மீட்டெடுத்தல்

பயணங்களில் இருக்கும்போது கையில் எப்போதும் ஒரு புத்தகம் வைத்திருப்பேன். பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில், ரயிலில் என்று அனைத்து இடங்களிலும் ஏதோ பரீட்சைக்கு படிப்பதைப் போல படித்துக்கொண்டிருப்பேன். அது கொஞ்சம் சீன் போடுவதைப் போல இருக்கும் என்று தெரியும், இருந்தாலும் அப்படி படிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நான் படிப்பதை பார்த்துவிட்டு யாராவது ஒருவர் வந்து, ”என்ன புக் படிக்கிறீங்க? ஓ..இதுவா, இது நானும் படிச்சிருக்கேனே. இவரோட அந்த புக் படிங்க நல்லாருக்கும்” என்று பேசிவிடமாட்டாரா, அந்த புத்தகம் குறித்து ஒரு ரெண்டு வார்த்தை சொல்லமாட்டாரா என்றொரு தவிப்பு உள்ளூற இருந்துக்கொண்டே இருக்கும். ஆனால், இதுவரை அப்படி நடக்கவே இல்லை!
ஐ.டி. துறையில் இருந்தாலும் ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டு கம்யூட்டர் தட்டும் வேலை இல்லை. கொஞ்சம் அலைச்சலான வேலை. அப்படி செல்லும்போது ஏதேனும் ஒரு மேஜையில் ஏதாவது தமிழ் புத்தகங்களை பார்த்தால் அப்படியே நின்றுவிடுவேன். ஏற்கனவே ஒருமுறை அப்படி நடந்திருக்கிறது, சுஜாதாவின் ”ஸ்ரீரங்கத்து தேவதைகளை” ஒரு தேவதையின் கைகளில் பார்த்தபோது. இன்றும் அப்படி ஒரு சம்பவம். வேகமாக சென்றுக்கொண்டிருந்தேன், ஒரு கேபினை கடக்கையில் தற்செயலாக ஜெயமோகனின் ”அறம்” புத்தகத்தை பார்க்க நேர்ந்தது. அந்த நண்பரிடம் ஒரு கால் மணிநேரம் பேசிவிட்டுதான் வந்தேன். ஜெயமோகனையும் எஸ்ராவையும் அதிகமாக வாசிப்பாராம். பாலகுமாரனையும் சுஜாதாவையும் வாசித்துக்கொண்டிருந்ததாகவும், இடையில் ஆன்சைட் சென்றுவிட்டதால் வாசிப்பு விட்டுப்போய்விட்டது என்றும் தற்போது மீண்டும் வாசிக்க தொடங்கியிருப்பதாகவும் சொன்னார். அவருக்கு ஆதவனையும் ஜி.நாகராஜனையும் அறிமுகப்படுத்திவிட்டு வந்திருக்கிறேன். வரும் புத்தக காட்சிக்கு சேர்ந்து செல்வதாக திட்டம்…!
அருகில் இருப்பவரின் மொபைலை அவ்வபோது திருட்டுத்தனமாக பார்ப்பேன். காபிக்கடை டேபிளில் அமர்ந்து அருகிலிருந்த நண்பரின் (!) போனை அப்படி பார்த்துக்கொண்டிருக்கையில் பேஸ்புக் டைம்லைனில் பிக் பாஸ் குறித்து தோழர். சாரு நிவேதிதா எழுதிய பதிவு ஒன்று தென்பட்டது. பார்த்ததும் செம்ம குஷியாகிவிட்டது;
”நீங்க சாரு வாசிப்பீங்களா”?
”ஆமாஜி வாசிச்சுருக்கேன். உங்களுக்கு தெரியுமா”?
”ஆமாங்க ராஸலீலா-லாம் காலேஜுக்கு லீவ் போட்டு படிச்சிருக்கேன்” என்றவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார்.
”நான் சாருவை விட ஜெயமோகன் தான் அதிகம் படிச்சிருக்கேன்”, இது அவர்.
”அட..சூப்பருங்க. அப்பறம்..”?
”நாம இதப்பத்தி திங்கட்கிழமை டீடெய்லா பேசுவோம், வெள்ளிக்கிழமை 6 மணிக்கு சாருவையும் ஜெமோவையும் பேசிட்டிருக்கிறத யாராவது கேட்டா சிரிச்சுருவாங்க” என்று கை நடுங்க கிளம்பி சென்றார்.
திங்கட்கிழமை அந்த கடைக்கு செல்ல வேண்டும்.
இதுபோன்ற நிகழ்வுகள் தான் நம்மை வழக்கமான இயந்திர வாழ்விலிருந்து மீட்டெடுக்கிறது.
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா