந்துக் கொண்டாலும் அவளை வைத்து தொழிலும் செய்கிறான்.
இந்த சமயத்தில் தான் அவனது குழந்தை குறித்த நினைவு வருகிறது அவனுக்கு. விளையாட்டாக ஒரு பலூனை உடைத்ததால் ஏற்பட்ட விபரீதம், குழந்தையின் உயிரையே பறித்துக்கொண்டுவிட்டது. ”ஆசையா ஒண்ணு வச்சிருக்கும்போது நாசப்படுத்தக்கூடாதுஎன்ற வார்த்தைகள் அவனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது.
ஜிஞ்சர் வாங்குவதற்கு மூன்று ரூபாய் இல்லாத கந்தன் தினமும் லாண்ட்ரி செய்த துணிமணிகள் தான் அணிகிறான். சலூனுக்கு சென்று தன்னை அழகுப்படுத்திக்கொள்கிறான். தான் செய்யும் தொழில் சரியில்லாதது என்றாலும் அதை வெளிக்காட்டாது, தன்னை ஒரு அந்தஸ்தான மனிதனாக வெளிக்காட்டவே கந்தன் விரும்பினான். இந்த சமூகமும் அவனை அப்படியே நடத்துகிறது.
இந்த நாவலில் ஜி.என். அரசியல் பேசுகிறார், காமம் பேசுகிறார், பகடி செய்கிறார், தத்துவம் பேசுகிறார். பெண்ணியம் பேசுகிறார், ஆணாதிக்கம் பேசுகிறார்; முத்துசாமியுடனான பேச்சு, சாராயக் கடையில் நடக்கும் அரசியல் கட்சிகள் குறித்த உரையாடலும் இளைஞர்கள் பேசும் கம்யூனிச பேச்சுக்களும் அர்த்தம் பொதிந்தவை.
சுப்பையா செட்டியார் என்ற ஒரு கதாபாத்திரம் வரும் பகுதிகளும் (காய்கறி பகுதிகள்), அந்த ஐரின் பெண் வரும் பகுதிகளும் பகடி நிறைந்தவை.
பொதுவாகவே நாவல்களில் வரும் உரையாடலகள் அதிமுக்கியமானவை. அதிலும் குறிப்பாக தி.ஜா.,(மோகமுள், அம்மா வந்தாள்) அசோகமித்திரன் (தண்ணீர்) போன்ற நாவல்களில் வரும் உரையாடல்கள் அந்த நாவலை வேறொரு தளத்திற்கு எடுத்துச்செல்லும். அந்த வகையில் இதிலும் நிறைய உரையாடல்கள் இருக்கிறது. கந்தன்மீனா, முத்துசாமிகந்தன், கந்தன்அந்தோணி ஆகியோரிடையே நடக்கும் உரையாடல்கள் நாவலின் முக்கியமான இடங்கள்.
நாவல் நடைபெறும் காலம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இருந்தாலும் டாக்சி, ஜிஞ்சர், கம்யூனிச சித்தாந்தம் போன்றவற்றின் மூலம் ஓரளவு யூகிக்கலாம்.
நம்மை யோசிக்க வைக்கும் பல கூர்மையான வாசகங்கள் இருக்கின்றன நாவலில்
0)   இந்த சமுதாயத்துல எத்தனையோ கொடுமைகள் நடக்குது..  
      நாமும் கொஞ்சம் கொடுமைகள் செய்யலாங்கற, இல்ல??
0)   நீங்க வாழ்க்கையில எதைச் சாதிக்கணூம்னு திட்டம் போட்டிருக்கீங்க??
எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துலே வந்து பொறந்தேன்?
0)   ஆங்கிலோ-இந்திய பெண் குறித்து, கல்யாணத்துக்கு முன்னால் தங்களது ஆண்மையைச் சோதித்துக்கொள்ள் அவள் பெரிதும் உதவி வந்தாள்.
0)   பொம்பளைன்னு பொறந்துட்டாலே தேவடியாச் சிறுக்கிதான்; ஒருத்தனோட படுத்தா என்ன, பத்துப் பேர்க்கிட்டே படுத்தா என்ன, எல்லாம் ஒண்ணுதான்மீனா சொல்கிறாள்.

0)   இந்த பணமே ஒரு மானங்கெட்ட விஷயம் தான்.

0)   மசூதியில் வீணடித்த நேரத்தை சாராயக்கடையில் சரிக்கட்டுவோமாக.
ஜி.என்ன் மொழி எப்போதுமே சிக்கலானதாக இருந்ததில்லை. நாகர்கோவில், நெல்லை போன்ற இடங்களில் வாழ்ந்திருந்தாலும் அவரது எழுத்தில் அந்த வாடை அடிக்காது. ஆனால், ஆரம்ப கட்ட வாசகர்களுக்கு அவர் சொல்லாமல் சொல்லும் சில விஷயங்கள் புரியாமல் போகலாம். இது பொதுவான பிரச்சனைதான்.
நாவலில் அவர் பயன்படுத்தும் கதை சொல்லல் உத்தி காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சம்பவத்தை சொல்வதற்கு அது தொடர்பான ஒரு சிறிய விஷயம் (பொறி) வந்து அந்த நினைவை கிளறிவிடுவது. (எடுத்துக்காட்டாக:- அந்த பலூன் விஷயம்). இந்த வகையான கதை சொல்லல் சற்று சலிப்பை உண்டாக்குகிறது. சமீபத்தில் கவிதா சொர்ணவல்லியின் கதையொன்றிலும் இந்த வகையான கதை சொல்லல் வாசிக்க நேர்ந்தது. மேலும் சில இடங்கள் நன்றாக இருந்தாலும் இந்த இடத்தில் இது தேவைதானா என்று யோசிக்க வைக்கிறது. (எடுத்துக்காட்டாக:- அந்த முதலாளி வீட்டு விஷயம்). இறுதியில் வரும் அந்த கொலை சம்பவமும் அதையொட்டி வரும் நிகழ்வுகளும் கதைக்குள் ஒட்டாதுப்போல் இருக்கிறது.
ஜி.என்ன் எழுத்துக்கள் அப்பட்டமானவை. இது இது, இன்ன இன்ன, இப்படி இப்படி என்று ஓங்கி உரைப்பவை. அதற்கு நாம் நியாயம் கற்பிக்கவே முடியாது. இதில் வரும் கந்தன் எனக்கு கந்தனாக தெரியவில்லை, நாகராஜனாகத்தான் தெரிகிறார். அவரது குரல் தான் கந்தனின் குரலாக ஒலிக்கிறது.  
முன்னுரைகளுக்கென்று தமிழ் இலக்கிய வரலாற்றில் தனி இடமுண்டு. அந்த வகையில் இந்த நாவலுக்கு ஜே.பி.சாணக்யாவின் முன்னுரை ஆழமான ஒன்று. ஜி.நாகராஜனை அதிகம் புரிந்துக்கொள்ள உதவும். இந்த முன்னுரையை படித்த பின்னர், நண்பர் ஒருவரிடம் சாணக்யாவின் சிறுகதைத் தொகுப்பை படிக்க கேட்டிருக்கிறேன்.
இதை மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும்; அப்போது ஜி.நாகராஜன் வேறு விதமாக என்னிடம் பேசக்கூடும். நாளை இதையே நான் திருத்தி எழுதக்கூடும்.
நாளை மற்றுமொரு நாளே!
-பிகு




Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்