#சென்னை_டேஸ்

எங்க இருக்கீங்க டேடி???
------------------------------
எங்களைப்போல் UBER ப்ரீ ரைடை ஒருவரும் பயன்படுத்தியிருக்க முடியாது. சென்னை வந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட இருபது முறை அதைப் பயன்படுத்தி பயணித்திருப்போம். அப்படியொரு மாலை பயணத்தின் போது, நான் டிரைவரின் அருகிலிருக்கும் ஸீட்டில் அமர்ந்திருந்தேன். டிரைவருக்கு "May wyif"(இப்படிதான் பதிந்திருக்கிறார்) என்று பதியப்பட்ட எண்ணிலிருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. லௌட் ஸ்பீக்கரில் போட்டுதான் பேசினார், பேசியது அவரது குழந்தை. பேசியதிலிருந்து அந்த குழந்தைக்கு எட்டு வயதிருக்கும் என்று யூகிக்க முடிந்தது. இனி அவர்களிடையேயான உரையாடல்,
டேடி, எங்க டேடி இருக்கிங்க?
அப்பா டீ.நகர் போயிட்டிருக்கேன் மா; நீ டியூஷன் போயிட்டு வந்துட்டியா??
ம்ம்ம். வந்துட்டேன் ப்பா;
அப்பா நீ எப்பப்பா வருவ??
இப்பதான் பாப்பா ரெண்டாவது ரைடு வந்துருக்கேன். இன்னும் ஒரு இருவது ரைடு முடிச்சுட்டு அப்பா வீட்டுக்கு வந்துருவேன் சரியா??
ம்ம்ம்.சரிப்பா(குரல் உடைகிறது)
நீ சாப்பிட்டுட்டு தூங்கு அப்பா வந்துருவேன் ஓகேயா செல்லம்.
ஓகேப்பா சீக்கிரம் வந்துருங்க!!!!
ஓகேம்மா பை; டாட்டா..
நான் அவரிடம் எதுவும் பேசவில்லை. எப்போது இவர் வீட்டிற்கு செல்வார்?? அந்த குழந்தை இவர் செல்லும்வரை விழித்திருக்குமா?? காலையில் அந்த குழந்தை பள்ளிக்குச் செல்லுமுன் இவர் விழித்துவிடுவாரா???
என்னென்னவோ எண்ணங்கள் என்னைச் சுற்றின..
இறங்கி, "தாங்க்ஸ்ண்ணே" என்று அனுப்பிவிட்டு பார்த்தேன், இருபத்தி நாலாவது ரைடை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் சென்றுக்கொண்டிருந்தது அந்த வண்டி;
நாலாவது ரைடின் போதே மீண்டும் போன் வரலாம்,
எங்க இருக்கீங்க டேடி!!!
-தமிழ்மறவோன்

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்